உயிர் மொழிக்கு; உடல் மண்ணுக்கு. இவ்வாறு முழக்கமிடும் பலரின் குரல் இந்நாட்டில் ஒலிப்பதுண்டு. ஆனால், இதோ ஒருவர், சுலோகமிடுவதற்கும் அப்பால் சென்றுள்ளார்.
மொழிக்காக போராடி தனது தொழிலுக்கான உரிமமும் தனது உரிமைக்கான குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவராக கோலாலம்பூர், ஜாலான் கெராயோங் ஹோக்கியான் கல்லறையில் இந்நாட்டு சீனமொழிக்கான போராட்டத்தின் ஆன்மாவாக துயில் கொண்டிருக்கிறார்,
சீனமும் தமிழும் அதிகாரத்துவ மொழிகள்
லிம் லியன் கியோக்கின் போராட்டம் சீனமொழிப்பள்ளிகளுக்கு மேசை, நாற்காலி, கரும்பலகை, கரையான் அரித்துள்ள பள்ளிக்கூரைகளுக்குப் புதிய கூரை போன்ற பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிச்சை கேட்கும் போராட்டமல்ல.
பல்லின மக்களைக்கொண்ட மலாயாவில் வாழும் மூன்று இனங்களின் தாய்மொழிகளுக்கும் ஆட்சிமொழி தகுதி அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது போராட்டம்.
மலாய் தேசியமொழி. அதனுடன் மெண்டரினும் தமிழும் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பது லிம் லியான் கியோகிக்கின் போராட்டம்.
பிரிட்டீஷ் மலாயாவின் காலனித்துவ அரசாங்கமும் டத்தோ ஓன் பின் ஜாபார் போன்ற மலாய் தேசியவாதிகளும் மலாயா தேசிய கல்வி திட்டத்தில் மெண்டரின் மற்றும் தமிழ் ஆகிய தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவதில் தீவிரம் காட்டி வந்தனர்.
நவம்பர் 8, 1952 ஆம் ஆண்டில் மலாயாவின் துணை ஹைகமிசனர் சார்ல்ஸ் மெக்லிவரே, பிரிட்டிஷ் காலனித்துவ மலாயா அரசாங்கம் உருவாக்கி வரும் மலாயா தேசிய கல்வி திட்டத்தின் கீழ் தேசியப்பள்ளியில் சீனமொழி ஒரு போதனா மொழியாக இருக்காது, ஏனென்றால் அம்மொழி அதிகாரப்பூர்வமான மொழியல்ல என்று லிம் லியன் கியோக்கிடம் தெரிவித்தார்.
துணை ஹைகமிசனரின் கூற்றுப்படி சீனமொழி போதனா மொழியாக இருக்க வேண்டுமானால் அது அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த லிம், தேசிய கல்வி அமைவின் வரம்புக்குள் சீனமொழியின் நிலையைச் சட்டப்படி நியாயப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளில் சீனமொழி அதிகாரப்பூர்வமான மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் அடங்கியுள்ளது என்ற முடிவிற்கு வந்தார்.
அதே நிலைதான் தமிழ்மொழிக்கும். ஆனால் அது உரிமைப் போராட்டாமாக உருவெடுக்காமல் தத்தெடுக்கக் கோரும் அவலமாக உருவெடுத்துள்ளது.
சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளை அழித்தல்
தமது போராட்டத்தை விரிவுபடுத்திய லிம் லியன் கியோக் சீனர்களும் இந்தியர்களும் இந்த உரிமைப் போராட்டத்தில் ஒன்றிணைந்துப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
செப்டெம்பர் 9, 1956 ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநாட்டில் உரையாற்றிய லிம் லியன் கியோக், “கூட்டரசு கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்மொழியும் சீனமொழியும் ஒரே விதமான சிக்கல்களையே எதிர்கொண்டுள்ளன. நாம் ஒரே வகையான இன்னல்களையே எதிர்நோக்கியுள்ளோம். 1952 ஆம் ஆண்டு கல்விச் சட்டம் (Education Ordinance 1952) சீனம் மற்றும் தமிழ் ஆகிய இவ்விரண்டு மொழிப்பள்ளிகளையும் அழித்திடும் நோக்கத்தினைக் கொண்டிருக்கிறது”, என்று கூறினார்.
