இராகவன் கருப்பையா – உலகை நாசப்படுத்திய கோறனி நச்சிலைப் போன்ற ஒரு பெருந்தொற்று மீண்டும் ஏற்படுமாயின் அதனை எதிர் கொள்வதற்கு நமது அரசாங்கம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை உலுக்கிய அக்கிருமியின் கொடூரத்தால் நம் நாட்டில் சுமார் 37,000 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
உலகலாவிய நிலையில் ஏறத்தாழ 6.8 மில்லியன் பேர் இந்நோயினால் இதுவரையில் மடிந்துள்ளனர். இருப்பினும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மரணங்கள், மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பார்த்தால் சற்று அதிகம்தான்.
அனைத்துலக ரீதியில் கிட்டதட்ட எல்லா நாடுகளையும் ஒருசேரத் தாக்கிய இந்நோயை எதிர்கொள்வதற்கு அந்த சமயத்தில் மலேசியா உள்பட எந்த நாடுமே தயாராய் இருக்கவில்லை.
ஆனால் நம் நாட்டை பொருத்த வரையில் நிலைமை மோசமானதற்கு நாம் தயாராக இல்லை என்பது ஒரு புறமிருக்க அந்த சமயத்தில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் நாடு அவதிப்பட்டதும் மற்றொரு காரணம் என்பதை எல்லாரும் அறிவர்.
கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றி பிரதமர் பதவியில் அமர்ந்த அப்போதைய உள்துறை அமைச்சர் முஹிடின், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அரியணையில் இருந்த அந்த 17 மாதங்களும் தனது பதவியைத் தற்காப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியதை நாம் இன்னும் மறக்கவில்லை.
அவசர அவசரமாக அமைச்சரவை அமைத்து தகுதியும் திறமையும் இல்லாத பலருக்கு அவர் அமைச்சர் பதவிகளைக் கொடுத்ததால் நாடு பெரும் அவதிக்குள்ளானது. உருப்படி இல்லாத ஒரு சுகாதார அமைச்சரால் நிலைமை மேலும் மோசமானதும் எல்லாருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நாடலாவிய நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகளும் இதர வசதிகளும் பற்றாமால் கொத்துக் கொத்தாக மக்கள் பரிதாபமாக மடிந்தது நாட்டின் வரலாற்றில் கரை படிந்த ஒரு அத்தியாயம் என்பது குறிப்பிடத்தக்கது. மரணமடைந்தோரை கிடத்தி வைக்க சவக்கிடங்கில் கூட இடம் போதாமல் கொள்கலன்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறைந்த பட்சம் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலாவது போதுமான அளவு ‘வெண்டிலேட்டர்’ கருவிகள் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும்.
நோய் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டு மொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த ‘வெண்டிலேட்டர்’. நோயாளி தனக்குப் பீடித்துள்ள தொற்று நோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தக் கருவி அவகாசம் தருகிறது.
மிகவும் அத்தியாவசியமான இத்தகைய செயற்கை சுவாசக் கருவிகள் நமது மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாததால் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் காத்திருந்த வேளைகளிலேயே நிறைய பேர் இறக்க நேரிட்ட அவலம் நம் நாட்டில் நிகழ்ந்தது.
இந்த காலக்கட்டத்தில் அரசாங்கம் கொள்முதல் செய்த 136 வெண்டிலேட்டர்களில் 28 கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடிந்தது எனும் உண்மை சமீபத்தில் அம்பலமானதும் வருந்தத்தக்க ஒன்று. மற்றவை எல்லாம் பழுதானவை என்று கூறப்படுகிறது.
சிறுபான்மை அரசாங்கத்தில் தொத்திக் கொண்டிருந்த தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்கொள்ளப்படக் கூடும் எனும் பயத்தில், நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதற்காக முஹிடின் அவசரகாலத்தை பிரகடணப்படுத்தியிருந்ததால், அந்தக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு முறையானப் பத்திரங்கள் தயார் செய்யப்படவில்லை.
இதர 108 கருவிகளும் முறையான செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். நோயாளிகளின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாமல் ஊழல் புரிந்த அந்த சுயநல மட்டிகள் இன்று வரையிலும் தண்டிக்கப்படவில்லை என்பது வேடிக்கையான, வேதனையான ஒன்று.
கூச்சிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் மட்டுமே இது குறித்து கேள்வி எழுப்பினார். இருந்த போதிலும் அடுத்த முறை இப்படிப்பட்டத் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறிய சுகாதார அமைச்சர் ஸலிஹா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்து கருத்துரைக்காமல் நழுவிக் கொண்டார்.
எனவே 1918ஆம் ஆண்டிலும் பிறகு 2020ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட பெருந் தொற்றைப் போலதொரு பேரிடர் மீண்டும் நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லாத பட்சத்தில், அலட்சியப் போக்கை கைவிட்டு, எந்நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்வது அவசியமாகும்.