கடந்த 14-12-2111-ல், FMT என்ற செய்தி அகப்பக்கத்தில் வெளியான தும்போக் தோட்டத்தைப் பற்றிய விபரத்தை ஞானலிங்கம் மறுத்ததை எதிர்த்து மலேசிய சோசியலிச கட்சி (PSM) யின் பொதுச் செயலாளர் சு. அருட்செல்வன் அவர்களின் கருத்துகள் கீழ்வறுமாறு:
ஞானலிங்கம் எழுப்பிய சில விஷயங்களுக்கு PSM பொதுச்செயலாளர் அருட்செல்வன் அவர்களின் பதில் இவைதான்:
இங்கு மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால் மைக்கா ஹோல்டிங்ஸ் 2008-ல் தும்போக் தோட்ட மக்களுடன் வீட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அந்த ஒப்பந்தப்படி 2008-லிருந்து 2010-க்குள் வீடுகள் கட்டி முடிப்பதாக வாக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு, ஜி-தீம் என்ற நிறுவனம் மைக்கா ஹோல்டிங்-சின் சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றியது. அதில் தும்போக் தோட்டமும் அடங்கும். ஒப்பந்தத்தின் படி, 2010-க்குள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இன்று தண்ணீர் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்காது. இதில் உண்மையான பிரச்னை என்னவென்றால், அன்று மைக்கா ஹோல்டிங்-சும் சரி, இன்று ஜி-தீமும் சரி, இருவரும் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. கொடுத்த வாக்குறிதியை செய்யாமல் தும்போக் தோட்டத்தில் தற்போது மீதமிருக்கின்ற 12 குடும்பங்களை RM25,000 வெள்ளித் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறு வற்புறுத்துகின்றனர்.
தண்ணீர் துண்டிக்கப்படும் செயல்களால் மக்களை பயமுறுத்தி கட்டாயமாக வெளியேற்றுவதற்கு நடக்கும் சதியாகும். இது மனித குலத்திற்கு எதிராக நடக்கும் கொடுமையாகும். இது 12 முன்னால் தோட்ட தொழிலாளர்களுக்கும் மலேசியாவில் பணக்கார பட்டியலில் இருக்கும் ஒருவருக்கும் நடக்கின்ற போராட்டமாகும். எது எப்படி இருப்பினும், ஏழை மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்னையை முடித்து வைப்பதுதான் நமது நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்.
தண்ணீர் துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஜி-தீம்- க்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் உறுதி கூறுகின்றனர்.
– ஜி-தீம், மைக்கா ஹோல்டிங்-சிடமிருந்து தோட்டத்தை கைப்பற்றிய போதே, அவர்களிடமிருந்து அனைத்து சொத்துக்களுடன் கூடிய கடமைகளையும் ஒருசேர எடுத்துக் கொண்டதாகத்தான் அர்த்தம். ஆக, தும்போக் தோட்ட மக்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது ஜீ-தீம்-மின் கடமையாகும். நிலம் விற்கப்பட்டு கைமாறும் போது, புதியதாக எடுக்கும் உரிமையாளறோ அல்லது மேம்பாட்டாளறோ தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்னை தீரும் வரை அவர்களுக்குத் தேவையான எல்லா அடைப்படை வசதிகளும் செய்துக் கொடுக்க வேண்டும். இது கால காலமாக நடந்துவரும் வழக்கமாகும்.
– தொழிலாளர் அலுவலகத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், ஜீ-தீம் மீதமுள்ள தண்ணீர் கட்ட வேண்டும் என தொழிலாளர் அலுவலக அதிகாரி அறிவுரைக் கூறினார். ஆனால், ஜீ-தீம் இதை செய்ய மறுத்தது. கூட்டத்திற்கு வந்திருந்த ஜீ-தீம்-மின் பிரதிநிதியான தமிழ்செல்வம், அவர்களால் அந்த பணத்தைச் செலுத்த முடியும். ஆனால் மக்கள் தங்கள் நிலத்தின் மேல் போட்டிருக்கும் தடை உத்தரவை (கேவியட்) நீக்குமாறு கேட்டுக் கொண்டார். மக்கள் தங்களின் வீட்டுப் பிரச்னைத் தீரும் வரை, நிலம் யாருக்கும் விற்கப்படாமல் காப்பாற்றவே இந்த தடை உத்தரவை போட்டனர். ஆனால், ஜீ-தீம்-மோ தண்ணீரைக் காரணமாக வைத்து தும்போக் நிலத்தை விற்க முயற்சித்து வருகின்றனர்.