கல்வி அறிக்கை 1956 சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு சீனர்களும் இந்தியர்களும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும் என்று லிம் கேட்டுக்கொண்டார்.
இந்நாட்டு மக்கள் தொகையில் சீனர்களும் இந்தியர்களும் பாதியளவினைக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டிய லிம் லியன் கியோக், “நாம் அனைவரும் ஒரே நோக்கத்தினையே கொண்டிருப்பதாக நம்புகிறேன்”, என்றார்.
“சீனர்களைப்போல் இந்திய ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருந்திடுவர் என எதிர்பார்க்கிறேன். சீனர்கள் தம் தாய்மொழிக் கல்விக்கு வழங்கிடும் ஆதரவைப்போல் இந்தியர்களும் தம் தாய்மொழிக் கல்விக்கு ஆதரவு வழங்கிட வேண்டும்”, என்று லிம் வேண்டுகோள் விடுத்தார்.
செந்துல் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடந்தேறிய அம்மாநாட்டில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கமும் ஐக்கிய சீனப்பள்ளி ஆசிரியர்களின் மன்றமும் கூட்டாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அனைத்து சமூகங்களின் பல்வேறு பிரிவுகளின் கவனத்திற்காக ஒரு கூட்டு அறிக்கையை (Joint Declaration) வெளியிட்டனர்.
அதில் அடங்கியுள்ள மூன்று தீர்மானங்கள்: 1. ஒவ்வொரு சமூகமும் அதன் தாய்மொழியைப் போதனா மொழியாக கொண்டிருக்க வேண்டும்; 2. ஒவ்வொரு சமுதாயமும் கல்வியில் வழக்கமான மேம்பாடு அடைவதற்கு சமமாக நடத்தப்படுவதோடு சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்; 3. மூவின மக்களின் தாய்மொழிகளும் ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இம்மூன்று தீர்மானங்கள் லிக் லியன் கியோக்கின் போராட்டத்தைத் தெள்ளத்தெளிவாக பிரதிபலித்தன.
ஆபத்தான அரசியல்வாதிகள்
அவரின் போராட்டத்திற்கு வரவேற்பு இருந்தது. கூடவே கடும் எதிர்ப்பும் இருந்தது.
சுதந்திர மலாயாவில் மலாய்மொழிக்கு மட்டுமே இடம் உண்டு என்பதில் மலாய் தேசியவாதிகள் தீவிரமாக இருந்தனர். அவர்களுடைய எதிர்ப்பு பகிரங்கமாக இருந்தது. சீனமொழிக்கு சீனமொழிப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் ஆதரவு வலுவாக இருந்தபோதிலும், சீன அரசியல்வாதிகளில் டான் செங் லோக், டான் சியூ சின், எச்.எஸ்.லீ போன்ற மசீச எட்டயப்பர்களும் இருந்தனர்.
இந்தியர்களில் தனிப்பட்டவர்கள் ஆர்வம் காட்டினர். சமூகம் என்ற முறையில் எழுந்து நிற்பதற்கான முதுகெலும்பை அது கொண்டிருக்கவில்லை.
சீனாவில் பிறந்தவர்
சுதந்திரமடையப்போகும் மலாயாவின் தேசிய கல்வி திட்டத்தில் சீனமொழிப்பள்ளிகளுக்கான உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் சீனமொழி சுதந்திர மலாயாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தை துவக்கி அதனை வழிநடத்திய லிம் லியன் கியோக், சீனாவில் பிறந்து, அங்கேயே படித்து வரலாறு மற்றும் சீனமொழி ஆகியவற்றில் பட்டம் பெற்று அவர் படித்த கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.
