தமிழ் நாளிதழின் ஆங்கில இணைப்பு அழிவிற்கு வழி வகுக்கும்

கடந்த 88 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தொடர்ந்து வெளிவரும் மூத்த தமிழ் நாளேடு தமது வரலாற்றுச் சாதனையாக ஆங்கில இணைப்பு ஒன்றை 16 பக்கங்களைக் கொண்டு ( இயல்பு  அளவைக் கொண்டு பார்த்தால் 8 பக்கங்கள்) இன்று 15.09.2012 முதல் வெளியிடத் தொடங்கியுள்ளது.

வார இணைப்பாக இது வெளிவரும் என்று தெரிகிறது. தமிழ் நாளிதழ் ஒன்று தமது வெளியிட்டுடன் ஆங்கில இணைப்பு ஒன்றையும் இணைத்து வெளியிடுவது இதுதான் முதன்முறை என்று அதன் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து தவறானது என்றே நான் கருதுகிறேன். காரணம் இந்த நாளிதழ் வார இதழாக 1924ஆம் ஆண்டுகளில் வெளிவரத் தொடங்கிய போதே இரு மொழி ஏடாக தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வெளிவர தொடங்கியது என்பதுதான் வரலாறு என்று நினைவு. அது மட்டுமல்லாமல் அன்றைய நாளில் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ்கள் பெரும்பாலானவை ஆங்கிலத்திற்கும் இடம் தந்திருந்தன என்பது மலேசிய தமிழ் இதழியல் வரலாற்றைப் படிக்கும் போது தெரிகிறது.

இந்திய சமுதாயம் தொடர்புடைய செய்திகளுக்கு மலாய் ஆங்கில ஏடுகள் முன்னுரிமை தருவதில்லை என்றும் முன்னுரிமை தரும் தமிழ் இதழ்களை பிற மொழி ஊடகங்களை மட்டும் படிக்கும் தமிழ் தெரியாத இந்திய வாசகர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள அந்த நிர்வாகி இந்த இடைவெளியைக் குறுக்கி இந்திய சமுதாயம் தொடர்புடைய தகவல்களை அனைத்துத் தரப்பினருக்கும் தருவது தங்களின் நோக்கம் என்கிறார். தமிழர்களில் பலருக்குக் தமிழ் தரியாது என்பதும், தமிழர் என்ற அடையாளத்திலும், இந்தியர் என்ற முகவரியிலும் தெலுங்கர், மலையாளி, பஞ்சாபி இன்னும் பலர் இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஆங்கில இணைப்பு வெளியிடப்பட்டாலும் அன்றும் இன்றும் என்றும் தமிழ்தான் ஊன்றுகோல் என்று ஒரு இடத்திலும், தமிழ்தான் எங்கள் உயிர், முதலும் அன்புக்குரியதுமான மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊன்றுகோல் என்று சொல்வதிலிருந்தே தமிழ் இதழ்களை நடத்தும் இவர்கள் தமிழை தங்கள் வயிற்றுப் பிளைப்பிற்கு ஒரு கருவியாக கருதுகின்றனரே தவிர தமிழுக்கு உரிய மரியாதையைத் தருவதில்லை என்று தெரிகிறது. தமிழ் ஊன்றுகோல் என்பது வேறு, தமிழ் உயிர் என்பது வேறு.

இத்தகைய பீடுகையுடனும் முன்னுரையுடனும் வெளிவந்திருக்கும் ஆங்கில இணைப்பில் வழக்கமான பழைய மொந்தையைத்தான் புதிய பாத்திரத்தில் தந்துள்ளார்கள் என்றே நான் கருதுகிறேன். இது எந்த அளவிற்கு இந்திய சமுதாயத்தின் தரத்தை உயர்த்தும் என்று எனக்குத் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் தமிழ் நாளிதழ்கள் தமிழ் நாளிதழ்களாகவும் தமிழுக்கும் தமிழருக்கும் ஆக்கமூட்டும் இதழ்களாகவும் வெளிவர வேண்டுமே தவிர கலப்பட இதழ்களாக வெளிவருவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாறாக கேடுதான் வந்து சேரும் என்பது எனது கருத்தாகும்.

பொதுவாக மலேசிய இந்தியர்களில் 15 விழுக்காட்டினராக இருக்கும் தமிழர் அல்லாதவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களுக்கே தமிழின் மீது உயர்ந்த எண்ணம் இருப்பதில்லை. காரணம் அவர்களில் மிகப் பலர் தமிழின் உயர்ந்த படைப்புகளையோ கருத்துக்களையோ படிப்பதுமில்லை பார்ப்பதுமில்லை, படித்தவர்கள் சொல்லி கேட்பதுவும் இல்லை.

நுனிப்புல்லை மேய்ந்த கதையாக மேலோட்டமாக நொரறுக்குத் தனி தின்பதைப் போல் வெறும் பொழுது போக்கு இதழ்களையும் ஊடகச் செய்திகளையும் படித்துவிட்டு அதுதான் தமிழ் அதில் என்ன உயர்வான கருத்துகள் இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கின்றனர். அவர்களில் யாரும் தமிழின் சுவை கண்டார் இங்கு அமரர் நிலை கண்டார் என்ற பாரதியின் உள்ள உணர்வை உணர்ந்தவர்கள் அல்ல.

