13வது பொதுத் தேர்தல்: வாக்காளர் முன்பு வைக்கப்பட்டுள்ள தேர்வுகள்

[-டெரன்ஸ் நெட்டோ]

13வது பொதுத் தேர்தல் எந்த மாதம் நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் போட்டிக் கூட்டணிகள் வழங்கப் போகும் தேர்தல் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கம் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

அம்னோ / பிஎன் வழங்குவது இது தான்: பொருத்தமான முதலாளித்துவம் அவ்வப்போது சிரமப்படும் மக்களுக்கு பிச்சைகள். அதே வேளையில் பக்காத்தான் ராக்யாட், பினாங்கு, சிலாங்கூரில் காட்டப்பட்டுள்ளது போல சமூக ஜனநாயகம் ஆகும்.

தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது நமக்குத் தெரியாது- ஆனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அது நிகழவேண்டும். அந்த நிலையில் நாம் ஒவ்வொரு கூட்டணியின் சமூக பொருளாதார கொள்கைகளை நாம் இப்போது அறிந்துள்ளோம்.

ஆகவே 13வது பொதுத் தேர்தலை ஒட்டி வாக்காளர் முன்பு தெளிவான விவரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் அந்தத் தேர்தல் புதுமையானது என துணிந்து கூறலாம். வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் தேர்வைச் செய்ய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் பொருத்தமான முதலாளித்துவம். அதன் தாக்கத்தைக் குறைக்க அவ்வப்போது ஏழை மக்களுக்கு பிச்சை போடுவது. அது தான் பிஎன்.

அதே வேளையில் தான் எப்போதும் ஏழை மக்களுக்கே சலுகை அளிக்கப் போவதாக பக்காத்தான் கூறுகிறது.

மலேசியக் குடும்பங்களில் 60 விழுக்காடு மாதம் ஒன்றுக்கு 1,500 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தில் வாழ்வதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அது உண்மை என்றால் தங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளா விட்டால் அல்லது பக்காத்தான் ஆற்றலில் நம்பிக்கை இல்லா விட்டால்  வாக்களிக்க கையூட்டுக் கொடுக்கப்பட்டால் தவிர பெரும்பாலான வாக்காளர்கள் பக்காத்தான் பக்கம் சாய வேண்டும்.

இரண்டு போட்டிக் கூட்டணிகளும் நேர்மாறான தங்களது நிலையை உறுதிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர் கல்விக் கடன்கள் பற்றிய விவகாரம் உதவியுள்ளது.

மாணவர்கள் இது நாள் வரையில் 43 பில்லியன் ரிங்கிட் கடனை செலுத்த வேண்டியுள்ளது. அந்தக் கடன்களை வராத கணக்கில் எழுதுவது நிதி அடிப்படையில் கிறுக்குத்தனமானது என பிஎன் கூறுகிறது.

விரயத்தைக் கட்டுப்படுத்தி, சேவகர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தி, சிக்கனத்தை கடைப்பிடித்தால் அந்தக் கடன்களை சில ஆண்டுகளில் சரி செய்து விடலாம் என பக்காத்தான் கருதுகிறது.

பக்காத்தானை நம்பலாமா ?

சிலாங்கூரிலும் பினாங்கிலும் உபரி

பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங் நிர்வாகம் 600 மில்லியன் ரிங்கிட் கடனுடன் மாநில அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டது. அந்த நிர்வாகம் அந்தக் கடனை நான்கு ஆண்டுகளில் 30 மில்லியன் ரிங்கிட்டாக குறைத்துள்ளது. சிலாங்கூரில் காலித் இப்ராஹிம் நிர்வாகம் கடந்த ஆண்டு செலவு போக வருமான உபரியாக 1.9 பில்லியன் ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளது.

2007ம் ஆண்டு ஈஜோக் இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்ட பொருளாதார நிபுணரான காலித் இவ்வாறு கூறினார்: “பிஎன் நிர்வாகம் செலவு செய்யும் ஒவ்வொரு ரிங்கிட்டுக்கும் ஒரு ரிங்கிட் விரயமாகிறது”

அவர் நிர்வாகத்தில் தமது பொருளாதார சிந்தனைகளை நடப்புக்குக் கொண்டு வந்து பெரிய அளவு உபரியைப் பதிவு செய்துள்ளார்.

