தையல் தொழில் செய்து குடும்பத்தை உயர்த்தினார் கமலவாணி சன்முகம்

அன்னையர் தின சிறப்புக் கட்டுரை – இராகவன் கருப்பையா – “பெண் பிள்ளைகளை ஏன் அதிகம் படிக்க வைக்கிறீர்கள், அவர்களுடைய உயர் கல்விக்கு செலவிடும் பணமெல்லாம் வீனாகத்தான் போகும்” என்று நெருங்கிய உறவினர்களும் சில குடும்ப நண்பர்களும் கூறியதுதான் தமக்கு பெரும் உந்துதலை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் கூலிம், கெடாவைச் சேர்ந்த கமலவாணி சன்முகம்.

அவர்களுடைய எதிர்மறையான கருத்துகளினால் சற்று கலக்கமடைநத போதிலும் அதனையே ஒரு தன்முனைப்பாக எடுத்துக் கொண்டு தமது மூன்று மகள்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ததாக கூறும் அவர் தமது தையல் தொழிலே அதற்கெல்லாம் பிரதானம் என்று குறிப்பிட்டார்.

ஒரு பேருந்து நிறுவனத்தில பணிபுரிந்த தமது கணவர் சன்முகத்தின் ஊதியம் போதாத காரணத்தினால் இரவு பகலாக தையல் தொழிலை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறும் கமலவாணியின் மூன்று பிள்ளைகளும் தற்போது வாழ்க்கையில் உயர் நிலையில் உள்ளனர்.

மூத்த மகள் கலையரசியும் இரண்டாவது புதல்வி நந்தினியும் மருத்துவர்களாக இருக்கும் வேளையில் கடைசி மகள் கயல்விழி ஒரு பொறியியல் வல்லுநராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தில் தமது கணவர் சுய தொழில் ஒன்றைத் தொடக்கியதைத் தொடர்ந்து கடும்ப சூழல் மேம்பாடு கண்டது எனும் போதிலும் குடும்பத்திற்கு பல நிலைகளிலும் பேருதவியாக இருந்து வரும் தமது தையல் தொழிலை அந்தத் தாய் இன்னும் கைவிடவில்லை.

கெடா, சுங்கை தோ பவாங் தோட்டத்தில் செந்தில் வேலு – சின்னம்மா தம்பதிகளின் 6-ஆவது பிள்ளையாக பிறந்த கமலவாணி அதே தோட்டத்தில் உள்ள தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வியையும் பீடோங்கில் இடைநிலைக் கல்வியையும் முடித்தார்.

அதன் பிறகு முறையாக தையல் தொழிலை கற்ற போதிலும் அதனை ஒரு முழு நேரத் தொழிலாகவோ பகுதி நேரத்திலோ அவர் மேற்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருந்த தமது சகோதரரின் ஆலோசனையின் பேரில் வேலை தேடி தலைநகருக்கு வந்துவிட்டார்.

கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு தமிழ் ஓசை நாளிதழில் பிழை திருத்தும் பகுதியிலும் பிறகு பக்க வடிவமைப்பு பிரிவிலும் பணியாற்றிய கமலவாணி 1987ஆம் ஆண்டில் மீண்டும் கெடா திரும்பி சுயமாக தையல் தொழிலைத் தொடங்கினார்.

ஒரு நகைக் கடையில் சிறிய பகுதியை வாடகைக்கு எடுத்து அந்த இடத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு தமது தையல் தொழிலை மேற்கொண்ட அவர் திருமணத்திற்கு பின் இடமாற்றம் செய்து அத்தொழிலை விரிவுபடுத்தினார்.

முன்று பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்களுடைய கல்விக்கு அதிகமான பணம் தேவைப்பட்டதால்  தமது கணவரின் உழைப்புக்கு ஈடாக தாமும் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருந்தது என்று கமலவாணி மேலும் குறிப்பிட்டார்.

பெண் பிள்ளைகள் உயர் கல்வி பெற வேண்டிய அவசியமில்லை என்று வீண் விதண்டாவாதம் பேசியோருக்கு எதிராக வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் எனும் வேட்கையில் உழைத்ததால் தமது குடும்பம் இப்போது சிறப்பானதொரு நிலையை அடைந்துள்ளது என்றார் அவர்.

தற்போது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது அவர்களுடைய வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்தது கடுகளவும் வீண் போகவில்லை என அவர் பெருமிதம் கொள்கிறார்.

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என அவருடைய பிள்ளைகளின் கல்வியை முடக்க நினைத்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்து நிற்கும் அளவுக்கு தமது குடும்பத்தை உயர்த்தியுள்ள கமலவாணி இந்த அன்னையர் தினம் மட்டுமின்றி எப்போதுமே போற்றப்பட வேண்டியவர்.