இங்கு வந்த பாலஸ்தீனர்கள் மீது அனுதாபமும் , வியப்பும்!

இராகவன் கருப்பையா – சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாலஸ்தீனர்களில் சிலர் கடந்த வாரம் சற்று வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவம் நமக்கு வேதனையளிப்பதோடு கூடவே வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சரியாக 1 ஆண்டுக்கு முன், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹம்மாஸ் போர் தொடர்ந்து உக்கிரம்டைத்து வரும் நிலையில் காயமடைந்த பல பாலஸ்தீனர்கள் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வரப்பட்டது நாம் அறிந்ததே.

பாலஸ்தீனின் அண்டை நாடுகளே அவர்களை கண்டு கொள்ளாமல் தங்களுடைய எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ள வேளையில், பிரதமர் அன்வார் அவர்கள் மீது பரிவு காட்டி நம் நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

ஆனால் கடந்த வாரம் அவர்களில் சிலர் நடந்து கொண்ட விதம் பெருவாரியான மலேசியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ‘உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதை’ப் போல்தான் உள்ளது அவர்களுடையப் போக்கு.

தற்காப்பு அமைச்சில் உள்ள ‘விஸ்மா ட்ரான்சிட்’ கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் வெளியே செல்ல வாய்ப்பு வழங்கப்படவில்லை எனும் ஆதங்கத்தில் அங்குள்ள சில பொருள்களை சேதப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ததாக சொல்லப்படுகிறது.

அவர்களுடைய அந்த அராஜகச் செயல் காணெளியில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களின் கவனத்தை அது ஈர்த்தது.

அவர்கள் இங்கு வந்தது சிகிச்சைக்குத்தானே ஒழிய வெளியே சென்று நாட்டை சுற்றிப் பார்க்க அல்ல. குடிநுழைவுத் துறையின் விதிகளின்படி அதற்கு அனுமதி இல்லை என்று நம்பப்படுகிறது. எனவே ‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சு மெத்தை கேட்பதைப் போல்’ உள்ளது அவர்களுடைய போக்கு.

வரம்பு மீறிய இக்குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்களா எனும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

ஏனெனில் இதே குற்றத்தை உள்நாட்டவர்கள் செய்திருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு இந்நேரம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

எனினும் வழக்கம் போல, தாங்கள் புகார் எதனையும் பெறவில்லை என காவல்துறை அறிவித்துவிட்டது. கண் முன்னே ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் ‘புகார் இல்லையேல் நடவடிக்கை இல்லை’ எனும் போக்குதான் மலேசிய காவல்துறைக்கு.

அந்த பாலஸ்தீனர்கள் மன உளைச்சலின் காரணமாகத்தான் அப்படி நடந்து கொண்டார்கள் என தற்காப்பு அமைச்சர் காலிட்டும் உள்துறையமைச்சர் சைஃபுடினும் சமய விவகாரங்களுக்கான அமைச்சரும் கூட சமாதானம் கூறுகிற போதிலும் அவர்களுடையக் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை.

மன உளைச்சலினால் குற்றம் நிகழ்ந்துள்ளது, எனவே தண்டனை இல்லை எனும் நிலைப்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மன உளைச்சல் ஏற்பட்டால் யார் வேண்டுமானலும் எம்மாதிரியான குற்றத்தையும் புரியலாமா? எனும் வேள்வியும் எழுகிறது.

அவர்களுக்குத் தண்டனை வழங்குவதா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர பொது மக்களோ, அமைச்சர்களோ, காவல்துறையினரோ அல்ல.

எனினும் அச்செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட மலேசியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் வாலிட், சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்தார். குற்றம் புரிந்த ஒரு மாதும் கூட தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கோரினார்.

மன்னிப்புக் கேட்டாலும் இல்லாவிட்டாலும் குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டம் பாயுமா இல்லையா என்று தெரியவில்லை.

இவர்கள் மீது குற்றப் பதிவு செய்யப்படவில்லையென்றால் வரும் காலங்களில் மற்ற அந்நிய நாட்டவர்களும் மிகத் துணிச்சலாக இவ்வாறு செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சிலாங்கூர், செலாயாங் பாருவில் உள்ள ‘பாசார் போரோங்’ பகுதியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ‘ரோஹின்யா’ மக்களின் ஆதிக்கத்தையும் அராஜகத்தையும் பல வேளைகளில் அங்குள்ள நகராண்மைக் கழக அதிகாரிகள் கூட கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறுவது நமக்கு கசப்பானதொரு பாடமாகும்.