-“நான் ஜீ-தீம்-க்கு இந்நிலத்தை விற்பதற்கு முன், அனைத்துக் கட்டணத்தையும் தவறாது கட்டி வந்தேன்” என்று முன்னால் மைக்கா ஹோல்டிங்ஸ் உரிமையாளர் வேல்பாரி கூறினார். அவர் இதைக் கூறுகையில், ஜி-தீம்-தான் இந்த முழு தண்ணீர் கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்கிறார்.
தொழிலாளர்கள் இலவசக் குடிநீர் மற்றும் மின்சார வசதியை அனுபவித்து வருக்கின்றனர். ஜீ-தீம்-க்கும் தண்ணீர் மீட்டருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தண்ணீர் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் மக்கள் கட்டணத்தை செலுத்தாததுதான். மொத்தம் கட்ட வேண்டிய தொகை RM16,000 வெள்ளியாகும்.
-குறைந்தபட்ச வீட்டுரிமை மற்றும் அடிப்படை வசதிகள் சட்டம் 1990-ன் கீழ், எந்த ஒரு தோட்ட உரிமையாளரும் மக்களுக்கு தேவையான இலவச தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
-எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒரு தோட்டம் விற்கப்பட்டாளோ அல்லது மேம்பாட்டிற்கு சென்றாளோ, சம்பந்தபட்ட மேம்பாட்டாளர் அல்லது முன்னால் தோட்ட உரிமையாளர் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்னை முடியும் வரை அவர்களின் கடமைகளைச் சரிவரச் செய்து வர வேண்டும். இதுதான் இன்றைய நடமுறையும் கூட. இதை நாம் மற்ற தோட்டங்களிலும் பார்க்க முடிகிறது. சிலாங்கூர் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், விற்கப்படும் தோட்டத்தின் வீட்டு பிரச்னைகள் முடிவடையும் வரை அந்நிலத்தில் மேம்பாட்டு வேலைகள் நடக்காமல் மாநில அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். மனிதவள அமைச்சும் கடந்த 1995 முதல் இதே நிலைப்பாடைத்தான் கொண்டிருந்தது.
-சபாஸ்-க்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக சபாஸ் உடன் நடந்தக் கூட்டங்களில், ஜீ-தீம் பணத்தை செலுத்தினால் நாங்கள் எந்நேரமும் தண்ணீர் சேவையை திறந்துவிட தயார் என்று அவர்கள் உறுதி கூறினர். சபாஸ்-க்கு தேவை பணம் மட்டுமே. ஆகையால், மைக்கா ஹோல்டிங்சிடமிருந்து தும்போக் நிலத்தைக் கைப்பற்றிய ஜீ-தீம் தொழிலாளர் அலுவலகத்தின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டனர்.
-மைக்கா ஹோல்டிங்ஸ்-க்கும் தேசிய தோட்ட தொழிற்சங்கமும் போட்ட ஒப்பந்தத்தின்படி, தும்போக் மக்களின் வீட்டுப் பிரச்னை தீரும் வரை அத்தோட்டத்தில் அவர்கள் தங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு RM25 வெள்ளி உதவிப் பணம் (சப்சிடி) கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். தற்போது, மாநில அரசாங்கம் 10 கியூபிக் மீட்டர் இலவச தண்ணீரையும் (அதாவது RM11.40) கொடுக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், தோட்ட மக்களுக்கு முழுமையாக இலவச தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆக, இது அவர்களின் உரிமையாகும். எனவே, மக்கள் கட்டணத்தைச் செலுத்தாததை ஒரு கேள்வியாகவே கொண்டு வர முடியாது.
