அன்வார் அரசை வீழ்த்தலாம், அது போதுமா?

இராகவன் கருப்பையா –‘ருசி கண்ட பூனை’ என்று சும்மாவா சொன்னார்கள்? நம் நாட்டு அரசியல்வாதிகள் பலரை வர்ணிப்பதற்கு இது மிகவும் பொருத்தமான சொற்றொடர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

கொல்லைப் புறமாக நுழைந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்து, பதவி சுக போகங்களை வெறுமனே அனுபவித்த அந்தக் கீழ்த் தரமான அரசியல்வாதிகள் மீண்டும் ஒரு முறை தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கத் தயாராகி வருவதைப் போல் தெரிகிறது.

இவர்களால் நாட்டு மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. பேராசையால் உந்தப்பட்டு, எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி சுகமாக, சொகுசாக வாழ்க்கையை நகர்த்தத் துடிக்கும் இவர்களை மக்கள் அடையாளம் காண்பது அவசியமாகும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டிய அவசியமே இல்லை.

இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டில் இத்தகைய ஒரு அடாவடித்தனமானச் செயலை அரங்கேற்றி, கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றிய அந்தக் கும்பல் குறுகிய காலத்தில் சகல சுகங்களையும் அனுபவித்தது.

பிரதமர் பதவியைத் தருவதாக ஆசைக்காட்டி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணங்கும்படி எதிர்கட்சியைச் சேர்ந்த சிலர் தன்னை அணுகியதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான அஹ்மட் ஸாஹிட் கடந்த வாரம் அம்பலப்படுத்தினார்.

அப்படி ஒன்றுமில்லை என ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுத்துள்ள போதிலும், ‘நெருப்பில்லாமல் புகையாது’ அல்லவா!

குறைந்தது 4 அமைச்சர் பதவிகள் தங்களுக்கு வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார். அவர்களுடைய நோக்கமெல்லாம் அமைச்சர் பதவிகளை அனுபவிப்பதுதான் என்பது இதன் வழி நன்றாகவே புலப்படுகிறது.

எனினும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு தாம் இணங்கவில்லை என்று கூறிய ஸாஹிட், ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்யப் போவதில்லை என்றார்.

இதன் பின்னணியில் தேசிய முன்னணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதிர்கட்சிகளோடு திரைமறைவில் கூட்டுச் சதித் திட்டத்தில் அவர்களுடையப் பங்கும் இருக்கக் கூடும் என்று யூகிப்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஏனெனில் நடப்பு பக்காத்தான் ஆட்சியில் அரசாங்கப் பதவிகள் எதுவும் இல்லாமல் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரக்தியில் உள்ளது அரசியல் வட்டாரத்தில் அநேகருக்குத் தெரியும்.

பெரும்பாலான அமைச்சர் பதவிகளை பிரதமர் அன்வார் தனது பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கேக் கொடுத்துள்ளது இதற்கானக் காரணமாகும்.

எது எப்படி இருந்தாலும் கொல்லைப்புறமாக நுழைந்து நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடும் சுயநல அரசியல்வாதிகளின் அந்த ஈனச் செயலினால் பாதிக்கப்படுவது, அவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பொது மக்கள்தான்.

அரசாங்கத்தை மாற்ற நினைப்பவர்கள் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டும் என பேரரசர் ஏற்கனவே ஒரு முறை எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பண அரசியலும், சமயமும் இனமும் கலந்த இனவாத அரசியலும், சனநாயக வழி முறையில் ஒரு தரமான ஆட்சியை அமைப்பது  சவாலாக உருவாகி உள்ளது. நாட்டி நலன் கருதி அரசியல் மாற்று வழிமுறைகளும், தேசியதன்மையை  மேலோங்க செய்யும் வழிமுறைகளும் அவசியம்.

சனநாயகம் என்பது குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக மாறாமல் இருக்கவேண்டும் என்றால் அதற்கு வெகு சன மக்களின் ஈடுபாடு அவசியம்.  ஆம்,நாம் ஒவ்வொருவரும் அரசியல் ஒரு சாக்கடை என்ற பழைய பஞ்சாக்கத்தை எரித்து விட்டு, புதிய எழுச்சியுடன் அரசியல் என்பது நமது பேச்சும் மூச்சும் என நாட்டின் தலையெழுத்தை சீரமைக்க முன்வரவேண்டும்.