தவணை முறை எஸ்.டி.பி.எம் தேர்வுகளை அனைத்துலக பல்கலைகழகங்கள் ஏற்குமா?

மலேசியத் தேர்வு வாரிய தலைவர் பேராசிரியர் டாக்டர் முஹம்மது நொஹ், தற்போதுள்ள எஸ்.டி.பி.எம் தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டு தவணை முறையிலான தேர்வுகள் அறிமுகப்படுதப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வு முறையை இலகுவாக்கி இன்னும் அதிகமான மாணவர்களை எஸ்.டி.பி.எம் தேர்வு எழுத ஊக்குவிப்பதே  இந்த மாற்றத்திற்கான மூல காரணம் என்றும் அவர்  தெரிவித்திருக்கிறார்.

மலேசிய அரசின், ஆட்சி அமைப்பு முறைக்குட்படுதப்பட்ட இன ரீதியான கொள்கைகளினால்  எஸ்.பி.எம் தேர்வுகளில் மிக சிறந்த மதிப்பெண்களை பெற்றிருந்தும் மெட்ரிகுலேஷன்  போன்ற உயர் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட   நிலையில் தனியார் கல்லூரிகளில் கல்வியை தொடர முடியாத  தகுதி வாய்ந்த இந்திய  மாணவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி எஸ்.டி.பி.எம் தேர்வுதான்.

தங்களை  காட்டிலும் குறைவான மதிப்பெண்களை பெற்ற பிற இன மாணவர்கள் மெட்ரிகுலேஷன் உயர் கல்வி வாய்ப்பை பெரும் போது, சிறந்த மதிப்பெண்களை  பெற்றிருந்தும், இந்தியர்களாக பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக இந்த மாணவர்கள் மிகவும் கடினமான எஸ்.டி.பி.எம் தேர்வெழுத கட்டாயப்படுதப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் ஐக்கிய இராஜ்யத்தால் (united  Kingdom)   நடத்தப்பெறும் பல்கலைகழக புகுமுக தேர்வான  GCE  A  level-லுக்கு   இணையான எஸ்.டி.பி.எம் தேர்வு, அனைத்துலக அளவில் அநேகமான பல்கலைகழகங்களில்  குறிப்பாக காமன்வெல்த், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து குடியரசு நாடுகளில்  அங்கீகரிக்கப்பட்ட  கல்வி தேர்வாக இருப்பதால், பட்ட படிப்பை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் (உபகார சம்பள மற்றும் கல்வி கடனுடன்) தொடர நம் மாணவர்களின் இறுதி அஸ்திரமாக எஸ்.டி.பி.எம் தேர்வு அமைகிறது.

நிலைமை இப்படி இருக்கையில் புதிதாக அறிமுகப்படுதப்படவுள்ள தவணை முறையிலான எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளை அனைத்துலக பல்கலைகழகங்களில் அங்கீகரிப்பார்களா  என்பதை மலேசியத் தேர்வு வாரியத் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும்.

எஸ்.டி.பி.எம் தேர்வு உள்ளநாட்டு பல்கலைக்கழக நுழைவு தேர்வாக மட்டுமே சுருங்கிவிடக்கூடாது, அவ்வாறு நேர்ந்தால் தம் சுய முயற்சியால் பெற்றோரின் ஆயுள் கால சேமிப்பில் உள்ளநாட்டு வெளிநாட்டு சர்வகலாசாலைகளில் பட்டப் படிப்பை தொடரும் ஒரே வாய்ப்பினையும் இழந்து  நம் பிஞ்சு உள்ளங்கள்  கருகி சாம்பலாகும் அவலத்தையும் நம் வாழ்நாளில் கானே நேரிடும்..! எச்சரிக்கை.!!!

இந்த வரிகளை எழுதும்போது எஸ்.பி.எம் தேர்வில் 6 A க்கள் பெற்று மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காமல் எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதிய நம் மாணவி ஒருவர், எஸ்.டி.பி.எம் தேர்வில் சாதாரண மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருப்பதால் தம் எதிர்கால இலட்சியங்களை கண்ணீரில் கரைதுக்கொண்டிருப்பதாக தொலைபேசியில் விம்முகிறாள் !!

இன்னும் எத்தனை அப்பாவி  எம் குல இளம் நெஞ்சங்கள் வெற்றியிலும் வீழ்ந்து கதறுகிறார்களோ…. என்று தணியும் இந்த இனத்துவேசம் !!!

வி.சம்புலிங்கம்
தேசிய ஒருங்கிணைப்பாளர்,
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.

TAGS: