தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினை: சட்டமா, அரசியலா?

கி.சீலதாஸ் – அரசமைப்புச் சட்டத்தின் ஒரு சில பகுதிகளை மட்டும் எடுத்து வியாக்கியானம் செய்வதானது, அந்தச் சட்டத்தின் முழுமையான அடிப்படை நோக்கம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள மறுப்பவர்களின் தவறான, அரசமைப்புச் சட்டத்திற்கும் வரலாற்றுக்கும் உரிய மரியாதையைத் தர மறுக்கும் குணமாகும்.

தாய்மொழிப் பள்ளிகளான சீனம், தமிழ் கற்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் (மாப்பிம்), மலேசிய எழுத்தாளர் சங்க கூட்டமைப்பு (கபேனா), இக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) மற்றும் மலேசிய ஆசிரியர்கள் சம்மேளனம் (ஐ.குரு) ஆகிய அமைப்புகள் சீனம், தமிழ் ஆகிய மொழிகளைப் பயன்படுத்தும் தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வாதத் தொகுப்புக்களைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி நஸ்லான் கஸாலி, தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல எனத் தீர்ப்பளித்து, மனுதாரர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இரண்டு சுற்றில் வெற்றி காணாத தரப்பினர் மலேசியாவின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி பெற்றாக வேண்டும். அதாவது, இந்த வழக்கில் தீர்க்கப்படாத அல்லது இது ஒரு புதினமான சட்டச் சிக்கல் என்று கூட்டரசு நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தினால் அன்றி நேரிடையாக மேல்முறையீடு செய்ய இயலாது.

ஆனால், பொதுவாகவே இது ஒரு சட்டப் பிரச்சினையாகக் கூட்டரசு நீதிமன்றம் கருதுமானால் ஒரு தெளிவு ஏற்படுத்தும் பொருட்டு மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது வியக்கத்தக்க அணுகுமுறை என்று சொல்ல முடியாது.

அதே சமயத்தில், இந்த வழக்கில் உண்மையான சட்டச் சிக்கல் இருக்கிறதா? அது என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கூட்டரசு நீதிமன்றமானது மேல்முறையீட்டுக்கான அனுமதி கோருவர் எழுப்பப் போகும் கேள்வியின் தரத்தை மனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த வழக்கு கல்வியை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்பட்டதா அல்லது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டதா? அப்படியானால் இது கல்வி பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?

இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நீதிமன்றத்தின் பொறுப்பா?

அடுத்து, சீன, தமிழ் தாய்மொழிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனுமதிக்கப்பட்டால் தாய்மொழிப் பள்ளிகள் அடியோடு மூடப்பட வேண்டும் என்றுதானே சொல்லுகிறார்கள்.

அல்லது, தாய்மொழிப் பள்ளிகள் இயங்கலாம். ஆனால், அரசு அதற்கு எந்த ஒரு ஆதரவும் வழங்கக்கூடாது என்கிறார்களா? இது கல்வி பிரச்சினையா, மொழி பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?

சட்டச் சிக்கல் என்றால் அதற்குத் தீர்வு காண்பதில் நீதிமன்றம், குறிப்பாக கூட்டரசு நீதிமன்றம் கரிசனமும் ஆர்வமும் காட்டலாம். ஆனால், இது ஓர் அரசியல் பிரச்சினை என்றால் நீதித்துறை அரசியல் நோக்கங்களுக்கு இடமளிக்க வேண்டுமா? அரசியல் நோக்கமே இந்த மனுதாரர்களின் நோக்கம் எனின் நீதிமன்றம் அதற்குச் செவிமடுக்க வேண்டுமா?

இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கூறியதைக் கவனிக்கும் போது அரசமைப்புச் சட்டம் வடிவம் பெற நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் அரசியல் நோக்கங்கள் இடம் பெற்றிருக்கலாம்.

ஆனால், அரசமைப்புச் சட்டம் அரசியலை மட்டும் கருதாமல் வரலாற்று உண்மைகளையும் கவனத்திற் கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமல்ல மற்ற கல்வி சம்பந்தப்பட்ட சட்டங்களிலும் தாய்மொழிப் பள்ளிகளுக்குப் போதுமான பாதுகாப்பைத் தருகிறது. அந்த வகையில் பார்க்கும் போது அரசமைப்புச் சட்டம் வெறும் அரசியல் நோக்கத்தைக் கொண்டிராமல் வரலாறு படைத்த பாதுகாப்புகளுக்கு இடமளிக்கிறது என்பது தெளிவு.

அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது எத்தகைய தாய்மொழிப் பள்ளிக்குப் பாதுகாப்புகள் இருந்தன என்பதை ஆழமாகச் சிந்தித்தப் பிறகு தான் அவற்றின் தொடர் வாழ்வு மலாயாவில், பின்னர் மலேசியாவில் நீடிக்கிறது. அது அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பலமான தூண்களாக விளங்குகின்றன. அவற்றை அகற்றினால் நல்லிணக்கம் இருக்காது என்பது வெள்ளிடைமலை.

இங்கே ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். மெர்டேக்கா பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது சீனமும் தமிழும் அதிகார மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றம் மாநிலச் சட்டமன்றங்களில் சீனமும் தமிழும் பேசுவதற்கு உரிமை இருக்க வேண்டும் என மலாயா சீன சங்கமும் மலாயா இந்தியர் காங்கிரஸும் முன்மொழிந்தன.

இது தீவிர மலாய் அரசியல்வாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனவே, ஒரு சமரசம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமரசம்தான் தாய்மொழிப் பள்ளிகளின் பாதுகாப்பும் அவற்றை நடுவண் அரசு ஏற்று நடத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனவே, தேசிய மாதிரி பள்ளிகள் உருவெடுக்க உதவியது. தாய்மொழிப் பள்ளிகள் வரலாறு மூலமாக அங்கீகாரம் பெற்றன.

அரசமைப்புச் சட்டத்தில் சீனம், தமிழ் மொழிகள் குறிப்பிடப்படவில்லை என்பதைப் பெரிதுப்படுத்தி பிரச்சினையைக் கிளப்புவதை விடுத்து நடுவண் அரசு தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கிய பாதுகாப்பைப் பாருங்கள். அவை ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

அவை ஏற்றுக்கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தால் பற்பல அரசியல் பிரச்சினைகள் எழுந்திருக்கலாம். அவை முதிர்வான அரசியல் நோக்கத்தாலும் நடவடிக்கையாலும் தவிர்க்கப்பட்டன. எனவே, கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டை செவிடுமடுக்க வேண்டுமா என்ற கேள்வியை அணுகும்போது இது கல்வியைச் சம்பந்தப்பட்டதா அல்லது அரசியலை முன்வைக்கும் பிரச்சினையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

நிரந்தரமற்ற அரசியல்வாதங்களுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை. சட்டத்துக்கு மட்டும்தான் இடம் உண்டு.

வேறு ஒரு வழியில் பார்க்கும் போது இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துவோரின் மனப்பாங்கு திருந்துவதாகவோ, உண்மையை உணர்ந்து நாட்டு நலனில் கரிசனம் கொண்டவர்களாகத் தெரியவில்லை.

ஒரு வேளை கூட்டரசு நீதிமன்றம் தான் இந்தக் குளறுபடியான நிலைக்கு முடிவு காண வேண்டும் என நினைத்தால் அதுவும் சரியானதுதான்! நீதிமன்றத்தில் அரசியலுக்கு இடமில்லை என்ற முடிவான தீர்ப்பைக் காணலாம்.