பக்காத்தான் முன்மொழிந்துள்ள ஆளுமைக் கோட்பாடுகளை அமலாக்கி பினாங்கு, சிலாங்கூர் மக்களுக்கு சமூக நல சகாயங்களை வழங்கிய பின்னர் தங்கள் நிர்வாகங்களுக்கு லிம்-மும் காலித்தும் உபரியை அளித்துள்ளனர்.

அவர்களது நிர்வாகங்கள் சமூக ஜனநாயகத்தை காட்டின. அதனால் கூட்டரசு நிலையில் தனது நிர்வாகம் பினாங்கு, சிலாங்கூர் எடுத்துக் காட்டுக்கள், விரிவுபடுத்துவதாக இருக்கும் என பக்காத்தான் கூறுவது மீது நம்பிக்கை ஏற்படுகிறது.

உண்மையில் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் பக்காத்தானின் முகமட் நிஜார் ஆட்சி புரிந்த போது அவரது நிர்வாகத்தின் முக்கியக் கொள்கையாக சமூக ஜனநாயகம் விளங்கியது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் நிலத்தில் பயிர் செய்து வரும் குடியானவர்களுக்கே அந்த நிலத்தைக் கொடுக்க நிஜார் தயாராக இருந்தார். அது பலரது வரவேற்பைப் பெற்றது. மோசடியான வழிகளில் அவரது நிர்வாகம் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர் எடுத்த நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.

பக்காத்தான் மாதிரி

நிஜார், பேராக் சட்டமன்றத்தில் இருந்த பக்காத்தான் கூட்டணியில் சிறுபான்மை பாஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரது நடவடிக்கைகள் இன, சமய வேறுபாடின்றி அமைந்திருந்ததால் அனைவரது வரவேற்பையும் பெற்றன.

அவரது செல்வாக்கு அதிகரித்தது, கூட்டரசு அதிகார வர்க்கத்துக்கு மருட்டலை ஏற்படுத்தியது. அதனால் அவரை விரைவாக வெளியேற்ற அது சதி செய்தது.

நிச்சயமாக ஒருவர் கெடாவில் உள்ள பாஸ் கட்சியின் அஜிஸான் அப்துல் ரசாக் நிர்வாகத்தின் தவறான் போக்கைக் கண்ணோட்டமிடுவது திண்ணம். நிஜார் பக்காத்தான் மாதிரியைப் பின்பற்றினார் என்பதே உண்மை.

நிஜாருடைய சில சான்றுகள் மட்டும் போதாது என நீங்கள் கருதினால் லிம், காலித் எடுத்துக்காட்டுக்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சொன்னால் சமூக ஜனநாயக கொள்கைகளை வலியுறுத்திய நிஜார் நிர்வாகம் பேராக்கில் செல்வாக்கு பெற்றிருந்தது. பினாங்கில் லிம் நிர்வாகமும் சிலாங்கூரில் காலித் நிர்வாகமும் அப்படித் தான் உள்ளன. அதனால் கூட்டரசு நிலையில் சமூக ஜனநாயகக் கொள்கைகளை அமலாக்க பக்காத்தான் அளிக்கும் வாக்குறுதியை நம்ப முடியும்.

மாணவர்கள் எடுத்துள்ள உயர் கல்விக் கடன்களை வராத கணக்கில் சேர்க்க பக்காத்தான் ஆயத்தமாக இருப்பதும் தொடக்கப் பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை இலவசக் கல்வியை வழங்க பக்காத்தான்

வாக்குறுதி அளித்திருப்பதும் வானாளவிய வாக்குறுதிகள் அல்ல. முறைகேடான தலைமைத்துவத்தின் வழி நீண்ட காலமாக சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளத்தை பெருமளவு கொண்ட நமது நாட்டில் சாதிக்கப்படக் கூடிய சமூக ஜனநாயக இலட்சியங்களாகும்.