இராகவன் கருப்பையா — கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாடு தழுவிய நிலையில் மக்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீரின் உண்மையான சுயரூபம் சன்னம் சன்னமாக வெளிப்படத் தொடங்கி மக்களுக்குச் சற்றுக் கசப்பை ஏற்படுத்திய போதிலும் நாட்டின் மேகா ஊழல்களுக்குச் சாவு மணி அடிக்கப்படுகின்ற தோற்றம் நமது மகிழ்ச்சிக்கு வழிவகுத்தது.
ஆனால் ஆட்சியில் இருந்த உறுப்புக்குக் கட்சியான பெர்சத்துவின் தலைவர் முஹிடின் ‘கூட இருந்து கொண்டே குழி பறிப்பார்’ என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அப்போது. அந்தச் சமயத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அவர் திரைமறைவில் மேகா சதித் திட்டங்களை வகுத்து இந்நாட்டில் முன்னுதாரணம் இல்லாத ஒரு கீழறுப்பு வேலையை அரங்கேற்றியது வரலாறு.
கொல்லைப்புறமாக நுழைந்து 22 மாதங்களே ஆன நல்லாட்சியைக் கவிழ்த்துத் தனது பதவி வெறியை அவர் தீர்த்துக் கொண்ட அக்கிரமம் மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை. தரம் குன்றிய அவருடைய அமைச்சரவை நாட்டை எவ்வாறெல்லாம் நாசமாக்கியது என்பதும் நாம் அனுபவித்த ஒரு சோக அத்தியாயம்.
ஆனால் அந்தக் கரை படிந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 4 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் மீண்டும் கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றப் பல அரசியல்வாதிகள் சதித் திட்டம் தீட்டிவருவது மலேசிய அரசியலில் மிகவும் கேவலமான, அசிங்கமான, வெறுக்கத் தக்க ஒன்றுதான்.
கடந்த 2020ஆம் ஆண்டில் முஹிடினின் சதித் திட்டம் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ‘ஷெரட்டன்’ தங்கும் விடுதியில் அரங்கேறியதால் அதற்கு ‘ஷெரட்டன் நகர்வு’ எனும் அடையாளம் பிறந்ததைப் போல இம்முறை ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பிரதான நகரான துபாயில் அதே போன்ற நிகழ்வு நடந்ததாக நம்பப்படுவதால் அதற்கு ‘துபாய் நகர்வு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 3 முறை அரசாங்கம் மாறியதால் அரசியல்வாதிகள் மட்டும்தான் பயனடைந்தார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது மட்டுமின்றிப் பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இப்படிப்பட்ட சூழல் இனிமேலும் நிகழக்கூடாது எனும் நோக்கத்தில்தான் ‘கட்சி தாவல் எதிர்ப்புச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ‘அரசியல் தவளை’ளாக மாறி ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட சுயநல அரசியல்வாதிகளும் அச்சட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
தற்போது அந்தச் சட்டத்தைத் துச்சமென மதித்து, அதிலுள்ள குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் நலனைப் புறம் தள்ளி இந்த ‘துபாய் நகர்வு’ மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
ஆட்சிக் கவிழ்ப்பு என்பது ஜனநாயகத்திற்கு உட்பட்ட ஒன்றுதான், அதில் தவறே இல்லை என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் நியாயப்படுத்திக் கருத்துரைக்கும் அதே வேளையில், ‘துபாய் நகர்வு’ என்று எதுவுமே இல்லை என மறுத்து வருகின்றனர்.
எனினும் கெடா மாநில மந்திரி பெசார் சனுசி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டதைப் போல் தெரிகிறது. எது எப்படியாயினும், ‘நெருப்பு இல்லாமல் புகையாது’ என்பது மக்களுக்குத் தெரியாதா என்ன?
மக்களின் நலன் கருதியா இப்படிப்பட்ட சதிநாச வேலைகளைக் குறிப்பிட்ட அந்த அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர்? ஒருபோதும் இல்லை! ஆட்சியைக் கைப்பற்றினால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஊழல் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனும் ஒரு குருட்டுத் தைரியத்தில் பல அரசியல்வாதிகள் இருக்கக் கூடும்.
அது மட்டுமின்றி, அவர்களில் பலர் ஏற்கெனவே அரசாங்கப் பதவிகளில் அமர்ந்து சகலச் சுகப் போகங்களையும் அனுபவித்தவர்கள். எப்படியாவது கொல்லைப் புறமாக நுழைந்து மீண்டும் அந்நிலையை அடைந்துவிட வேண்டும் எனத் துடிக்கும் அவர்கள் ‘ருசி கண்டப் பூனைகள்’ அல்லவா!
அன்வார் ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் நோக்கத்திலான ‘துபாய் நகர்வு’க்கு மில்லியன்களைத் தாண்டிப் பில்லியன் கணக்கான ரிங்கிட் செவிடப்படுவதாவும் பேசப்படுவது மற்றொரு அதிர்ச்சித் தகவலாகும்.
அப்படி ஒன்று நடக்குமேயானால் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும், நெருங்கிய நட்புகளும் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள். வெகுசன மக்களின் துன்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.