ஐயப்பா நாட்டிய நாடகம் – நாடகதுறையில் இன்னொரு சாதனை – ஸ்ரீ இராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் (SRMAC) மற்றும் எஸ்.ஆர்.எஃப்.ஏ கலை மற்றும் கலாச்சார அமைப்பு (PKK SRFA) இணைந்து 8 மற்றும் 9 நவம்பர் 2024 அன்று Panggung Seni Tradisional எனப்படும் பாரம்பரிய கலை மேடையில் “ஐயப்பா” எனும் இந்திய பாரம்பரிய நாட்டிய நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.
கோலாலம்பூரின் டேவான் பாஹசா டான் புஸ்தகா அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றியை அடைந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.
அரங்கம் பொது மக்களின் வருகையால் நிரம்பியது. நிகழ்ச்சிக்குப் பிந்தைய கருத்துக்களிலும் மக்கள் ஐயப்பா நாட்டிய நாடகம் மிகச் சிறப்பாக இருந்ததோடு, பல பகுதிகளில் மெய்சிலிர்க்க வைத்தது என்றும், மனதிற்கு நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
PKK SRFA மற்றும் ஶ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகத்தின் நிறுவனரும் கலை இயக்குனருமான குரு நளினி ராதாகிரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய இந்திய நடனத்தின் செழுமையை அழகாக வெளிக்கொணர்ந்தது எனலாம்.
இந்த நாட்டிய நாடகத்திற்கு கி.சத்தியா அவர்களின் பாடல் வரிகளும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் வெங்கடேஸ்வரன் குப்புசாமி அவர்களின் இசையும் வலு சேர்த்தன. 30 திறமையான நடனக் கலைஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஏற்பாட்டு குழு, ஒலி, ஒளி பிரிவு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு அங்கத்தினரின் அர்ப்பணிப்பு முயற்சிகள் ஐயப்பா நாட்டிய நாடகம் சிறப்பாக உருவாக அடிப்படையான காரணங்களாகும்.
மலேசிய பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து உயர்த்தும் நோக்கில் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (MOTAC) தேசிய கலாச்சார மற்றும் கலைத்துறை (JKKN) ஏற்பாடு செய்த இந்த பாரம்பரிய கலை மேடை (Panggung Seni Tradisional) நிகழ்ச்சியில், யயாசான் ஹசானா (YAYASAN HASANAH), நிதி அமைச்சகம் (MOF) மற்றும் டேவான் பாஹசா டான் புஸ்தகா (DBP) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்பும் இருந்தன.
இந்த நிகழ்வு, சுற்றுலா துறைகளில் மலேசியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அற்புத கலை படைப்பாகும்,
இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக டான் ஸ்ரீ நோர்லிசா ரொஃப்லி (ARTS FAS ஆலோசகர் மற்றும் முன்னாள் JKKN தலைமை இயக்குநர்), ஹுமைரா ரித்ஸுவான் லோட்ஃபி (ARTS FAS), சிலாங்கூர் மாநில தேசிய கலாச்சார மற்றும் கலைத்துறை (JKKN SELANGOR) இயக்குநர் துவான் ரைசுலி பின் மாத் ஜூசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதோடு, மலேசியா டிஜிட்டல் அமைச்சின் அரசியல் செயலாளர் திரு. சூரேஷ் சிங், டத்தோ மோகன் கிருஷ்ணன், மலேசிய ஐயப்பா சேவை சங்கத்தின் தலைவர் திரு யுவாராஜா குப்புசாமி மற்றும் ஐயப்பா கோயில் Batu Caves CWC உறுப்பினர் திரு சு. சுதாகர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.90 நிமிடங்கள் நீடித்த இந்த நாட்டிய நாடகம், 2024 PST விழாவின் சிறப்பான நிறைவாகவும் கோலாலம்பூரை கலாச்சார சுற்றுலா மையமாக உயர்த்தும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது.
இறுதியாக, PKK SRFA, இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்து, ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்புகளுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். பாரம்பரிய கலைகளின் மீதான உணர்வையும் மதிப்பையும் மேலும் ஆழமாகக் நிலைத்திருக்க செய்வோம் என PKK SRFA உறுதிமொழி அளிக்கின்றனர்.