ஆசிரியர் தொழிலைத் தொடர்வதற்காக 1927 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் மலாயாவிற்கு வந்த லிம் இங்கிருந்து டச்சுக்காரர்கள் ஆண்ட ஜாவாவிற்கு சென்று அங்கு பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த பின்னர் மலாயாவிற்கு திரும்பினார்.
கோலாலம்பூர் கன்பூசியஸ் மிடல் ஸ்கூலில் அக்டோபர், 1935 ஆம் ஆண்டில் ஆசிரியராகச் சேர்ந்து ஆசிரியர் தொழில் புரிவதற்கான அவரது உரிமத்தை ஆகஸ்ட், 1961 இல் மலாயா அரசாங்கம் பறித்துக்கொள்ளும் வரையில் பணியாற்றினார்.
சீனப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் அமைத்தல்
இரு சீனமொழிப்பள்ளி ஆசிரியர்களின் பரிதாபகரமான மரணம் லிம் சீனப்பள்ளி ஆசியர்கள் மன்றங்கள் அமைப்பதற்குக் காரணமாக அமைந்தது.
முதலாவது மன்றம், கோலாலம்பூர் சீனப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் (KLCSTA), 1949 இல் அமைக்கப்பட்டது. அதன் செயலாளராக இருந்த லிம் 1950 இல் அதன் தலைவரானார்.
சிறைவாசத்திற்குத் தயார்
ஜூலை 1950 இல் பார்ன்ஸ் குழு சீன, தமிழ்மொழிப்பள்ளிகளை அகற்றி விட்டு ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளைப் போதனா மொழியாகக் கொண்ட தேசியப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற இறுதி நோக்கத்தைப் பரிந்துரைத்தது.
இப்பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பென்-வு குழு அமைக்கப்பட்டது. அக்குழு அனைத்து பள்ளிகளையும் சமபங்காளிகளாக கொண்ட உண்மையான தேசியப்பள்ளி அமைக்கப் பரிந்துரை செய்தது. ஆனால், அப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தாய்மொழிப்பள்ளிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து போராளிகளுக்குச் சவால் விட்டது. எழுந்து நின்றார், லிம் லியன் கியோக்!
பார்ன்ஸ் குழுவின் பரிந்துர¨யை எதிர்த்து முறியடிப்பதற்கான வழிகளைக் கண்டறிய ஆகஸ்ட் 1951, இல் லிம் மலாயாவின் ஒன்பது மாநிலங்களிலிருந்து 12 சீனப்பள்ளி ஆசிரியர் மன்றங்களின் 30 பேராளர்களை அழைத்து நடத்திய கூட்டத்தில் உருவானதுதான் மலாயா ஐக்கிய சீனப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் (UCSTA). இந்த அமைப்பு பார்ன்ஸ் குழுவின் பரிந்துரையை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான ஆயுதமாக இருந்ததோடு லிம்மின் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
நாடு தழுவிய அளவில் பார்ன்ஸ் குழுவின் பரிந்துரையால் தாய்மொழிப்பள்ளிக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை சீன மக்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்ட லிம், பெடரல் சட்டமன்றத்தின் கல்விக்கான சிறப்புக் குழுவிடமும் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் ஏன் தாய்மொழிப்பள்ளி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை வழங்கினார்.
காலனித்துவ அரசு கல்விச் சட்டம் 1952 ஐ அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் அதிகாரப்பூர்வமான அறிக்கையை (White Paper) பெடரல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் சாரத்தை முன்னதாகவே தெரிந்துகொண்ட லிம் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த அறிக்கையை எதிர்க்கும் பிரகடனத்தையும் தயார் செய்தார். ஆனால், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாரினால் அப்பிரகடனம் வெள்ளை அறிக்கை சட்டமான இரு நாள்களுக்குப் பின்னரே சீன நாளேடுகளில் வெளிவந்தது.
லிம்மின் செயல் சட்டத்தை எதிர்ப்பதாகும். அதற்குத் தண்டனை சிறைவாசமாகும்.
அவர் அதற்கும் தயாரானார். தனது நெருங்கிய நண்பரிடம் தமது குடும்பத்தினரை கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்தார்.
