“அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள்- ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும்- பிடித்தன.”
இப்போது கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட்
ஜியூடைஸ்: மலேசியர்கள் ஆட்சேபித்து வருவது, கூட்டரசு அரசாங்கக் கடன்கள் அதிகரித்து வருவதைப் பற்றி அல்ல. மாறாக ஊழலும் விரயமும் பெருகி வருவது பற்றியே மக்கள் கவலைப்படுகின்றனர். அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
நமது பணத்தை விவேகமாகச் செலவு செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விவேகமும் பொறுப்பும் முக்கியமான சொற்கள் ஆகும்.
ஒப்பா: மலாயா/மலேசிய அரசாங்கம் 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு 50 ஆண்டுகள் (1957-2007) பிடித்தது.
அடுத்த அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள் – ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் – பிடித்தன. நமது பணத்தை அந்த மனிதர் இப்படி செலவு செய்வதை நாம் தாங்கிக் கொள்ள முடியாது.
ஜஸ்டிஸ் பாவ்: அந்த 504 பில்லியன் ரிங்கிட் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காடு) கடன் உண்மையான விவரம் இல்லை. சேவகர் நிறுவனங்களுக்கு உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்டுள்ள கடன்கள் அளவு அதில் சேர்க்கப்படவில்லை. அதனைச் சேர்த்தல் அது உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67 விழுக்காடாக இருக்கும்.
நஜிப் பொறுப்பேற்றது முதல் கூட்டரசுக் கடன் இரு மடங்கு கூடியுள்ளது. அந்தப் பணம் எங்கே போனது ? அரசாங்கம் கடன் வாங்கும் போது நாமும் கடன்காரர்களாகி விடுகிறோம். ஒவ்வொரு குடிமகனும் 180,000 ரிங்கிட் கொடுக்க வேண்டியிருக்கும்.
நடப்பு கடன் விகிதம் இஸ்ரேல், இத்தாலி அளவைப் போன்று உள்ளது. அவர்கள் இன்னும் ‘திருடினால்’ நாம் நிச்சயம் கிரீஸ் நாட்டைப் போல மாறி விடுவோம்.
ஆகவே வாக்காளர்களே, அந்தக் கடன்களிலிருந்து நாம் விடுபட வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா ? அப்படி என்றால் 13வது பொதுத் தேர்தலில் அவர்களை நீங்கள் வெளியேற்ற வேண்டும்.
ஸ்டார்ர்: நாட்டின் பொது நிதிகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதற்கு அவை சான்றுகளாகும். 1988ம் ஆண்டு தொடக்கம் அரசாங்கக் கடன்கள் கூடிக் கொண்டு வருகின்றன. அதாவது ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் மெகா திட்டங்களை தொடங்கிய பின்னர். அது படிப்படியாக உயர்ந்து இப்போது 503 பில்லியன் ரிங்கிட்டாக பெருகியுள்ளது. அந்த அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 விழுக்காடு ஆகும். அது உச்சவரம்பான 55 விழுக்காட்டை கிட்டத்தட்ட எட்டி விட்டது.
பொது மக்கள் அச்சம் தெரிவித்த போதிலும் கடன்கள் ‘சமாளிக்கும்’ நிலையில் இருப்பதாக அரசாங்கம் வாதாடுகின்றது. இது பொறுப்பற்ற கூற்றாகும்.
அபாசிர்: வீழ்ச்சியை அறிந்து கொண்டு அதனைத் தடுக்க முயலாத எந்த நாடும் வரும் பேரழிவை எதிர்கொள்ளத் தான் வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் தங்களைச் சுற்றி எல்லாம் விழும் போது தங்களைப் பத்திரமாக காப்பாற்றிக் கொண்டு விடுவர். BR1M என்ற உதவித் தொகைக்காக தங்களை விற்கின்ற பார்வையற்றவர்கள் மட்டுமே துன்பத்திற்கு இலக்காவர். அதில் அபாய ஒலியை எழுப்பிய சாதாரண குடிமக்களும் சிக்கிக் கொள்வது தான் துரதிர்ஷ்டமானது.
முட்டாள்தனத்துக்கு நிச்சயம் விலை கொடுக்கத்தான் வேண்டும்.
சரியானவன்: பிஎன் இன்னும் தன் பணியை முடிக்கவில்லை ! வரவு செலவுத் திட்டம் என்பது பயனற்றது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் துணை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுகின்றது.
தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் தவணைக் காலத்தின் இறுதி வரையில் தேர்தலை தள்ளி வைத்து எஞ்சியுள்ள 1.3 விழுக்காட்டையும் சேவகர் நிறுவனங்களுக்கு வழங்க இன்னொரு துணை வரவு செலவுத் திட்டத்தை அவர்கள் நிறைவேற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதனால் வரும் அரசாங்கத்திற்கு எந்த இடமும் இருக்காது.
அடையாளம் இல்லாதவன்#06659895: பிஎன்/அம்னோ தேவைகளுக்கு ஏற்ப கடன் உச்ச வரம்பை மாற்றிக் கொண்டே போகலாம். அம்னோ/பிஎன் -னுக்கு வாக்களியுங்கள். கடன் உச்ச வரம்பு 99.999 விழுக்காடாக உயர்த்தப்படும்.
ஏன் கவலைப்படுகின்றீர்கள். நாம் 100 விழுக்காட்டுக்கு இன்னும் 0.001 விழுக்காடு குறைவாக இருப்பதாக அவர்கள் சொல்வர்.
இரண்டு காசு: கலவரம் அடைய வேண்டாம். நாடு ஏழ்மையில் இருந்தாலும் அம்னோபுத்ராக்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். மலேசியா அவர்களிடமிருந்து கடன் வாங்கலாமே !