இந்த வயதிலும், இத ‘வெயிட்டிலும்’ நீங்கள் இப்படி ஓடியாடிக் கொண்டிருப்பது நீங்கள் நலம் என்பதைக் காட்டுகிறது.
எப்போதோ யாருக்கோ நீங்கள் செய்த தருமங்கள் உங்களை இப்போது காத்துக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களை வெறுத்தபோதும் இன்னும் தெம்பாக வலம் வருகிறீர்களே…
நிற்க,
கடந்த பொதுத் தேர்தலில் உங்களின் தோல்விக்கான பல காரணங்களில் சில:
1. ‘ஹிண்ட்ராப்’ எழுச்சி, அந்த ஹிண்ட்ராப்’ஐ அப்போது நீங்கள் ஏளனப்படுத்திப் பேசி அறிக்கை விட்டது.
2.. 20 ஆண்டுகளுக்கு மேலாக, மகாதீரர், மகாவீரர், தர்மர், பீஷ்மர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிய உங்களின் அந்த ‘பிதாமகன்’ மகாதீர் கடந்த பொதுத்தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் உங்களுக்கு எதிராக விட்ட அறிக்கை.
3. அந்த ‘பிதாமகன்’ சுங்கை சிப்புட் அம்னோவை உங்களுக்கு எதிராக திருப்பிவிட்டது
4. மைக்கா தோல்வி
5. தைப்பூசத்துக்கு நீங்கள் விடுமுறையே கேட்டதில்லை என்று மகாதீர் சொன்னது.
6. கிள்ளான் பாடாங் ஜாவா மாரியம்மன் ஆலயத்தை (நீங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும்) தோயோ அதை உடைக்கச் செய்தது.
7. சிறைகளில் நமது கைதிகளின் ‘படுகொலைகள்’
8. அந்நியத் தொழிலாளிகளால், நமது இளையோர் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது.
மேற்சொன்ன காரணங்களில் சில நீங்கள் அறிந்தவையே. இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் காலம் காலமாக கொண்டாடிய மகாதீரே உங்கள் காலை வாரிவிட்டது..!
இப்போது நீங்கள் உங்கள் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்து நஜீபுக்கு நீங்கள் அடிவருடுவது என்ன நியாயம்?
நஜிப், இடைத்தேர்தல்களில் ‘வாரி வழங்கும்’ 5 கிலோ அரிசி, 1கிலோ சீனி தவிர மற்ற எல்லாமே வெற்று வாக்குறுதிகள் தாம்.
1.தமிழ்ப்பள்ளிகளுக்கான மாதிரி காசோலைகள் வெறும் மாதிரிக்குத்தான்.
2. ‘மெட்ரிகுலேஷன்’ இடங்கள் வெறும் ‘வெட்டிக்’குலேஷன் இடங்களாக இழுபறியாக கிடக்கிறது.
3. நஜிபின் ‘உருமாற்றுக் கொள்கைகள்’ எந்த மாற்றத்தையும் நம்மிடம் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த ‘உருமாற்றல்’ மற்றும் கலந்துரையாடல்களால் சிலர் வேண்டுமானால் பலன் அடையலாம் மற்றபடி சமுதாயத்துக்கு பலன் எதுவும் இல்லை.
4. பெர்சே 3.0க்கு ஆதரவு இல்லை என்று நீங்கள் சொல்வது தவறு. போக்குவரத்தைக் கட்டுப்படுத்திவிட்டு, கூட்டத்துக்கு தடைவிதித்து விட்டு இப்படிச் சொல்வது பேடித்தனம். அடுத்து பெர்சே 4.0-க்கு போலிஸ் அனுமதிப் பெற்றுக்கொடுங்கள். அதன் பின்னரும் இந்தியர்கள் அங்கே கூடவில்லை என்றால், தோல்வியை ஒத்துக் கொள்கிறோம்.
மற்றபடி எதிரியின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, “நான் வென்றுவிட்டேன்” என்று கூப்பாடுப் போடுவதை எண்ணி எப்படி சிரிப்பது?
(ஒன்று மட்டும் நிச்சயம் சாமி: நஜிபுக்கும், பாரிசானுக்கும் எப்படியெல்லாம், எங்கிருந்தெல்லாம் கூட்டம் வருகிறது, கூட்டி வருகிறார்கள் என்பது எங்களூக்குத் தெரியும்.
அது போல பெர்சேவுக்கும், பக்காத்தானுக்கும் வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம் என்பது உங்களுக்கும் தெரியும்.
நீங்கள் சொல்வதிலிருந்து ஒன்று புரிகிறது. இதுவரை இருந்த பிரதமர்களில் இருந்து நஜிப் மாறுபட்டவர் என்று சொல்ல வருகிறீர்கள். அவரின் இந்த (ஏ) மாற்றத்துக்கு காரணம், 2008-ல் விழுந்த அடிதான்.
மற்றபடி கடந்த பொதுத்தேர்தலில் பாரிசான் 2/3 பெரும்பான்மை பெற்று பிறகு நஜிப் பிரதமராகி இருந்தால், நாட்டிலிலேயே மிக மோசமான சர்வாதிகார பிரதமராக அவர் ஆகியிருப்பார்.
ஒருவேளை (நன்றாக கவனிக்கவும், ஒருவேளை) வரும் பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையுடன் நஜிப் வெற்றிபெற்றுவிட்டால், அவர் தலைகீழாக மாறினாலும் மாறிவிடுவார்.
காரணம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது அல்லவா? அதுமட்டும் அல்ல. அந்த 5 ஆண்டுகளில் மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்திவிடுவார்; அன்வாருடன் சமரசம் செய்து கொள்வார்.
ஆனால், அடுத்த 5 ஆண்டுகள் என்ன அடுத்த 500 ஆண்டுகளுக்கும் நாங்கள் மீண்டும் கொத்தடிமைகள்தான்.
இதற்காகவே நாங்கள் மாற்றத்தை கொண்டுவந்தாக வேண்டும். எங்கள் அடுத்தடுத்த சந்ததியினரின் எதிர்காலத்தை பணயம் வைக்க நாங்கள் தயாரக இல்லை.
எனவே, இந்த நாட்டு இந்தியர்களை சுயமாக சிந்தித்து வாக்களிக்க விடுங்கள். போகிற காலத்தில் உங்களுக்கு புண்ணிமாவது சேரட்டும்!
-மறவன்