சட்டம் இயற்றுவதிலும் வரம்பு உண்டு – கி. சீலதாஸ்

மலேசிய கூட்டரசின் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான் உயர்வானது. இதைத்தான் அச்சட்டத்தின் 4(1) ஆம் பிரிவு உறுதிப்படுத்துகிறது. 31.08.1957 தேதிக்குப் பிறகு இயற்றப்பட்ட எந்தச் சட்டமும் இந்த அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அமைந்திருந்தால் அவை செல்லாது. மேலே குறிப்பிட்டிருப்பது போல இந்த 4(1) ஆம் பிரிவு மிகவும் உயர்வானதாகும்.

வேறொரு வகையில் சொல்ல வேண்டுமானால், அரசமைப்புச் சட்டத்தை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. இதை எப்பொழுதும் மனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

.சட்டம் இயற்றும் அதிகாரம்

கூட்டரசு முழுவதும் அமலாக்கம் பெறும் பொருட்டு சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது. மாநிலங்கள் தங்களின் மாநிலங்களில் அமலாக்கும் சட்டத்தை இயற்ற அதிகாரம் பெற்றிருக்கின்றன.

இங்கே ஒரு முக்கியமான சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பற்றி கவனிக்க வேண்டும்.

இஸ்லாம்தான் கூட்டரசின் மதம் என்று அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதே மூச்சில் பிற மதங்கள் தங்களின் வழிபாடுகளைக் கூட்டரசின் எந்தப் பகுதியிலும் மேற்கொள்ள உரிமை உண்டு என்கிறது.

சுல்தான்களைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் சுல்தான்கள் தான் இஸ்லாத்தின் தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளார்கள்.

மலாக்கா, பினாங்கு, சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் அரசமைப்புச் சட்டம் மாமன்னர் (யாங் டி பெர்த்துவான் அகோங்) தான் அந்தந்த மாநிலத்தின் இஸ்லாத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் விதிகளை இயற்ற வேண்டும்.

கூட்டரசு பிரதேசங்களான கோலாலும்பூர், லபுவான் மற்றும் புத்ரா ஜெயா ஆகியவற்றின் இஸ்லாமியத் தலைவராக இயங்குவார் மாமன்னர். இந்தக் கூட்டரசு பிரதேசத்து இஸ்லாமிய விஷயங்களைக் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

இந்த வரலாற்றுப் பூர்வமாக இயங்கி வந்த ஒரு முறையை உறுதிப்படுத்துகிறது. அதாவது, பிரிட்டிஷாரின் அதிகாரம் இந்த வட்டாரத்தில் வேரூன்றி இருந்த காலகட்டத்தில் இஸ்லாம் குறித்த எல்லா விஷயங்களையும் சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அந்த முறையை அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு மறு உறுதிப்படுத்துகிறது.

குற்றவியல் சட்டம்

சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். பொதுவான குற்றவியல் சட்டம் எனின் அதை இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் மட்டும்தான் பெற்றிருக்கிறது.

 உதாரணத்திற்கு, கொலை, கொள்ளை, ஊழல் தொடர்பான வழக்குகள், கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களைத் தண்டிக்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது.

இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை மாநில அரசுகள் பெற்றிருக்கின்றன.

கூட்டரசும் மாநிலங்களும் எந்தெந்த துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன என்பதை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணை விளக்குகிறது.

இது கூட்டரசு அட்டவணை, மாநில அட்டவணை எனத் தெளிவுபடுத்துகிறது. இதன்றி கூட்டரசும் மாநிலமும் ஒருங்கிணைந்த அட்டவணையின் படி இணைந்து சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன.

ஆனால், பொது குற்றவியல் சட்டத்திற்குட்பட்ட குற்றங்களைப் பொது நீதிமன்றங்கள் தான் விசாரிக்க வேண்டும்.

ஓரினக் காதல் வழக்கு ஒன்று பொது உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்; எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 121 (1A) பிரிவின்படி இந்த வழக்கு ஷரியா நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தைப் பொது நீதிமன்றம் ஏற்க மறுத்தது அரசமைப்புச் சட்டத்தின் உயரிய நிலையை உறுதிப்படுத்தியது எனலாம்.

இது மலேசியர்களைத் திருப்திபடுத்தலாம்; மன ஆறுதல் தரலாம். ஆனால், தம் கட்சிக்காரரின் நலனைக் கருதி எந்தெந்த சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்த முடியுமோ அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது வழக்குரைஞரின் கடமையாக இருக்கலாம்.

