நம் சமுதாய தலைவர்கள் மனம் வைத்தால் கண்டிப்பாக முடியும்!

அண்மையில் எம்பெருமான் முருகன் பத்துமலையில் அவதிப்படுவதைப் பார்த்து மனம் மிகவும் சோகமடைந்து மக்களுக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என விரும்பியது. அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்றும் மனம் தடுமாறியது. இருந்தாலும் பரவாயில்லை. என் கருத்தைக் கூறித்தான் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்ததும் எழுதுகின்றேன். போற்றலும் தூற்றலும் சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டேன்.

எதிர்க்கட்சியோ ஆளும்கட்சியோ, ஒருவருக்கொருவர் ஏசுவதை நிறுத்திவிட்டு இப்பிரச்னையை உணர்ச்சியின் அடிப்படையின் வழி பார்க்காமல் பகுத்தறிவின் வழி பார்ப்பது சால சிறந்தது.

உணர்ச்சியின் கொந்தளிப்பால் ஒருவரை ஒருவர் கண்டபடி பேசுவது ஏசுவது சமுதாயத்திற்கு அழிவையே தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று நினைக்கின்றேன். இப்பிரச்னையில் பலர் ஏகபோக தலைவர்களாகவும் முழுமையான திறன்கொண்ட தீரர்களாகவும் உருவகப்படுத்திக் கொண்டது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது!

சேவியர் ஜெயகுமார்,  இராமசாமி, துணை அமைச்சர் சரவணன், குலசேகரன் என இன்னும் பலர் இப்பிரச்னையில் களமிரங்கி இருப்பது சமுதாய பற்றை காண்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்… ஆனால், இப்போது எமக்கு அது தேவை இல்லை. ஒரு பிரச்னை வந்து விட்டது, அதை களைவதற்கான வழிகளைக் காணவேண்டுமே தவிர இவர் செய்யவில்லை, அவர் செய்ய வில்லை என்று அறிக்கை மேல் அறிக்கை விடுவது இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி பாதைக்கான சரியான செயலாக தெரியவில்லை. கொஞ்சம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தால் நாம் நல்லது செய்கின்றோமா அல்லது எரிகின்ற விளக்கில் எண்ணெய் ஊற்றுகின்றமா என்று சரியாக தெரிந்துவிடும்.

கோயில் நடராஜா பணத்தை கொள்ளை அடித்து விட்டார்; தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள பல ஊழல்களைச் செய்து விட்டார்; ஹிண்ட்ராப் பேரணியில் அரசாங்கத்தை ஆதரித்து பல பாவங்கள் செய்து விட்டார் என்று சாடுவது இப்போதுள்ள பிரச்னைக்கான தீர்வல்ல. இப்போதைய பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று அனைவரும் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தை நடத்துவது நன்மை அளிக்கும் என மனதார நினைக்கின்றேன். நடக்குமா?

நாம், நம் சமுதாய தலைவர்கள் மனம் வைத்தால் கண்டிப்பாக முடியும். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இப்பிரச்னையை சரியாக ஆழமாக சிந்தித்து செயல்படுத்தினால் நிச்சயம் தீர்க்க முடியும். அதைவிடுத்தி சவால் விடுவதும் , குறைச் சொலவதும், புறம் பேசுவதும் நிச்சயமாக சரி இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. சமுதாய தலைவர்கள் கேட்பார்களா? காலமே பதில் சொல்லும்.

நன்றி

அன்புடன்
வால்டோர் அறிவாளி

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272