டத்தோ தனேந்திரன் + டத்தோ நல்லா = சமுதாயம் ???

அனைத்துலக விமான நிலயத்தில் தமிழ் மொழியை பயணிகள் அனைவரின் காதிலும் தேனாய் பாய யார் காரணம்? என்றக் கயிறிழுக்கும் போட்டி இன்று இரண்டு டத்தோக்களுக்கும் ந(ல்லா)ன்றாகவே அரங்கேறியுள்ளது.

சக்தி அறவாரியத்தின் சார்பாக (கவனிக்க இதன் தலைவர் டத்தோ தனேந்திரன் அவர்கள்) பிரதமர் அவர்களின் தனிப்பட்ட முறையில் வழங்கிய பணமுடிச்சால் (எவ்வளவு தொகை வழங்கினார் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்) சமீபத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் முனைவர் இராஜேந்திரன் வழிநடத்தலில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து நாவல்கள் இலவசமாக வெளியீடுக் கண்டது .(அடுத்தது 10 நாவல்கள் தமிழகத்தில் அச்சேறிவருவதாகவும் மே 12ல் வெளியீடுக் காண இருப்பதாகத் தகவல்) அந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அவரின் உரையின் ஒரு பகுதி இதோ.

“………..கே.எல்.ஏ விமானநிலையத்தில் தமிழ் இடம் பெற்றதற்கு .யார்யாரோ காரணம் என்று பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கின்றனர். மற்றவர்களைவிட நான் தான் பிரதமரிடம் மிகவும் நெருக்கமாக இருக்கின்றேன்.எப்பொழுது எதை எப்படிக் கேட்க வேண்டும் அல்லதுபேசவேண்டும் என்பது எனக்கு மட்டுமேத் தெரியும். நான் கேட்டதை அவர் தட்டிக் கழித்ததில்லை. விமான நிலையத்தில் தமிழ் வேண்டும் என்று சரியான நேரத்தில் நான் கேட்டதால்தால் ஏற்றுக் கொண்டார்” என்றார்.
மிக சமீபத்தில் மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் டத்தோ நல்லக்கருப்பன் அவர்கள், விமான நிலையத்தில் தமிழுக்குக் காரணம் தான் மட்டுமே என்றார் வீராப்புடன்.

அப்படியென்றால் ம.இ.கா. இந்த விடயத்தில் வழக்கம் போல கும்பகர்ணமா?

ஐ.பி.எப்பில் குடுமி சண்டைக்கே நேரம் சரியாக இருந்ததா?

பி.பி.பி. பல் பிடுங்கப் பட்ட சிங்கமாக அடங்கி விட்டதா?

எத்தனையோ மன்றங்கள், தனிமனிதர்கள் பிரதமருக்கு அனுப்பிவைத்த மகஜர் வெறும் கானல் நீர்தானா?. இருந்த போதும் சமீபத்தில் இந்தியர்களில் சிலருக்கு பிறப்புப் பத்திரம் மற்றும் குடியுரிமைகள்

கிடைப்பதற்கும் இந்த டத்தோக்கள் தான் காரணமா?

எல்லாவற்றிற்கும் பல்லை இளித்துக் கொண்டிருந்த இந்திய சமுதாயத்தை ஹின்ட்ராப் என்றக் கடிவாளத்தின் மூலம் ஒருங்கினைத்தப் பாண்டவர்களில் ஒருவர் தான் இந்த டத்தோ தனேந்திரன். எல்லாவற்றிற்கும் பிச்சைக்காரத்தனமாகக் கையேந்தும் நிலை வந்துவிட்டப் போது, இவர்களின் போராட்டம் நம்பிக்கையை விதைத்தது. ஆனால் நடந்தது என்ன?.

தியாகங்கள் சுயநலமாய் போனது. இனவெறி அரசாங்கத்தை எதிர்த்து எங்களை தெருப் போராட்டத்தில் இறக்கிவிட்டு, இன்று எங்களை மீண்டும் தெருவில் கையேந்த வைத்தற்கானப் பரிசுதான் இந்த டத்தோ என்ற அங்கீகாரம்.

