இரு கட்சி முறை மலேசியாவுக்குப் பொருந்துமா?

கி.சீலதாஸ் – துன் டாக்டர் மகாதீர் முகம்மது இருமுறை இந்நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவர் பிரதமராக இருந்த மொத்த காலம் ஏறத்தாழ கால் நூற்றாண்டாகும். நடந்து முடிந்த பதினைந்தாம் பொது தேர்தலில் போட்டியிட்டு கடும் தோல்வியைப் பரிசாகப் பெற்றார். அவருடைய வயதை எடுத்துக் கொண்டால் ஒரு நூற்றாண்டைத் தொட்டுவிட்டது. இப்பொழுது பெரும்பாலும் அரசியல் கருத்துகளை வெளியிடுவதில் கரிசனமும் உற்சாகமும் வெளிப்படுத்துகிறார். அவரின் சில கருத்துகள் நம்மைச் சிந்திக்கச் செய்யலாம். மற்றும் பல கருத்துகள் அவரின் அரசியல் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதில் தயக்கம் இருக்காது.

இந்த நாட்டின், இன, சமய நல்லிணக்கம் வளர விடாமல் தடுத்தவர்கள் ஏராளம். அவர்களின் முதல் வரிசையில் பலர் இருக்கலாம். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் யார் என்பதற்கான ஆய்வு மேற்கொண்டால் மகாதீரின் பெயர் உயர் வரிசையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

துங்கு அப்துல் ரஹ்மான், துன் உசேன் ஓன் ஆகிய தலைவர்கள் இன, சமய பிரச்சினைகளுக்கு முதலிடம் தருவதைத் தவிர்த்தார்கள். நாட்டின் இரண்டாம் பிரதமர் துன் ரசாக்கின் பிரதமர் காலம் கம்மியாக இருந்தது. ஆனால், அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மையினரின் பாதுகாப்பு எப்படி இருந்தது? அவர்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன அல்லது பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளுக்குச் சரியான பதில்  இதுவரை கிடைக்கவில்லை. அவரின் பிரதமர் காலத்தின் போது சிறுபான்மையினர் கண்ட அவதி சொல்லித் தீருமா? ஆனால், பெரும்பான்மையினரின் பாதுகாப்பில் அவர் சளைக்கவில்லை என்பதும் வரலாறு செப்பும் உண்மை.

உசேன் ஓனுக்குப் பிறகு பிரதமர் பதவி ஏற்ற துன் மகாதீர் முகம்மது இன, சமய நல்லிணக்கத்திற்கு முதலிடம் கொடுத்தாரா என்பதும் ஆய்வுக்குரியதே! ஆனால், அவர் பிரதமராக இருந்த காலத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்கள், மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை இன, சமய நல்லிணக்கத்திற்கு உதவும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் கவலைக்குரிய மாற்றம் என்றால் தவறல்ல.

மகாதீர் முதன் முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஏற்பட்ட இன, சமய பிரச்சினைகள் கணக்கிலடங்கா. குறிப்பாக, ஆரம்பப் பள்ளிகளில் திணிக்கப்பட்ட மாற்றங்கள் இனவாத பிரச்சினையைப் பெரிதுபடுத்தும் அளவுக்கு உயர்ந்தது. அதோடு தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதை ஏற்க மறுத்தவர்களுள் மகாதீரின் தலைமையில் இயங்கிய கட்சி உறுப்பினர்களே.

மகாதீர் முன்வைத்த கருத்து என்ன? தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமையை வளர்க்காது என்பதாகும். இந்தக் கருத்தை விவேகமுடைய கல்விமான்கள் ஏற்க மறுத்தனர். ஆனால், மகாதீர் தாய்மொழிப் பள்ளிகள் மீது கொண்டிருக்கும் வன்மத்தைக் கைவிடுவதாக இல்லை.

இன, சமய நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தராத மகாதீர் இப்பொழுது இரு கட்சி ஆட்சி முறையைச் சட்டமாக்க வேண்டும் என்கிறார். இதற்கு அவர் கூறும் காரணம் பதினைந்தாம் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாததே. அவரின் கருத்துப்படி, இருகட்சி முறைதான் சாலச் சிறந்ததாம்.

இருகட்சி முறையைச் சட்டத்தின் வழி அறிமுகப்படுத்தும்படி கூறுகிறார் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளைப் பற்றி கவனத்தில் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 10(1)ஆம் பிரிவின்படி,

(1) ஒவ்வொரு குடிமக்களுக்கும் பேச்சுரிமை உண்டு;

(2) எல்லா குடிமக்களும் ஆயுதமின்றி அமைதியாகக் ஒன்று கூடும் உரிமை உண்டு;

(3) எல்லா குடிமக்களும் ஒன்று கூடி விரும்பிய அமைப்புகளைக் காணலாம். இந்த உரிமைகள் இருந்தாலும் கட்டுப்பாடுகளும் இருக்கலாம், இருக்கின்றன.

