இந்திய அரசியல்வாதிககளின் இக்கட்டான சூழ்நிலை  

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நம் இனத்தவரிடையே ஊறிப் போய் கிடக்கும் ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவு போன்ற சமூகச் சீர்கேடுகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசியல்வாதிகளே ஒருவருக் கொருவர் நீயா நானா என வாய்ச் சண்டையில் மார்தட்டி நிற்கும் நிலையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நம் சமூகத்தைச் சார்ந்த எண்ணற்ற சாதனையாளர்கள் பல துறைகளில் இங்கு முத்திரை பதித்து வருகிற போதிலும், குடி போதை, சண்டை, சச்சரவு, வெட்டு, குத்து, கொலை போன்ற அடாவடித்தனங்களுக்கு நம் இனம்தான் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் வேதனைக்குரிய, அழுக்குப் படிந்த இந்த முத்திரையை சுமந்து நிற்கும் இந்நிலையிலிருந்து நம் சமூகம் விடைபெறுவதற்கான அறிகுறிகளையே கிட்டத்தில் காணவில்லை.

குடி போதையில் போத்தல்களை கையிலெடுத்தும் நாற்காலிகளைக் கொண்டும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் மட்டுமின்றி அரிவாள்களைக் கொண்டு வெட்டிக் கொள்ளும் கொடூரங்ளும் கூட அண்மைய காலமாக அதிகரித்துள்ளன.

அரசியல் முன்னெடுப்புகளின் வழி இவற்றையெல்லாம் கலைய இயலும் என நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த அரசியல்வாதிகளில் சிலர் சிறு பிள்ளைகளைப் போல தற்பொழுது நடந்து கொள்ளும் விதம் நமக்கு அவமானமாக உள்ளது.

இந்நாட்டில் நமக்கு அரசியல் பலம்  இல்லை எனும் உண்மை எல்லாருக்கும் தெரியும். பிற இனத்தவரின் ஆதரவில்தான் ஆங்காங்கே ஒரு சில தொகுதிகளில் வெற்றி கிடைத்து வருகிறது.

பல தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான் வெற்றி  தோல்வியை நிர்ணயிக்கிறது எனும் கூற்றெல்லாம் காலம் கடந்த ஒரு சுய தம்பட்டம் என்றால் அது தவறில்லை. நமது பிரிவினையான வாக்களிப்பு நமது சிறுபான்மை பலத்தை பலவீனமாக மாற்றிவிட்டது.

நாம் மட்டும்தான் இந்த அம்சத்திற்கு உரிமை கொண்டாடி, ஒரு பிரயோஜனமும் இல்லாமல் இதனைப் பற்றியே பேசிப் பேசி சுயமாக ஆனந்தமடைந்து கொண்டிருக்கிறோம். மற்ற இனத்தவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதுவதாகத் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதைப் போல எங்கு பார்த்தாலும் சிறு சிறு கட்சிகளைத் தொடக்கிக் கொண்டு பந்தா காட்டும் ‘குட்டி அரசியல்வாதிகள்’தான் ஏராளம்.

“ஒற்றுமை அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. அமைச்சரவையிலோ அரசாங்க நிறுவனங்களிலோ எங்களுக்கு இடமளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளோம். ‘நாங்கள் வரவேற்கப்படாத விருந்தாளி’களைப் போல் உணர்கிறோம்.”

“எனவே எங்களுடைய எதிர்கால இலக்கு குறித்து எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் எங்கள் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு முடிவெடுப்போம்,” என ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் கடந்த வாரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அது ம.இ.கா. விவகாரம். ஆனால் சம்பந்தமே இல்லாமல், பேராக் மாநில புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வின் துளசி, அதிகப்பிரசங்கித்தனமாக ஏன் மூக்கை நுழைத்தார் என்று தெரியவில்லை.

‘”வரவேற்கப்படாத விருந்தாளி என்று உணர்ந்தால் மடானி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியதுதானே,” என்று அவர் கருத்துரைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கிடையே ‘உரிமை’ கட்சித் தலைவர் ராமசாமி இந்திய சமூகத்தின் நம்பிக்கையை பெற இயலாத ஒரு சந்தர்ப்பவாதி என எம்.ஐ.பி.பி. எனும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சுப்ரமணியம் சாடினார்.

எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல், அடிமட்ட ஆதரவாளர்களைக் கொண்ட இந்தியத் தலைவர்களை ஈர்க்கத் தவறிவிட்டது என உரிமை கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் குணசேகரன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலுரைத்த போதுதான் ராமசாமியையும் உரிமை கட்சியையும் கப்ரமணியம் கடுமையாக விமர்சித்தார்.

ஆக இந்நாட்டில் மலாய்க்காரர்களின் அரசியல் நீரோட்டத்தில் உறுதியான எதிர்காலத்தைக் காண இயலாமல் இருக்கும் இந்த கத்துக் குட்டிகள் தங்களுக்கிடையே வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், யார்தான் சமுதாயத்திற்காக போராடுவார்கள் என்று ஐயுறுவதில் நியாயம் உள்ளது.