மலாக்கா சந்திப்பு
இருப்பினும், பெடரல் சட்டமன்றம் கல்விச் சட்டம் 1952 ஐ ஏகமனதாக நிறைவேற்றியது. சீனப்பள்ளிகளில் ஆங்கிலமொழி வகுப்புகளை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. அவ்வுத்தரவுகளை நிறைவேற்றாத பள்ளி நிருவாகத்தினருக்குத் தண்டனை காத்திருந்தது.
ஆனால், அந்த உத்தரவுக்கு அடிபணிந்தால் சீனப்பள்ளிகள் மெல்ல மெல்ல மடியும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
அரசாங்க வியூகத்தின் கடுமையை உணர்ந்த லிம் லியான் கியோக் போராட்டத்தை விரிவுபடுத்தவும் புதிதாக உருவாகவிருக்கும் நாட்டில் நான்கு ஆட்சிமொழிகள் (மெண்டரின், மலாய், ஆங்கிலம், தமிழ்) இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமது நெருங்கிய நண்பர்கள் சிலரின் ஆலோசனைகளையும் பொருட்படுத்தாமல் மசீசவுடன் ஒத்துழைக்க முன்வந்தார்.
மசீசவில் சீனமொழி கல்வி குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருந்தாலும், 1955 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பெடரல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்தில் மலாக்காவில் அம்னோ தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான், மற்றும் மசீச தலைவர்களுடன் லிம் லியன் கியோக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனப்பள்ளிகளுக்கு உதவவும் கல்விச் சட்டம் 1952 ஐ அகற்றவும் முன்வந்த துங்கு, சீனமொழி ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற லிம்மின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், தேர்தல் பரப்புரையின்போது இவ்விவகாரத்தை எழுப்ப வேண்டாம் என்று லிம்மை கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட லிம், ஆட்சிமொழி குறித்த விவகாரத்திற்கு தீர்வு காணும் பொறுப்பை மசீச தலைவர் டான் செங் லோக்கிடம் ஒப்படைத்தார். அது ஒரு பெரும் தவறான முடிவாக கருதப்பட்டது.
மலாக்கா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சீனமொழி ஊடகங்கள் கடுமையாகச் சாடின. ஆனால், இந்தப் புரிந்துணர்வின் காரணமாக 1955 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டணி 52 இடங்களில் 51 இல் வெற்றி பெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி கல்வி அமைச்சர் அப்துல் ரசாக்கின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சீன சமூகத்தைச் சாந்தப்பட்டுத்தும் நோக்கத்தில் மசீசவின் புதிய தலைவர் டாக்டர் லிம் சோங் இயூவின் கோரிக்கையை ஏற்று தேசிய கல்வி அமைவில் நடப்பிலிருந்த நான்கு மொழி தொடக்கப்பள்ளிகளுக்கும் இடமளித்தது.
இது லிம் லியன் கியோக்கிற்கு ஒரு வெற்றி என்றாலும், முழு வெற்றியல்ல.
சீன இடைநிலைப் பள்ளி மற்றும் சீனமொழிக்கு ஆட்சிமொழி தகுதி ஆகியவற்றுக்கான அவரது போராட்டம் தொடர்ந்தது.
குடியுரிமைப் போராட்டம்
ஐக்கிய சீனப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவராக இருந்த 8 ஆண்டு காலத்தில் (டிசம்பர் 1953-டிசம்பர் 1961) லிம் மேலும் பல போராட்டங்களை நடத்தினார். அதில் குடியுரிமை பிரச்னையும் ஒன்றாகும்.
1954 ஆம் ஆண்டு மலாயாவிற்கு வருகை அளித்திருந்த ஐநா பொதுச்சபையின் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்டை சந்தித்து சீனமொழி கல்வி மற்றும் அதன் அங்கீகாரம் குறித்த மகஜரை லிம் வழங்கினார்.
அவரது போராட்டம் மேலும் மேலும் வலுவடைந்தது. அரசாங்கம் அவருடையப் போராட்டத்தைக் கடுமையாக கருதியது. மசீசவிலிருந்து அவருக்கு ஆதரவு இருந்தபோதிலும் கடும் எதிர்ப்பும், குறிப்பாக சீனமொழி ஆட்சியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, இருந்தது.
சீனமொழி விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசியல் ஈடுபாட்டை லிம் வலியுறுத்தினார்.
1950களில் மலாயாவின் மக்கள் தொகையில் மலாய்க்காரர்களும் சீனர்களும் பாதிக்குப்பாதி இருந்தனர். ஆனால், ஜூலை 1955 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 140,000 சீன வாக்காளர்களே இருந்தனர்.
இதற்கென ஒரு மாநாட்டை லிம் கூட்டினார். பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து சீன அமைப்புகளிலிருந்து 1,200 பிரதிநிதிகள் கோலாலம்பூரில் 27.4. 1956 இல் கூடினர்.
பெரும் வெற்றியில் முடிவுற்ற இம்மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் இரண்டு குடியுரிமை பற்றியதாகும். அனைத்து இனங்களுக்கும் சம உரிமை மற்றும் கடமைகள்; கல்வி மற்றும் பண்பாடு ஆகியவற்றில் அனைத்து இனங்களையும் சமமாக நடத்துதல், அத்துடன் சீன, மலாய், தமிழ் மொழிகளை ஆட்சிமொழியாக்குதல், ஆகியவை இதர இரண்டுமாகும்.
இந்த மாநாடு நடந்த கட்டத்தில் சுதந்திர மலாயாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை வரைய நியமிக்கப்பட்டிருந்த ரீட் கமிசன் உறுப்பினர்கள் மலாயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் இம்மாநாட்டில் சீன சமூகத்தினரின் ஒட்டுமொத்த குரலை கேட்டிருக்கக் கூடும்.
ரீட் கமிசன் அதன் அறிக்கையை பெப்ரவரி 1957 இல் வெளியிட்டது. அதில் ஆட்சிமொழி குறித்த சீன மற்றும் இந்திய மக்களின் கோரிக்கைக்கு அனுதாபம் காட்டப்பட்டிருந்தது.
பல்லின மக்கள் வாழும் மலாயாவில் மலாய்மொழி தேசியமொழியாக இருப்பதோடு மெண்டரின், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை ஆட்சிமொழிகளாக பத்து ஆண்டுகளுக்கு அல்லது மலாயா நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் கூடுதலான காலத்திற்கு இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
ஆன்மா குடியுரிமைச் சட்டத்திற்கு உட்பட்டதல்ல
ஆனால், லிம் லியன் கியோக்கின் போராட்ட உணர்வு, இடைவிடா போராட்டம், பெருகிவரும் மக்கள் ஆதரவு தொடரக்கூடாது என்று தீர்மானித்த அரசாங்கம் ஆகஸ்ட் 12, 1961 இல் அவரின் குடியுரிமையைப் பறித்தது. ஒரு வாரத்திற்குப் பின்னர் 19.8. 1961 இல் அவர் ஆசிரியர் தொழில் புரிவதற்கான உரிமத்தை ரத்து செய்தது.
இவ்வாறு லிம் லியன் கியோக் ஒடுக்கப்பட்டார். ஆனால், அவர் சீனாவுக்கு திரும்பவில்லை. நாடற்றவராக வாழ்ந்த அவர் தமது 85 வது வயதில் 18.12.1985 இல் காலமானார்.
மலாயாவின் சீன தலைவர்கள் எவருக்கும் அளிக்கப்படாத மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் மக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டைருந்த அவரது உடலைத் தாங்கிய சவப்பெட்டி டிசம்பர் 21 ஆம் தேதி ஹோக்கியான் கல்லறைக்கு எடுத்துச் சென்றபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசைப்பிடித்து நின்று மரியாதை செலுத்தினர்.
மொழிக்காக உரிமையை இழந்த லிம் லியன் கியோக் அம்மொழியின், அந்த இனத்தின் ஆன்மாவாக கருதப்படுகிறார். அவரின் மறைவு நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.