இரு கட்சி முறை என்றால் குறிப்பிட்ட இரு கட்சிகளுக்கு மட்டும் நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் இருக்கும். அதாவது, மக்களுக்கு இரு கட்சிகளில் ஒரு கட்சியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலவரத்தை எடுத்துக்கொண்டால் தேசிய முன்னணி – இதில் அம்னோ, மசீச, மஇகா ஆகிய பிரதான மற்றும் சிறு கட்சிகளும் அடங்கும். அடுத்தது, பெரிக்கத்தான் ஹரப்பான் இதில் நீதிக்கட்சி, மக்கள் செயல்கட்சி, அமானா போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்து நிற்பது பெரிக்கத்தான். இதில் பாஸ், பெர்சத்து ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த மூன்று பெரும் அணிகளும் இரண்டாகப் பிரிந்து இரண்டு வேறுபட்ட அரசியல் கொள்கைகளைத் தங்களின் சித்தாந்தமாக அறிவிக்குமா? ஒரு வகையில் இரு கட்சிகளும் இன, சமய விஷயத்தில் ஒரே விதமான கொள்கையைக் கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? மலேசிய தீபகற்ப கட்சிகளின் அரசியல் அணுகுமுறையைக் கண்டோம். சபா, சரவாக் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? இயங்கும் மூன்று அணிகள் இரண்டாகப் பிரிந்தால் எந்த அணிக்கு சபா, சரவாக் கட்சிகள் ஆதரவு நல்கும் அல்லது எந்த அணியோடு இணையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்?.

இப்படிப்பட்ட குழப்பங்கள் பளிச்சிடும்போது இரு கட்சி முறை வரலாற்றையும் நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்க குடியரசில் இரு கட்சி முறைக்கு அதன் அரசமைப்புச் சட்டம் வழிவிடுகிறது. ஆனால், மற்ற கட்சிகள் இயங்குவதைத் தடுக்கவில்லை. எனவே, குடியரசு, ஜனநாயக கட்சிகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்குகின்றன. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி 1828ஆம் ஆண்டு உதித்தது. அமெரிக்காவின் குடியரசு கட்சி 1854ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவை இரண்டும் அமெரிக்க அரசியலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. மற்ற கட்சிகள் தலையெடுக்க முடியவில்லை.

ஐக்கிய முடியாட்சியைப் பார்த்தால் அங்கே எழுத்து வடிவ அரசமைப்புச் சட்டம் இல்லை. அரசியல் கட்சிகள் எனும்போது கன்சர்வடிவ் கட்சி 1834ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முற்போக்குக் கட்சி (லிபரல்) 1859ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அதாவது 1900ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசியலில் புகுந்தது. இப்பொழுது முற்போக்குக் கட்சி பின்னடைவு கண்டுள்ளது. இங்கிலாந்தில் கன்சர்வடிவ் – தொழிற்கட்சி ஆகிய இரு கட்சிகளிடையே தான் அரசியல் போராட்டாம் நடைபெறுகிறது என்றபோதிலும் ஏனைய மற்ற கட்சிகளும் இயங்குவதைக் காணலாம்.

இவ்விரண்டு நாடுகளின் இரு முறை கட்சி ஆட்சி திருப்திகரமாக இருக்கிறதா? நிரந்தர ஆட்சிக்கு இது உதவும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முறையில் சிறுபான்மையினரின் கருத்தும் உரிமைகளும் வலுவிழக்கும் சாத்தியக் கூறுகள் ஏராளம் என்பதைக் காண முடிகிறது.

பல கட்சிகள் தேர்தலில் பங்கு பெறுகின்றன என்றால் மக்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் வாய்ப்பும் உண்டு. அதில் மாற்றம் ஏற்படுவது எளிதல்ல என்றாலும் மக்கள் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகளின் அடகுப் பொருளாக மாறிவிடுவது ஒன்றும் வியப்பல்லவே. இதுதானே இன்றைய ஜனநாயக நாகரீகம்.

இரு முறை ஆட்சியில் நன்மை இருக்கும் என்று சொல்லும் போது அதிலும் சோடை தனத்திற்கு இடமுண்டு என்று அனுபவம் கூறுகிறது. பல கட்சி அரசியல் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறது என்றாலும் மக்களின் விருப்பத்திற்கு விலை பேசும் அரசியல்வாதிகள் மலிந்து காணப்படுகின்றனர். ஜனநாயகத்துக்கும் பாதுகாப்பு இல்லை.

இரண்டு விதமான அரசியல் கட்சி நிலையில் எதில் குறைந்தபட்ச ஆபத்து என்று சிந்திக்கும் போது பல கட்சிகள் இயங்குவதில்தான் மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு காண முடியும். தொங்கு நாடாளுமன்றம் ஒன்றும் தீமையைத் தருவிக்காது. ஒற்றுமையோடு செயல்படுங்கள் என்று வாக்காளர்கள் தீர்ப்பளித்ததாகவே கருத வேண்டியுள்ளது.

இரு கட்சி முறையிலும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜனநாயகம் என்றால் எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் சிறப்புமிகு உரிமை உண்டு எனின் அதில் கட்டுப்பாடும் தேவை என்பதைப் பல கட்சிகள் கொண்ட ஜனநாயகம் பாதுகாக்கும் வாய்ப்பு உண்டு. இருகட்சியில் உள்ள பெரும்பான்மையைப் பிரதிநிதிப்பவர்கள் ஒன்றுகூடி சிறுபான்மையினரின் உரிமைகளை உதாசீனம் செய்ய வாய்ப்பு அதிகம்.