-கடந்த 6-12-2011-ல், கிள்ளான் தொழிலாளர் அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில், இதுவரை மொத்தம் செலுத்தப்படாத தண்ணீர் கட்டணம் RM4500 என சபாஸ் கூறினர். அதில் RM2000 வெள்ளியை ஜீ-தீம் கட்டினாலே தண்ணீர் சேவையை திறந்து விட்டிடுவோம் என சபாஸ் கூறினர். ஆனால், இந்த தொகையைக் கூட ஜி-தீம் மறுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு அநியாயமான நிபந்தனைகளைக் கூறிக் கொண்டிருந்தது. நாட்டிலுள்ள பணக்காரர்களில் ஒருவரான ஞானலிங்கம் இந்தத் தொகையைக் கூட செலுத்த முடியாமல், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்க நினைக்கிறார். இருந்த போதிலும், தண்ணீர் கணக்கில் எப்படி RM16,000 வெள்ளி வந்தது என எனக்கு இதுநாள் வரை தெரியவில்லை. இதற்கு தொழிலாளர் அலுவலகம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
தும்போக் தோட்டத்திலுள்ள 22 தொழிலாளர்கள் மட்டுமே வீடமைப்பு திட்டத்தை ஆதரித்து, அவர்களின் சேவை காலப் பணமான RM201,000 வெள்ளி பணத்தை முன் பணமாக மைக்கா ஹோல்டிங்-சிடம் கொடுத்து வைத்திருந்தனர். ஞானலிங்கம் கூறுகையில், “மைக்கா ஹோல்டிங்ஸ் மக்களுக்கு நிலம் கொடுப்பதாக கூறினர், ஆனால் அதை மக்கள் நிராகாரித்தனர்” என்றார். 2008-ல் தமிழ்ப்பள்ளி பக்கத்தில் நிலம் ஒன்றை ஒதுக்கிக் கொடுத்தோம், ஆனால் மக்களோ அது பன்றிப் பண்ணை பக்கத்தில் இருப்பதாக கூறி நிராகாரித்தனர். இதைத் தொடர்ந்து 3.88 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்தோம், மக்கள் இதையும் நிராகாரித்தனர்” என்று கூறினார்.
– இவை எல்லாம் பொய். மக்களுக்கு சில தேர்வுகள் பரிந்துரைக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எந்தத் தேர்வுகளும் தொழிலாளர்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை. மாறாக, இதில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே முடிவெடுத்து வந்தனர். இவ்வனைத்து தேர்வுகளையும் ஜி-தீம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தால், நமக்கும் நம்பிக்கை இருந்திருக்கும்.
– ஆனால், இந்த விஷயத்தில் நாம் உண்மையான சூழ்நிலையை மறந்து விடக்கூடாது. ஜி-தீம்-மின் ஒரே முக்கிய நோக்கம் தும்போக் தோட்ட மக்களை கட்டாயமாக வெளியேற்றி அவர்களுக்கு RM25,000 வெள்ளியை கொடுப்பதே ஆகும். இதற்காக ஜீ-தீம் தொழிலாளர்களை பல முறை கொடுப்பதை எடுத்துக் கொண்டு செல்லுமாறு பயமுறுத்தி மிரட்டியும் உள்ளது. குண்டர் கும்பல்கள் மூலமாகவும் மக்களை பல முறை பயமுறுத்தியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட ஜீ-தீம் பிரதிநிதி ஒருவர் “மின்சார வசதியை துண்டித்து விட்டு வீட்டை உடைத்து விடுவோம்” என்று பயமுறுத்தியுள்ளார். அச்சம்பவங்களுக்கு எதிராக மக்கள் காவல்துறைப் புகாரும் செய்துள்ளனர்.
தோட்ட மக்கள் வீட்டுக்காக போராடுவதைவிட கையில் பணத்தை எடுத்துக் கொண்டு போகத்தான் ஆர்வமாக உள்ளனர் என்று ஞானலிங்கம் கூறினார். “அத்தோட்டத்தில் இருக்கும் 22 குடும்பத்தில் 16 குடும்பத்திற்கு தோட்டத்தின் வெளியே வீடு இருப்பதால் அவர்கள் நிலத்தின் மேல் ஆர்வம் காட்டவில்லை”. “மீதமுள்ள குடும்பங்கள் சொந்த வீடு வாங்க வசதியில்லாமையால் அங்கேயே தங்கினர்” என்றார் போட்கிள்ளானிலுள்ள வெஸ்ட்போர்ட் தலைவர் ஞானலிங்கம்.
தோட்டத்தை வாங்கியவுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு RM25,000 வெள்ளி வீட்டிற்காகவும், அவர்களின் வேலை சேவை கால தொகை மொத்தமாக RM201 000 வெள்ளியையும் கொடுப்பதாக ஜீ-தீம் கூறியது. அங்கிருந்த 22 குடும்பத்தில் 14 குடும்பம் இதை ஏற்றுக் கொண்டது.
– இப்பொழுது தோட்டத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் அனைத்து வசதிகளும், முன்னதாகவே RM25 000 வெள்ளியை எடுத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறிய தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜி-தீம் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். இதை இப்போது ஜீ-தீம் மறுப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
– மீதமுள்ள 12 குடும்பங்களை பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறச் சொல்லி பயங்கர அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முன்பு வெளியேறிய பலருக்கு அப்பொழுது எந்தவொரு தேர்வும் இல்லாதலால் வெளியாகி இருக்கிறார்கள்.
