இராகவன் கருப்பையா – கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15அவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய அரசாங்கம் ஏறத்தாழ 16 மாதங்கள் ஆட்சி புரிந்துள்ள நிலையில் இப்போதுதான் பிரதமர் அன்வாருக்கு சற்று மன நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம்.
ஏனெனில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர் தமது அமைச்சரவையை அமைத்த நாளிலிருந்து “அரசாங்கத்தை கவிழ்க்கப்போகிறோம், ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம்” என பெர்சத்துவும் பாஸ் கட்சியும் அனுதினமும் அவருக்கு சவால் விட்ட வண்ணமாகவே இருந்தன.
அதோடு நின்றுவிடாமல், தங்களுடைய குறுக்கு வழித்திட்டங்களுக்கு ‘துபாய் நகர்வு’, மற்றும் ‘லண்டன் நகர்வு’ போன்ற பெயர்களை சூட்டி எப்படியாவது கொல்லைப் புறமாக நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் வேட்கையில் மும்முரமாக செயல்பட்டு வந்ததும் எல்லாருக்கும் தெரியும்.
ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டில் ‘ஷெரட்டன் நகர்வின்’ வழி நல்லாட்சியைக் கவிழ்த்த பெர்சத்து தலைவர் முஹிடினுக்கு இது கைவந்த கலையென்பதால், தனக்கு போதிய அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி பதற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.
எனினும் கடந்த மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிய புதிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டினார்.
“யாரும் அனாவசியமாக நடப்பு அரசாங்கத்தை அசைக்கக் கூடாது” என்றும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்கும் படியும் அதிரடியாக அவர் செய்த ஒரு அறிவிப்பு எதிர்கட்சித் தலைவர்களின் பேராசைக்குரியத் திட்டங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.
எதிர்கட்சிகளின் மிரட்டல்களுக்கு அன்வார் வெளிப்படையாக தமது அச்சத்தை காட்டிக் கொள்ளவில்லை எனும் போதிலும் உள்ளூர அவருக்கு ஒரு வித பதற்றம் கண்டிப்பாக இருந்திருக்கும்.
ஆக அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு இதுபோன்ற இடையூறுகளோ மன உளைச்சலோ ஏதுமில்லாமல் நாட்டை நிம்மதியாகவும் ஆக்ககரமாகவும் நிர்வகிக்க இயலும் எனும் பட்சத்தில் “இனிமேலாவது அன்வாரின் பார்வை நம் சமூகத்தின் பக்கம் சற்று திரும்பாதா” எனும் ஏக்கம் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பி40 தரப்பினரின் அவலம், ரிங்கிட் நாணயத்தின் வீழ்ச்சி, ‘மித்ரா’வின் சுணக்கம் மற்றும் முடங்கிக் கிடக்கும் சீர்திருத்தங்கள், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இதுவரையில் அவரால் தீர்வு காண முடியாமல் இருந்ததற்கு எதிர்கட்சிகள் தூண்டிவிட்ட அரசியல் பதற்றம் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள அன்வார் நிறைவேற்றவில்லை என்ற குறைபாடுகள் நம் சமூகத்தினரிடையே பரவலாக நிலவுவதால் அவருக்கான நமது ஆதரவும் சரிந்துவிட்டது எனும் உண்மையையும் யாரும் மறுக்க முடியாது.
இதே போன்ற நிலையைத்தான் தனது 17 மாத கால ஆட்சியின் போது முஹிடின் எதிர்நோக்கியிருந்தார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த தனது பிரதமர் பதவி எந்நேரத்திலும் பறிபோய்விடும் எனும் அச்சத்தில் ஊண் உறக்கமின்றி காலத்தைக் கடத்திய அவரால் நாட்டை முறையாக வழி நடத்த இயலவில்லை.
அவசர காலத்தை பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தை பூட்டிப் போட்டது, தகுதியற்ற ஒரு சுகாதார அமைச்சரால் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பழுதடைந்த சுவாசக் கருவிகளை(வெண்டிலேட்டர்) கொள்முதல் செய்தது போன்ற குளறுபடிகளால் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் கோறனி நச்சிலின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எனினும் பதவியிழப்பை அவரால் தடுக்க இயலவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று பதவி துறந்து இஸ்மாயில் சப்ரிக்கு அவர் வழிவிட நேர்ந்தது.
ஆனால் அன்வாருக்கு அது போன்ற நிலை இல்லை. தக்க சமயத்தில் பேரரசரின் ஆதரவும் இருந்ததால், அவரின் நிலைபாடு வலுவடந்தது.
இனி அவர் கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். இந்தியர்களை, குறிப்பாக பி-40 மக்களின் மேம்பாட்டுக்கு போதுமான நிதி ஒதிக்கீடும், வியூகமான வகையில் செயலாக்கம் காண திட்டவரைவும், அவை இணைக்கபட்ட இலாக்காவுடன் மீளாய்வு அடிப்படையில் இயங்க வழியையும் வகுக்க வேண்டும்.