பத்து பூத்தே தீவு – யாருக்கு சொந்தம்? – கி. சீலதாஸ்

பத்து பூத்தே தீவு (Pulau Batu Puteh) விவகாரத்திற்கு எளிதில் தீர்வு காண முடியுமா என்பதற்கு விரைவில் பதில் கிடைக்காது. அது பல சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையாகும். மலேசியா – சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினை இந்தத் தீவின் மீதான இறையாண்மையைக் குறித்ததாகும். இரு நாடுகளும் நீண்ட கால பேச்சு வார்த்தையின் வழி திருப்திகரமான தீர்வைக் காண முடியாததால் அனைத்துலக நீதிமன்றத்தின் துணையை நாடின.

2008ஆம் ஆண்டு இந்தப் பத்து பூத்தே தீவு சிங்கப்பூருக்குச் சொந்தம் என அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பால் நிறுவப்பட்ட அனைத்துலக நீதிமன்றம் தன் முன் வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தின் விதிமுறைகளின்படி மேல்முறையீட்டுக்கு வழி கிடையாது. [காண்க: விதிகள் 59 & 60]. ஆனால், புது சான்று கிடைத்தால் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி விண்ணப்பிக்கலாம்.

இந்த முறையை அந்த நீதிமன்றத்தின் விதிகளின் 61ஆம் பிரிவு அனுமதிக்கிறது. மறு ஆய்வு கோருவதற்குக் கால வரம்பு இல்லை என்று சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு பிரச்சினையே. நீதிமன்றத்தில் தமக்குச் சாதகமான தீர்ப்பின்படி சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். பல கோடி பணத்தைச் செலவு செய்திருக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, மறு ஆய்வு துரிதமாகச் செய்வதே சட்டத்துக்குத் திருப்தி தரும்.

இந்தப் பத்து பூத்தே தீவு பிரச்சினையில் அனைத்துலக நீதிமன்றம் 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது என்பதைக் கண்டோம். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2.2.2017ஆம் தேதி மலேசியா தம்மிடம் புது ஆவணங்கள் இருப்பதாகக் கூறி அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் பொதுத் தேர்தலில் வெற்றி கண்டது. துன் டாக்டர் மகாதீர் முகம்மது இரண்டாம் முறையாகப் பிரதமர் பதவியேற்றார்.

28.5.2018ஆம் தேதி மலேசியா-சிங்கப்பூர் தரப்பினரின் ஒப்புதலுக்கு இணங்க அனைத்துலக நீதிமன்றம் இரு தரப்பினரின் ஒப்புதலைப் பதிவு செய்தது. இந்த ஒத்திசைவின் விளைவு என்ன? மலேசியாவின் மறு ஆய்வு விண்ணப்பம் திரும்பப் பெற்று கொள்ளப்பட்டது.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு

இந்தக் கட்டுரையின் நோக்கம் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதா அல்லது பிசகு ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வது அல்ல. மாறாக, இன்று எழுப்பப்பட்டிருக்கும் சில கேள்விகள் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன. மறு ஆய்வு விண்ணப்பத்தில் கூறப்பட்ட புது ஆவணங்கள் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைத்தது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

இப்பொழுது கிடைத்தது என்று சொல்லப்படும் சான்று நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் போது ஏன் கொணரப்படவில்லை என்ற கேள்வி எழுந்தே ஆகும். அதோடு அனைத்துலக நீதிமன்றத்தின் மிகவும் முக்கியமான கொள்கையைக் கவனத்தில் கொள்வது தவிர்க்க முடியாத கடப்பாடாகும். அதாவது, இரு நாடுகளுக்கு இடையே எழும் பிரச்சினைக்கு விரைவாக முடிவு கண்டு அனைத்துலக நட்புறவைப் பலப்படுத்துவதாகும். இதுவும் நம்முடைய இன்றைய ஆய்வுக்கு உட்பட்டது அல்ல.

2018ஆம் ஆண்டு பத்து பூத்தே மறு ஆய்வு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது சரிதானா என்பதை அறியும் பொருட்டு அரசு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை வெளியாகியுள்ளது. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆணையத்தின் சில கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் கூட விசாரணை ஆணையத்தின் அறிக்கை படி மிக பெரிய தேசத் துரோகம் அம்பலமாகியுள்ளது என்கிறார். இதுவும் மிகவும் முக்கியமான கருத்து என்பதைவிட கடுமையான குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா என்பதை ஆராய்வது அன்று நம் நோக்கம். இப்படிப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கும் போது மக்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகின்றனரே! அது சரியா? மக்களைத் துன்புறுத்தலாமா? அதுதான் நம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலவரம்.