தமிழின் சிறப்பையும் உயர்வையும் பெருமையையும் உலகின் முதல் தாய்மொழி செம்மொழி என்ற தனிப்பெரும் அடையாளத்தையும் அறியாதவர்களே மிகமிகப் பெருபான்மையினராக இருப்பதால் அவர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுந்தது போல இது போன்ற சிந்தனைகள் வரவேற்கத் தக்கதாக இருக்கும். விழுந்து விழுந்து வரவேற்பார்கள். அதன் விளைவு பிற்காலத்தில் எத்தகையப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அவர்களில் பலர் உணர்வதில்லை.

தமிழ் அறியாதவர்களுக்கு தமிழர் சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்ப்பதில் தனி கவனம் செலுத்திச் சிந்திக்கும் இந்த தமிழ் நாளிதழ் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்கள் காலமெல்லாம் தமிழ் நாளிதழ்களை வாங்கியும் அதன் வழி தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் வாசகர்களுக்குத் தரமான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் அவர்களின் சிந்தனைத் திறன்களை உயர்த்த வேண்டும் என்பதிலும் ஏன் அக்கறை காட்டுவதில்லை?

அரைவேக்காடு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பிணங்களை வைத்துக் கொண்டு ஒப்பாரி வைக்கும் செய்திகளையும் குத்து கொலை செய்திகளையும் வன்முறை கலாச்சாரங்களையும், நம்மை நாமே காரி உமிழ்ந்து கொள்ளும் கயமைத் தனமான செய்திகளையும், கூத்தாடிகளின் குப்பைகளையும், குட்டிச்சவரான குட்டிக் குட்டித் தலைவர்களின் செய்மதிகளையும் குட்டித் தலைவர்களின் செய்திகளாக இருந்தாலும் பரவாயில்லை அடையாளம் தெரியாத அன்னக்காவடிகள் செய்திகளையும் பக்கம் பக்கமாகப் போட்டு சமுதாயத்தை குட்டிச்சுவராக்கியது யார்? தமிழ் நாளிதழ்கள் தானே.

தமிழ்படிக்கத் தெரியாதவர்கள் வேறு யாராலும் உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. தமிழ் வேண்டாம் என்று தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் தமிழ் நாளிதழ்களில் ஆங்கிலம் வருகிறது என்பதற்காக தமிழ் நாளிதழ்களை வாங்கி அதன் வழி தமிழையும் படித்துக் கொள்பவர்கள் என்று எதிர்பார்ப்பது விழலுக்கு இரைத்த நீராக வீணாகும். அப்போதும் தமிழ்ர்,இந்தியர் சார்ந்த செய்திகள் தமிழ் நாளிதழ்களில் ஆங்கிலத்தில் விரிவாக வருகிறதே என்று கருதி ஆங்கிலத்தைப் படித்துவிட்டு தமிழைப் புறக்கணிப்பார்களே தவிர தமிழைப் படிக்க மாட்டார்கள்.

தமிழ் தெரியாதவர்களுக்காக இந்த அளவிற்கு சிந்திக்கும் இவர்களுக்கு தமிழ் தெரிந்த 12 இலட்சம் இந்தியர்களை தமிழ் நாளிதழ் வாசகராக கவர்வதற்கு தகுதி உண்டா என்று கேட்க விரும்புகின்றோம்.

இந்நாட்டில் ஆரம்பக் கல்வி பயிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டு மாணவவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் பயில்கிறார்கள் இந்நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு முன்னர் மொத்த மாணவர்களில் 60 லிருந்து 70 விழுக்காடு வரை  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இருந்துள்ளனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் பிற மொழிப் பள்ளிகளில் பயின்றாலும் தமிழை கருத்தூன்றிப் படித்து தமிழை வாசிக்கும் திறன் பெற்றறவர்களும், சுயமாக தங்களின் பெற்றோர்கள் பெரியவர்கள் உதவியுடன் தமிழ்ப் படித்தவர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படி என்றால் இன்று தமிழை வாசிக்கத் தெரிந்த வாசகர் எண்ணிக்கை சராசரியாக 65 விழுக்காட்டினர். ஆகவே மொத்த மலேசிய இந்தியர் மக்கள் தொகையான 18 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் தமிழ் வாசிக்கக் கூடிவர்களாக இருக்கின்றனர்.

அவர்களில் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களையும், நாளிதழ்கள் வாங்க பணம் செலவிட நாட்டமில்லாதவர்களையும் நீக்கி மீதம் தேறும் ஏறத்தாழ 5 லிருந்து 6 இலட்சம் வரையுள்ள தமிழ் வாசகர்களை இவர்களால் கவர முடியுமா? அதற்கு ஆக்ககரமான திட்டங்கள் எதுவும் உண்டா? ஐந்து தமிழ் நாளிதழ்களும் சேர்ந்து 80 ஆயிரம் வாசகர்களைக் கவர முடியாத இவர்கள், இருக்கும் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையையும் குறைக்கவும் கெடுக்கவும் செய்யும் இது போன்ற முயற்சிகள் கண்டிக்கத் தக்கதாகும். இனமானமுள்ள தன்மானத் தமிழர்கள் சிந்திப்பார்களா?

—————————————————–

– தன்மானமுள்ள தமிழன் பேரா குமரன்