மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 1

கி. சீலதாஸ் – மலேசியா ஓர் இணையாட்சி நாடாகும். கூட்டரசு என்றும் சொல்லலாம். சுதந்திர நாடுகள் இணைந்து அமைத்த நாடு என்றும் சொல்லுவார்கள். அதில் தவறில்லை. ஒன்பது நிலப்பகுதிகளின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி 31.8.1957இல் மலாயா கூட்டரசில் இணைந்தார்கள்.

அதில் மலாக்காவும் பினாங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்விரு நிலப்பரப்புகளும் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்தமையால் அவற்றின் மீதான தனது உரிமையை, அதிகாரத்தை விட்டுக்கொடுத்தது பிரிட்டன். இந்தப் பதினோறு நிலப்பரப்புகளும் இணைந்து காணப்பட்டதே மலாயா கூட்டரசு.

மலாயா கூட்டரசு ஜனநாயக கோட்பாட்டுக்கு இணங்க செயல்படவும், நல்லாட்சி மலரவும் அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது. அந்தப் பணியை ஐக்கிய முடியாட்சியின் தலைசிறந்த நீதிபதிகளில் ஒருவராக ரீட் பிரபுவின் தலைமையின் கீழ் மலாயா கூட்டரசு அரசமைப்புச் சட்டக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இந்தியப் பிரதிநிதி ஒருவரும், பாகிஸ்தான் பிரதிநிதி ஒருவரும், ஆஸ்திரேலிய பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவில் மற்றுமொரு ஆங்கிலேயர் ஐவர் ஜென்னிங்ஸ் என்பவரும் நியமிக்கப்பட்டார்.

ஐவர் அரசமைப்புச் சட்டத்தில் நல்ல அனுபவம் மிக்கவர் என்றால் மிகையாகாது. இவர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு அரசமைப்புச் சட்டத்தைப் பயிற்பித்தவர் என்றும் சொல்லப்படுவதோடு அவரின் நண்பரும் கூட. இந்தக் குழுவில் மலாயாவைச் சார்ந்த எவரும் சேர்த்துக் கொள்ளப்படாதது ஆச்சரியமே.

ஐவர் ஜென்னிங் பற்றி குறிப்பிடும்போது சிலோனின் (இப்பொழுது ஸ்ரீலங்கா) அரசமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றவர். அதன் ஆயுள் நீடித்திருக்கும் என்பதில் கவனம் கொண்டிருந்தார் என்றும் அது பதினான்கு ஆண்டுகள் தான் உயிரோடு இயங்கியது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அது நீளமானது, இணங்காதது, அளவுக்கு அப்பாற்பட்ட சொற்கள் கொண்டது என்றது மட்டுமல்ல அது உண்மையிலேயே மேற்கத்திய அரசமைப்புச் சட்டத்தின் முறைகளைப் பொருட்காட்சியாகக் காட்டும் கிழக்குத் திசைவாசிகளின் முயற்சி என்றார்.

ஆனால், மலாயாவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்படும் போது எந்த நாட்டின் அரசமைப்புச் சட்டம் பின்பற்றத்தக்கது என்ற கேள்வி எழுந்தபோது இந்திய அரசமைப்புச் சட்டம் தான் பொருத்தமாகத் தென்பட்டது.

மதத்தைப் பொறுத்தவரையில் மலாயாவின் நிலை என்ன என்பதைத் துங்கு அப்துல் ரஹ்மானின் தலைமையில் இயங்கிய கூட்டணி மலாயா மதச் சார்பற்ற நாடு என்பதை முன்வைத்தது. இந்தக் கூட்டணியில் அம்னோ, மலாயா சீனர் சங்கம் மற்றும் மலாயா இந்தியர் காங்கிரஸ் அங்கம் பெற்றிருந்தன. எனவே, இஸ்லாம்தான் கூட்டரசின் மதம் என்று அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு சொன்ன போதிலும் மற்ற மதங்களும் இயங்குவதைத் தடுக்கவில்லை.

இதை விளக்கும்போது நாம் இந்தோனேஷியாவைப் பார்க்கிறோம். அங்கே உலகிலேயே மிக அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால், அது இஸ்லாமிய நாடு அல்ல. அது பல இனங்கள் இயங்குவதைத் தடுக்கவில்லை. உதாரணத்திற்கு, இந்தோனேஷியாவின் பாலியில் ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள். வேறு மதத்தினரும் அங்கு வாழ்கிறார்கள். இந்தோனேஷியா ஒரு மதச் சார்பற்ற நாடு என அறிவித்துவிட்டது.

(தொடரும்)