துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பு

இராகவன் கருப்பையா – சமீப காலமாக நம் நாட்டில், குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில்  துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது நமக்கு சற்று அச்சமூட்டும் வகையில்தான் உள்ளது.

“எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பயப்படத் தேவையில்லை,” என காவல்துறையினர் உறுதியளித்துள்ள போதிலும் எண்ணற்ற நபர்கள் வெளியே துப்பாக்கிகளோடு திரிகின்றனர் என்று நினைத்து பார்க்கும் போது யாருக்குதான் படபடப்பு இருக்காது?

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பெரும்பாலும் குண்டர் கும்பல்களுக்கிடையிலான தகராறுகள்தான் எனும் போதிலும் அவை பொது இடங்களில் நிகழும்போது நமது பாதுகாப்புக்கு எங்கே உத்தரவாதம் எனும் கேள்வி எழவேச் செய்கிறது.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தலைநகர் ஜாலான் புக்கிட் துங்கு பகுதியில் காவல் துறையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு சந்தேகப் பேர்வழியின் காரில் கூட, இதர பொருள்களோடு கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 நாள்களுக்கு முன் கிள்ளான், தாமான் செந்தோசா பகுதியில் இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை கிளப்பியுள்ளனர்.

கடந்த மாதம் ஜொகூர் பாருவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் உடல் முழுவதும் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட, 42 வயதுடைய நபர் ஒருவரின் உடலை அடையாளம் தெரியாத இருவர் சுல்தானா அமினா மருத்துவமனையில் கிடத்திவிட்டு மின்னல் வேகத்தில் தலைமறைவானார்கள்.

சென்ற மாதம் தொடக்கத்தில் பினேங் மாநிலம் பட்டர்வர்த் பகுதியில் மாலை 5.30 மணியளவில் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு வெளியே தனது மகனுக்காக காரில் காத்திருந்த ஒரு நபர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிப் பிள்ளைகள் அதிகமாக நடமாட்டம் உள்ள ஒரு இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதானது, கிட்டதட்ட அங்குள்ள எல்லா பெற்றோர்களையும் பீதியடையச் செய்திருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி தலைநகர் செராஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு பேரங்காடியின் முகப்பில் நள்ளிரவு வாக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் இரு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடக்க சில தினங்களுக்கு முன் தலைநகர் பிரிக்பீல்ஸ் பகுதியில் உணவகமொன்றில் அமர்ந்திருந்த சிலர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் சரமாரியாகச் சுட்டனர்.

ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைய, மேலும் இருவர் கடுமையானக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதே வாரத்தில் கிள்ளான், மேரு வட்டாரத்தில் நிகழ்ந்த கொடூரக் கொலையொன்றில் பிற்பகல் 3.30 மணியளவில் தனது காரில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 6 முறை சுட்டதில் அவர் அங்கேயே மரணமடைந்தார்.

அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் மட்டுமின்றி, நமது அண்டை நாடுகளான தாய்லாந்திலும் ஃபிலிப்பின்சிலும் கூட துப்பாக்கிக் கலாச்சாரம் சாதாரணமான ஒரு விஷயம்தான்.

ஆனால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த சூழல் இல்லை. இங்கு பாதுகாப்புக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிகவும் கட்டுப்பாட்டுடன்தான் இந்நிலவரம் கையாளப்படுகிறது.

இருந்த போதிலும் அண்மைய மாதங்களாக ஆங்காங்கே அதிகரித்துள்ள துப்பாக்கி தொடர்பான குற்றச் செயல்கள் நமக்குக் கொஞ்சம் அச்சமளிக்கிறது.

போலிஸ் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு கடுமையான குற்றம். அதற்கு தண்டனை 14 ஆண்டுகள் வரை சிறையும் பிரம்படிகளும் ஆகும்.