பெர்லிஸ் பல்கலைக்கழக (யுனிமேப்) மாணவருக்கு எதிரான கட்டொழுங்கு நடவடிக்கை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்ற பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும் என்று உயர்கல்வி அமைச்சு கருதுகிறது.
யுனிமேப்பின் கட்டொழுங்கு விதிகள் அரசமைப்புக்கு முரணானவை என்ற தீர்ப்பு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதில் பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார்.
“அத்தீர்ப்பு, பல்கலைக்கழக அதிகாரத்தையும் மீறி மாணவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள் இருப்பதைக் காண்பிக்கிறது.
“மாணவர்கள் தங்கள் உரிமைகளை முறைப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.
‘மாணவர்கள் விருப்புரிமை உண்டு’
“மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்பட யாரிடம் வேண்டுமானாலும் சட்ட ஆலோசனை பெறலாம்,அதற்குத் தடை இல்லை”, என்றாரவர்.
இதனிடையே உயர்கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் ருஜ்ஹான் முஸ்தபா, அத்தீர்ப்பு அதேபோன்ற ஒழுங்குவிதிகளைக் கொண்டிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களைப் பாதிக்கும் என்றார்.
அதை அமைச்சு ஆராய்கிறது என்றும் அவர் சொன்னார்.
யுனிமேப், வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்றதற்காக மாணவர் முகம்மட் இஸுவான் ஜைனி(வலம்)யை 66-நாள் இடைநீக்கம் செய்ததுடன் ரிம100அபராதமும் விதித்ததை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
அத்துடன் நீதிபதி இஸ்கண்டர் ஆபாங் ஹஷிம், பல்கலைக்கழகம் பொறியியல் துறை மாணவரான முகமட் இஸுவானுக்கு ரிம5,000 செலவுத் தொகையும் கொடுக்கும்படியும் உத்தரவிட்டார்.