டத்தோ நல்லாவின் நிலை வேறு மாதிரியானது. டத்தோஸ்ரீ அனுவாரின் மிக நெருங்கிய நண்பராகவும் இருந்த இவர், டத்தோ தனேந்திரன் போல், சமுதாயத்திற்காக என்றுமேக் குரல் கொடுத்து சிறை சென்றவர் கிடையாது. டத்தோ அனுவார் இப்ராஹிமின் அரசியல் எழுச்சியை சின்னாபின்னமாக்க முன்னால் பிரதமரின் வியூகத்தால் வகுக்கப் பட்ட நேர்த்தியான சூழ்ச்சியில், சுய நலத்துக்காக உற்ற நண்பனையேக் காட்டிக் கொடுத்து, கண்துடைப்புக்காக  வீட்டில் சுடும் ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச் சாட்டில் கைதானவர்தான் டத்தோ நல்லா.

அதற்கு முன்பாகவே டத்தோஸ்ரீ சாமிவேலுவின் வலதுக் கையாகத் திகழ்ந்து, பண விடயத்தில் சில மில்லியன்களை நம்பிக்கை மோசடி செய்ததால், அங்கிருந்துத் துரத்தப் பட்டவர் என்பது ம.இ.காவின் மேல்மட்டத்தில் இருக்கின்ற முனுமுனுப்பு.

ஆளுங்கட்சிக்கு உண்மையாக் இருக்கவேண்டும் என்று நினைத்தால், இப்பொழுது ஜிங்ஜாக் போட்டுக்கொண்டிருக்கும் மூன்றில் ஏதாவது ஒருக் கட்சியில் சேர்ந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் சுயநலம் பாதிக்கப்பட்டிருக்கும். இப்பொழுதுக் கிடைக்கும் வருமானம் இல்லாமலேயேப் போயிருக்கலாம்.
2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சுயநலத்துக்காக இந்தியர்களில் பலப் பிளவுகள் திட்டமிடப்பட்டே ஏற்படுத்தப் பட்டன என்பது தெளிவு.

2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, ம.இ..கா., ஐ.பி.எப்., பி.பி.பி., கெராக்கான், டி.ஏ.பி. போன்றக் கட்சிகளில் பெரும்பாலான இந்தியர்கள் இருந்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தேர்தலுக்குப் பிறகு, உதயக்குமார் மற்றும் தனேந்திரனும் ஹிண்ட்ராப்பை நஜீப்புக்கு ஆதரவாக உடைத்தனர்.
டத்தோ நல்லா மற்றும் டத்தோ சயிட் இப்ராஹிம் தனித்தனிக் கூட்டத்தை சேர்த்துக் கொண்டனர்.

ஆந்திரர்களின் எழுச்சி மிகவும் வேகமாக நடை பெற்றுக் கொண்டிருக்க, கேரள சமுதாயத்தினர் தங்களுக்குள்ளாகவே ஒரு வேலியை அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

உதயக் குமாரைத் தவிர மற்றவர்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு, பிரதமர் செல்கிறார் பிரதமரின் நடவடிக்கை அம்னோக்காரர்களை முகம் சுழிக்க வைத்தாலும், கிருஸ்மஸ் தாத்தா போல வாரி வழங்குகின்றார். மலாய்க்காரர்களும் சீனர்களும் யாரை ஆதரிக்கவேண்டும் என்பதில் தெளிவாய் இருக்க, இந்தத் தேர்தலில் பாரிசானின் வெற்றியை நிர்ணயிக்க இந்தியர்களின் ஓட்டு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
பணபலத்தால் இந்தியர்களை வாங்க முடியும் என்பதை உலகம் முழுவதும் தெளிவாகவே புரிந்து. வைத்துள்ளனர்.

வீரப் பாண்டிய கட்டபொம்மனுக்கு ஓர் எட்டப்பன்

தலைவர் பிரபாகரனுக்கு இரண்டு கருணாக்கள்

மலேசியாவில் பல கால் நக்கிகள். அதில் இந்த இரண்டு டத்தோக்களும் அடங்கும்.

இவர்களை சுற்றியுள்ளக் கூட்டம் சிந்தனையில் தெளிவு பெறவேண்டும் விமான நிலையத்தில் தமிழ் என்பதும், தமிழ்ப்புத்தகங்கள் வெளியீடு என்பதும் சமுதாயப் பிரச்சனைகள் அல்ல. சுய நலத்துக்காக பிளவுக்கு மேல் பிளவுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் காரணக்கர்த்தாவை அடையாளங்கண்டு, இருக்கும் கட்சிகளைப் பலப்படுத்தி, கட்சியின் தலமைத்துவத்தை உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒருமித்தக் குரலில் ஒலிக்க வேண்டும். டத்தோ என்றாலே சுயநலவாதிகள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றக் கூற்றைப் பொய்யாக்க வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு.

கா. கலைமணி, கிள்ளான்

TAGS: