பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பர சர்சை : டப்பாங்கூத்துக்கு சாதிச் சாயம் பூசவேண்டாம்!

அண்மையில் சர்சையை ஏற்படுத்தியிருந்த பெட்ரோனாஸ் விளம்பரம் குறித்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சில விடயங்கள்.

அதாவது, அண்மையில் இணையத்தில் ஒளியேறிய பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தில் டப்பாங்கூத்து ஆட்டம் கேளிக்கூத்தான வகையில் இடம்பெற்றிருந்தது அனைவரினதும் எதிர்ப்பை சம்பாதித்தது. உண்மைதான், தீபாவளிளை நினைவுக்கூறும் அம்சங்களை இணைக்காமல் டப்பாங்கூத்தை முறையே பின்பற்றாமல் வெறும் அடாவடித்தனமான ஆட்டத்தை மட்டும் மையமாக வைத்து பெட்ரோனாஸ் விளம்பரம் தாயரித்துள்ளமை அவர்களின் அறியா மடமையினை காட்டுகிறது.

ஆனால், இவ்விவகாரத்தில் கருத்து கூறியவர்களில் நம்மில் பலர் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த டப்பாங்கூத்து கலைக்கு சாதிச் சாயம் பூசி சாதியக் கண்ணோட்டத்தில் கருத்துக் கூற முற்பட்டதானது கண்டிக்கதக்க ஒன்று.

காரணம், டப்பாங்கூத்து அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களின் கலைகளில் ஒன்றாகவே விளங்குகிறது. அது ஒரு கலை உணர்வின் வெளிப்பாடாகவே நோக்கப்படவேண்டுமே தவிர தாழ்ந்த சாதிக்காரர்கள்தான் ஆடுவார்கள் என்று இழிவாக கூறுவது ஏற்றுகொள்ளக்கூடியதொன்றல்ல.

இந்த டப்பாங்கூத்து ஆட்டம் பெரும்பாலும் கிராமப் புறங்களில் சாவு வீட்டில் மட்டுமின்றி மகிழ்ச்சியான கொண்டாட்டங்களின் போதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தமிழர்களுக்கு உரிய ஒவ்வொரு கலைகளும் சரியான சந்தர்ப்பங்களுக்கு, இடங்களுக்கு ஏற்ப முறையாக பயன்படுத்தப்படவேண்டும்; அப்போதுதான் அதன் வெளிப்பாடு சிறப்பாக அமையும்.

தீபாவாளி விளம்பரத்தில் குறை கண்டுபிடித்து எதிர்க்கும் நம்மில் பலர் ஏன் விழாக் காலங்களின்போது பல மது வணிக நிறுவனங்கள் நாட்டிலுள்ள தினசரி தமிழ் பத்திரிக்கைகளில் பக்கம்-பக்கமாக மது போத்தல்களை போட்டு விளம்பரப்படுத்துவதை நாம் ஏன் கண்டிக்க தவறுகிறோம்? இழைக்கப்படும் அநியாயங்களுக்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதை மறந்துவிட்டோமா?

நமது தமிழ் இனத்தை மதுவுக்கு அடியான கூட்டம்போல் அடையாளப்படுத்த முற்படுவதை பத்திரிக்கைகள் நிறுத்திக்கொள்ளவேண்டும். பத்திரிக்கைகள், மக்களுக்கு சரியான தகவல்களை கொடுத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டுமே தவிர மது நிறுவனங்கள் தரும் பணத்திற்காக போதை விளம்பரங்களை பக்கம்-பக்கமாக பிரசுரித்து மீண்டும் மீண்டும் நமது சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லவேண்டாம் என்பதே எனது கருத்து.

-புகழேந்தி, கோலாலம்பூர்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272