மலேசிய சிறார்களுக்கான தேசிய செயல் திட்டத்தை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் சிறார்கள் உரிமைகள் பேரவையின் திட்டத்திற்கு மலேசியாவின் கடப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் தேசிய அளவில் அமலாக்கப்படும்.
இது வரவேற்கத்தக்க நோக்கம் என்ற போதிலும் இதுகாறும் சிறார்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது அரசின் மனநிலை திருப்திகரமாக இருந்ததா என்று கேட்கத் தோன்றும். திருப்திகரமாக இருக்கவில்லை என்ற நெருடல் நீங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இனியாவது திருப்தியளிக்கும் என்று நம்புவதற்கு இந்தத் திட்டம் உதவுமா?
ஐநாவின் சிறார்களுக்கான உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்ன தெரியுமா? பதினெட்டு வயது எட்டாத யாவரும் சிறார்களே.
எல்லா சிறார்களும் அவர்களின் மதம், பேசும் மொழி, உருவம், ஆணோ பெண்ணோ என்ற வித்தியாசத்தைப் பெரிதுப்படுத்தாது அவர்களின் ஊனத்தைப் பொருளாதார செழிப்புடையவர்களோ அல்லது ஏழைகளோ, அவர்களின் பெற்றோர் நிலை மற்றும் ஏனைய குறைகளுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் எல்லா மனித உரிமைகளும் உண்டு.
எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் நேர்மையற்ற, அநீதியான முறையில் நடத்தப்படக் கூடாது. உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு அமைக்கப்பெற்ற பேரவையின் நோக்கங்களை நிறைவேற்றும் பொறுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. இதில் கல்வியின் முக்கியத்துவமும் அடங்கும்.
இந்தப் பேரவையின் முக்கிய நோக்கங்களில் சிறார்களின் கல்விக்குப் பிரதான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் சிறார்கள் யார் என்ற கேள்வி எழும்பலாம். இன, சமய வேறுபாடுகள் ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர்கள் மட்டும்தான் நாடு வழங்கும் கல்விக்கு உரிமை கொண்டாட முடியும் என்று சொல்லவில்லை. அப்படியானால் அகதிகளாக வந்திருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளும் கல்வியைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்று கூறலாம்.
இந்நாட்டு குடியுரிமை கிடையாது என்பதால் அரசின் தேசிய பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள முடியாது என்ற கொள்கை மனித நேயத்திற்குப் புறம்பானது என்று சொல்லுவதில் தவறு காண முடியாது.
இன, சமய, குடியுரிமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறார்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது பெரிய கொடுமையாகும். ஐநா இதைத் தவிர்க்கும் நோக்கோடு செயல்படுகிறது. உறுப்பு நாடுகள் ஒத்துழைக்கின்றனவா என்ற கேள்வி இன்னும் வருடிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் அதே நிலைதானே!
இந்த நாட்டு குடிமகன் வெளிநாட்டுப் பெண்ணோடு உறவு கொண்டு தந்தையாகின்றான். முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்வதில் பல குழப்பங்களும் சிக்கல்களும் உள்ளன.
பெற்றோர்களின் தவறுக்கு நிரபராதி குழந்தைக்குச் சமுதாயப் பாதுகாப்பு வழங்கப்படாதது கொடுமை என்று சொல்வதைவிட வேறு எப்படி சொல்வது! பெற்றொர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மறுக்கப்படுவது நியாயம் அல்ல! அநீதி என்றாலும் தகும்.
குடும்பச் சட்டங்கள் மற்றும் பிறப்பு இறப்புப் பற்றிய சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் பளு கடுமையாகத்தான் இருக்கும். சட்டத்தை மதித்து நடக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள். அவர்கள் செய்த தவறைக் காரணமாக வைத்து அவர்களின் பிள்ளைகளுக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவது நியாயமாகாதே!
அரசியல், சமயம் போன்ற காரணங்களுக்காக நம் தலைவர்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்வதைக் காண்கிறோம். ஆனால், சாதாரண நாட்டு குடிமகனின் உரிமைக்கு மதிப்பளிக்கும் தரம் இன்றளவும் உயர்ந்த நிலையை அடைந்துவிட்டதாகக் கூற இயலாது.
இது ஒரு பக்கம் இருக்க, இதுபோன்ற திட்டத்தை 2009ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் கிடைத்த பலன்களை, அனுபவங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, அந்த விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை நியாயமானதாகும்.
அரசு வெளிப்படுத்திய சிறார்களுக்கான திட்டம் நன்மையைப் பயக்கும் தரத்தைக் கொண்டிருந்தாலும் அமலாக்கத்தில் பலவீனம் இருக்கக் கூடாது. புறச் சாய்வு தரத்திற்கு இடமளிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, அரசு வழங்கிய சில தகவல்கள் தவறானவை என்ற குறைபாடும் உண்டு. இவையாவும் தவிர்க்கப்பட வேண்டியவை.
அறிவிக்கப்பட்ட திட்டம் நன்மையைத் தரும் என்ற நம்பிக்கை உண்டு. அது நல்ல நேர்மையான செயலால் தான் காண முடியும் என்ற நம்பிக்கையும் பலமாகத்தான் இருக்கிறது. நல்ல இலக்கை அடைய முடியும். எல்லாம் அரசின் கையில் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.
அரசு என்றால் அமலாக்கத் துறையையும் உள்ளடக்கியதாகும். எனவே, அமலாக்கத் துறை தனது பொறுப்பைத் தூய உணர்வோடு நிறைவேற்றும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் அரசியல் லாபத்தை மட்டும் கவனத்தில் கொண்டு நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு மக்கள் நலனில் அவர்களின் கவனம் திரும்ப வேண்டும். அவர்களின் கவனத்தைத் திரும்பச் செய்யும் சக்தி மக்களிடம் தான் உண்டு. மக்கள் என்ன செய்யலாம்?
மக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக இருக்கக்கூடாது. ஒரு சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாக மட்டும் இருப்பது பலனளிக்காது. சிறார்களின் நலனில் நிச்சயமான கவனம் தேவை, அறிவிக்கப்பட்ட திட்டம் வெற்றி பெற வேண்டும். மலேசிய இளைஞர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். நல்ல திட்டத்தை அறிவிப்பதோடு நின்றுவிடும் கலாச்சாரம் நாட்டுக்கு நல்லது அல்ல!