அரச ஆணையத்தின் சில குறிப்புகள் வெளிவந்ததும் துன் டாக்டர் மகாதீர் முகம்மது மீது பல கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. இது எதிர்பார்த்ததுதான். ஆனால், முன்னாள் துணைப் பிரதமர் வன் அஸிஸா வன் இஸ்மாயில் முன்னாளும் இந்நாளும் போக்குவரத்து அமைச்சராக இருந்த, இருக்கும் அந்தொனி லொக், முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகம்மது சாபு ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தங்களுக்கு புலாவ் பூத்தே தீவுக்கான வழக்கில் மறு ஆய்வு செய்ய கோரும் விண்ணப்பத்தில் எந்தப் பங்கும் இல்லை என்றார்கள்.

அவர்களின் கூற்றுப்படி மகாதீர் தன்னிச்சையாக மறு ஆய்வு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்னர் அமைச்சரவைக்குத் தெரிவித்தார் என்கின்றனர். இது ஏற்றத்தக்க கருத்தா?

மேலே குறிப்பிடப்பட்ட மூவரும் பக்கத்தான் ஹரப்பான் 2018ஆம் அமைத்த அரசில் பங்குபெற்றனர். இம்மூவரும் அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்தனர்.

கூட்டரசின் அரசமைப்புச் சட்டத்தின் 43(3)ஆம் பிரிவின்படி அமைச்சரவை நாடாளுமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு கொண்டிருக்கும் என்கிறது.  இதன் பொருள் என்ன? அமைச்சரவை எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும், மேற்கொள்ளும் எல்லா செயல்களுக்கும் அமைச்சரவை உறுப்பினர் யாவரும் கூட்டுப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் இப்பொழுது சொல்லுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விடுப்படும் சாத்தியம் உண்டா எனில், அது எடுபடாது.

அனைத்துலக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டு அந்தச் செய்தியை மட்டும் மகாதீர் அமைச்சரவையில் அறிவித்தார் என்று சொல்லுவது எதைக் குறிக்குறது? மகாதீர் தன்னிச்சையாகச் செய்ததைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். அமைச்சரவையில் கருத்தை அறிந்து கொள்ளாமல் அவர் எடுத்த முடிவு தவறு என்று சொல்லியிருக்க வேண்டும். அவர் தன்னிச்சையாகச் செய்தது தவறு என்று ஆணித்தரமாகக் கூறியிருக்க வேண்டும். அவர் ஏற்க மறுத்தால் இம்மூவரும் வகிக்கும் பதவியைத் துறந்திருக்க வேண்டும். அதுதானே முறை. அதுதானே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் முடிவான இலட்சியம்.

மகாதீரைத் தன்னிச்சையாகச் செயலாற்ற அனுமதித்து விட்டு இப்பொழுது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசமைப்புச் சட்டத்தின் 43(3)ஆம் பிரிவு பலவிதமான வியாக்கியானங்களுக்கு இடமளிக்கலாம். வகித்த அமைச்சரவையின் உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்பிலிருந்து நழுவ நினைப்பது அரசியல் நாகரிகமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மகாதீரின் தலைமையில் இயங்கிய எல்லா அமைச்சர்களும் அவர் செய்த தவறுக்கு (உண்மையில் தவறு என்றால்) பொறுப்பேற்க வேண்டும். அதுதான் கூட்டுப் பொறுப்பு என்பதன் நிதர்சனமான பொருள்.

இப்பொழுது பத்து பூத்தே தீவு பிரச்சினையைப் பற்றி எழும்போது மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அது அமைச்சரவையையே குற்றப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அமைச்சரவையில் அங்கம் வகித்த எல்லா அமைச்சர்களும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க நினைப்பது அரசமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும்.

இந்த மூவரும் சொல்வது உண்மையென ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால் இவர்களின் அன்றைய மனநிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்று கேட்கத் தோன்றும் அல்லவா? மகாதீர் அதைச் சொன்னாலும் செய்தாலும் உண்மையைப் புரிந்து கொள்ள முற்படாமல் ஆதரித்ததைத் தானே குறிக்கிறது. கூட்டுப் பொறுப்பு என்றால் அன்று மகாதீர் எடுத்த முடிவுக்கு அமைச்சரவையே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால் அதுதானே சட்டம் வலியுறுத்துகிறது.

இந்த மூவர் வெளியிட்டுள்ள செய்தியை மகாதீர் மறுத்துள்ளார். இவர்கள் சொல்வதில் உண்மை கிடையாது என்கிறார். யார் உண்மையைச் சொல்கிறார் என்பதும் நாம் அறிந்து கொள்வதற்குப் போதுமான தகவல்கள் இல்லை. நாம் மேற்கொண்ட ஆய்வு அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு, யார் உண்மையைச் சொல்கிறார் என்பது அல்ல கேள்வி.  மகாதீர் மட்டுமல்ல அவரின் அமைச்சரவையே கூட்டுப் பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்பதே முடிவான, தெளிவான கருத்து.