இராகவன் கருப்பையா – நம் நாட்டில் நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் நிறைய பேரை தேர்தலுக்குப் பின் காண்பது மிகவும் அரிதாகிவிடுகிறது எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே உள்ளது.
பல வேளைகளில் உறுதியளித்தபடி சேவை மையங்களுக்கு அவர்கள் வருவதில்லை. அவர்களுடைய ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருப்பார்கள். சேவை நாடிச் செல்வோரை இந்த ஊழியர்கள் நடத்தும் விதமும் காட்டும் பந்தாவும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
சில சமயங்களில் அந்த ஊழியர்கள் கூட அங்கு இருப்பதில்லை. அலுவலகம் பூட்டிக் கிடக்கும். நம்பிக்கையோடு வாக்களித்த தொகுதி மக்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்புவார்கள்.
அந்த அரசியல்வாதிகளின் அதிகாரத்துவ அலுவலகங்களுக்குச் சென்றாலும் அதே நிலைதான். பல வேளைகளில் அங்கேயும் அவர்கள் இருக்கமாட்டார்கள். தொலைபேசி அழைப்புகளையும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
‘வை பி செடாங் ஹடிரி மெஷுவாராட்'(மாண்புமிகு, கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்). ‘வை பி அடா குர்சுஸ்'(மாண்புமிகு, பயிலரங்கிற்குச் சென்றுள்ளார்). ‘வை பி மெங்ஹடிரி பெர்சிடாங்ஙான்'(மாண்புமிகு, மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்). இப்படியான பதில்கள்தான் அந்த அலுவலகங்களில் நமக்குக் கிடைக்கும்.
ஆனால் பல சமயங்களில் இதுவெல்லாமே மக்களை திசை திருப்புவதற்கென்ற திரிக்கப்பட்ட வெறும் போலியான காரணங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. கிளிப்பிள்ளையைப் போல் பதிலுரைப்பதற்கு அவர்களுக்கு பயிற்சியளித்திருப்பார்கள் போலும்.
உண்மையில் என்ன நடக்கிறது என்றால் தங்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய இதர செயல்பாடுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக நம்பப்படுகிறது.
அரசாங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு இவர்களுக்கு அழைப்புகள் நிறையவே வரும். எனினும் அவை அனைத்துமே ஒரு மரபுக்கு மட்டும்தான் அனுப்பப்படுகிறதே தவிர எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போக வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார் ஒன்பது ஆண்டுகாலம் சட்ட சபை உறுப்பினராக செயலாற்றிய ஒரு முன்னாள் அரசியல்வாதி.
எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாதபடியால் போக இயலாத பட்சத்தில் யாரும் கோபித்துக் கொள்ளவோ கடிந்து கொள்ளவோ மாட்டார்கள் என்றார் அவர்.
முக்கியம் இல்லாவிட்டாலும் கூட, அரசாங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவுத் தொகை அளவுக்கு அதிகமாகவே கிடைக்கிறது என அண்மையில் பதிவு செய்த தனது காணொலி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
அதாவது போக்கு வரத்து செலவு, 3 வேளை உணவுக்கு ஆகும் செலவுகள், தங்குவதற்கான தொகை, போன்ற எல்லா செலவுகளுக்கும் தேவைக்கு அதிகமாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்கிறார் அவர்.
எனவே மக்கள் பிரதிநிதிகளில் நிறைய பேர் இது போன்ற வருமானம் தரக் கூடிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொகுதி வேளைகளை கவனிக்காமல் வாக்காளர்களை உதாசீனப்படுத்துகின்றனர் என தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கிடைக்கும் தொகை, ஒவ்வொரு மாதமும் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதைப் பொருத்து, பல சமயங்களில் அவர்களுடைய மாதாந்திர சம்பளத்தைவிட கூடுதலாகக் கூட இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே வேளையில் இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பலவகையான பணிகளில், அவர்களிடம் நிதி உதவி தேடி வருபவர்களின் சிக்கல்களும் உண்டு என்பதையும் மறுக்க இயலாது.