– தோட்டத்திலுள்ள பலருக்கு வெளியே வீடிருந்தாலும், இந்தக் காரணத்தைக் காட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வீடு கொடுக்காமல் இருப்பது சரியில்லை. தொழிலாளர்கள் சக்கையாக பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுப் பழம் அல்ல, அவர்கள் இம்மண்ணின் முன்னோடிகள், இம்மண்ணுக்கு இலாபம் ஈட்டித் தந்தவர்கள். உண்மையில், இத்தோட்ட மக்கள் 4 தலைமுறையாக செய்த தியாகத்திற்கு டத்தோ ஞானலிங்கம் அவர்கள் தோட்ட மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். அதுவே இவர்கள் செய்த தியாகத்திற்கு சரியான பலனாகும்.
– பிரச்னைகளை தீர்க்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது பலி சுமத்தி விஷயத்தை திசை திருப்புவது எவ்வகையில் நியாயமாகும்? அது ஒரு நன்னெறி அல்லாத செயல்.
எது எப்படியோ, ஞானலிங்கம் கூறியதில் ஒரு விஷயம் மட்டும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அதாவது ஜி-தீம்-தான் இந்த தோட்டத்தை வாங்கியுள்ளனர். நிலம் மட்டும் வேண்டும்; ஆனால் பிரச்னைகளை தீர்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில், டாக்டர் சேவியருடன் நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில், பெரும்பான்மையானோர் கொடுக்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக் கொண்டதாகவும் ஞானலிங்கம் கூறுகிறார். கடந்த 6-12011-ல் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்னை தீர்வுக்கான எவ்வித உடன்பாட்டிற்கும் வராததிற்கு ஞானலிங்கம் ஜெரிட் அமைப்பின் மேல் பலி சுமத்துகிறார்.
– நிலத்தைக் கொடுத்தால் வீடு கட்டிக் கொடுப்போம் என்று மாநில அரசாங்கம் கூறிய பரிந்துரையை ஞானலிங்கம் நிராகரித்ததை வெளியே சொல்ல மறுக்கின்றார்.
– ஜெரிட் அமைப்பின் மீது எவ்வித காரணத்திற்கும் பலி சுமத்த முடியாது. ஏனென்றால், ஜீ-தீம் பிரதிநிதியான தமிழ் செல்வம் (முன்னால் போலீஸ்காரர்) கூட்டம் முடியும் முன்பே அறையை விட்டு வெளியேறினார். மக்கள் தர உத்தரவை எடுக்காவிட்டால் தன்ணீர் கட்டணத்தைச் செலுத்த மாட்டோம் என மிகவும் திமிராக கூறி கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
தும்போக் நிலத்தை வாங்குவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்த தடை உத்தரவால் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று தமிழ் செல்வம் கூறினார். கூட்டத்தின் போது, பல முறை தமிழ் செல்வம், ஜீ-தீம் என்ற ஒரு அமைப்பு இல்லை என்றும் இந்த பிரச்னையில் அவர்களுக்கு சம்பந்தம் ஏதும் இல்லை மற்றும் தாம் ஜீ-தீம்-மை பிரதிநிதிக்கவில்லை என்று பல முறை கூறினார். இந்த விஷயத்தை கூட்டத்தில் கலந்துக் கொண்ட தொழிலாளர் அலுவலகத்துடன் சரி பார்த்தும் கொள்ளலாம். தாம் ஜீ-தீம் பிரதிநிதி இல்லை என்று கூறுபவரிடம், மேலும் கூட்டத்தின் பாதியில் எழுந்து சென்றவரிடம் ஒரு அரசாங்க சார்பற்ற இயக்கம் எப்படி பேச்சுவார்த்தை நடந்துவது. அவரின் போக்கு சரியில்லை இதனால் தவறான கண்ணோட்டம் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது; இந்த பிரச்னையை நாம் தீர்க்க வேண்டும் என்று அவரிடம் பல முறை எடுத்துக் கூறியும், அவர் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் “என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு பயமில்லை” என்று மக்களுக்கு சவால் விடுத்தார்.
எங்களுக்கு தும்போக் தோட்டத்தின் அனைத்து பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்குச் சேர வேண்டியவை கண்டிப்பாக போய்ச் சேர வேண்டும். ஏழை மக்களை ஏழம் விடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பேச்சுவார்த்தை நடத்த சரியான ஒரு பிரதிநிதியை ஜி-தீம் அனுப்பி வைத்து, நடந்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சு. அருட்செல்வன்
மலேசிய சோசியலிச கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும்
ஜெரிட்டை தோற்றுவித்தவர்களில் ஒருவர்