மறைந்த ஆனந்த கிருஷ்ணன் தமிழ் பள்ளியில் பயின்றவர்

இராகவன் கருப்பையா – நேற்று வியாழக்கிழமை இயற்கை எய்திய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தமது ஆரம்பக் கல்வியை தமிழ் பள்ளியில் பயின்றார் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 1940களின் பிற்பகுதியில் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற அவர் பிறகு ஜாலான் ஹங் துவாவில் அமைந்துள்ள வி.ஐ. எனப்படும் ‘விக்டோரியா இன்ஸ்டிடியூஷனில்’ இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார்.

ஏறத்தாழ 25 பில்லியன் ரிங்கிட்டுக்கு அதிபதியான அவர் நம் நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார் என்பது மட்டும்தான் எல்லாருக்கும் தெரியுமே ஒழிய வேறு எந்த வகையிலும் எவ்வித விளம்பரமும் தேடாத ஒரு எளிமையான மனிதர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிக் கணக்கான ரிங்கிட்டை ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவிய அவர், அதனையும் கூட ஆரவாரமின்றி பல அறவாரியங்களின் வழிதான் செய்தாரேத் தவிர வெளியே வந்து ஊடகங்களின் முன்னிலையில் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை.

ஏழ்மை நிலை மலேசிய தமிழர்களுக்கு பாலர்  கல்வி சென்றடையவும், நிதி பிரச்சனை உள்ளவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கவும் பெரும் பங்காற்றியுள்ளார்.

மக்களின் வரிப்பணமான அரசாங்க ஒதுக்கீட்டைக் கொண்டு ஒரு சிலருக்கு செய்யும் சிறிய உதவிகளைக் கூட காணொளிகளில் பதிவு செய்து சமூக வலைத்தளங்கில் பகிர்ந்து விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்களுக்கு மத்தியில் ஆனந்த கிருஷ்ணன் ஒரு அபூர்வப் பிறவி என்றால் அது மிகையில்லை.

கடந்த 1987ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் அப்போதைய தொழில்துறை அமைச்சர் துங்கு ரஸாலி ஹம்சாவுக்கும் இடையில் நடைபெற்ற அம்னோ தலைமைத்துவப் போராட்டத்தின் போது அவ்விருவருக்கும் இடையில் சமரசம் செய்வதில் ஆனந்த கிருஷ்ணன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தமது 2 புதல்விகளும் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது கூட, மிக நெருக்கமான வெகு சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

தமது ஒரே மகனான 59 வயதுடைய அஜான் சிரிபான்யோ, 18 வயதிலேயே புத்த பிக்குவாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடர விருப்பம் தெரிவித்த போது ஆனந்த கிருஷ்ணன் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் முழு ஆதரவைக் கொடுத்தார்.

காலில் செருப்புக் கூட அணியாமல் தாய்லாந்து வீதிகளில் நடமாடும் அஜானுடன் ஆனந்த கிருஷ்ணன் தமது கடைசி மூச்சி வரையில் மிகவும் நெருக்கமாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.