அரசமைப்புச் சட்டம்தான் உயர்வானது

அந்தப் புனிதத் தன்மையைப் பயன்படுத்தும்போது நாட்டு நலன், மக்கள் நலன், அரசியல் யாவும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சமுதாயத்தில் மேலும் மேலும் பிரச்சனைகளை ஊக்குவிக்கும் முறையைக் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோருவதில் தவறு காண கூடாது.

9.2.2024 ஆம் நாள் மலேசியாவின் உச்ச நீதிமன்றம் மலேசியாவின் அரசமைப்புச் சட்டம்தான் உயர்வானது என்பதை உறுதிப்படுத்தியது.

வழக்குரைஞர் நிக் இலின் சுரீனாவும் அவர் மகள் துங்கு யாஸ்மின் நட்டாஷா துங்கு அப்துல் ரஹ்மான் கிளந்தான் அரசு இயற்றியுள்ள ஷரியா குற்றவியல் சட்டத்தில் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக இயற்றப்பட்டுள்ளன. எனவே, அவை செல்லாது என அறிவிக்க கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

கிளந்தான் அரசு இயற்றியுள்ள ஷரியா குற்றவியல் சட்டம்

ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட இந்த அமர்வு கிளந்தானின் ஷரியா குற்றவியல் சட்டத்தின் பதினாறு பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என எண்மர் தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மட்டும் வாதிகள் வழக்காடும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்று கூறினார். எனவே, எண்மரின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பாகும்.

இந்தத் தீர்ப்பைச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் இந்தத் தீர்ப்பைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்தத் தீர்ப்பு ஷரியாவுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. மாறாக, சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றமும் தங்களின் சட்டம் இயற்றும் அதிகார வரம்பைப் புரிந்திருக்க வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 4 (1) பிரிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதைத் தானே அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் பிரிவும் வலியுறுத்துகிறது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் வழங்கப்பட்ட தீர்ப்பையும் நீதிபதிகளையும் பொதுவாக குறை கூறுவது நியாயமல்ல.

பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இந்தத் தீர்ப்பை நேரடியாக குறிப்பிடாமல் சில விவேகமற்ற நீதிபதிகளின் மனநிலையும் அறிவாற்றலும் மலேசியாவின் முன்னாள் காலனித்துவவாதிகளின் மனோநிலையைக் கொண்டிருக்கிறது என்று கூறியிருப்பது அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.

பல அரசமைப்புச் சட்ட விற்பனர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் போது அதிலுள்ள நியாயத்தை ஏற்றுக் கொள்கின்றனர். முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீது முகம்மதும் இந்தத் தீர்ப்பில் இருக்கும் நியாயத்தை விளக்கியிருப்பதோடு இன்னும் சில முரணான சட்டங்கள் கிளாந்தான் ஷரியா சட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க வேண்டும்

அதுமட்டுமல்ல, சில மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க தங்களின் மாநிலச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கூறியிருப்பதானது தவறை ஏற்றுக்கொண்டு திருந்தும் மனப்பான்மையைக் காட்டுகிறது. இந்த நல்ல ஒழுக்கத்தை ஹாடி அவாங்கிடம் காண முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

ஹாடி அவாங் தனது அர்த்தமற்ற, நியாயமில்லா குற்றச்சாட்டானது மலேசிய நீதித்துறையையே களங்கப்படுத்தியிருப்பதைக் கவனிக்க வேண்டும். அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே கேள்வி! எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பும், அதன் பிரதிபலிப்பும் எதைக் காட்டுகிறது? ஆட்சியில் இருப்போர் தவறான முறையில் சட்டம் இயற்றுவதை  நியாயப்படுத்துகிறார்கள்.

இது தவறான போக்கு. சட்டம் இயற்றும் போது அது அரசமைப்புச் சட்டத்தோடு மோதவில்லை, இயற்றப்படும் மாநிலச் சட்டம் தனது அதிகார வரம்பை மீறவில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும் அல்லவா?

அதுவல்லவா நாணயமான, நியாயமான போக்கு! இதைப் புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகளின் கையில் அதிகாரம் குடியிருந்தால் ஹாடி போன்றோரின் தவறான கருத்துதான் பரவும். மக்களும் ஏமாந்து போவர். அரசியல்வாதிகளின் பிதற்றலைப் பற்றி மக்கள் அறிந்தால்தான் நாடு பாதுகாப்புடன் நீடிக்கும்.