பத்துமலை தீபாவளி உபசரிப்பில் அசைவம்: இந்துக்கள் ஒரு காலும் மன்னிக்கமாட்டார்கள்

தற்பொழுது வேகமாக போய்க்கொண்டிருக்கும் விளம்பரங்களில் ஒன்று, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பற்றியதுதான். பத்துமலை முருகன் திருத்தலத்தில் தீபாவளி தினத்தன்று நடைபெற விருக்கும் உபசரிப்புக்கு, நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துகொள்ளும்படியாக அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. அதோடு அந்த விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது நாட்டுப் பிரதமர் நஜிப் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக   திறந்த இல்ல உபசரிப்பு என்பது இப்பொழுது நமது மலேசியாவை பொறுத்தமட்டில் ஒரு கலாச்சாரமாகவே ஆகி விட்டது என்றே கூறலாம். ஹரி ராயா, சீனப்புத்தாண்டு, கிறுஸ்துமஸ் போன்ற பெருநாள் காலங்களில் மதம், இனம், பணக்காரர்கள், ஏழைகள் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி ஒரே இடத்தில் உண்டு மகிழ்ந்து பெருநாட்களை கொண்டாடுவது பெருமைக்குறியது மட்டுமல்லாது , நமது நாட்டுக்கே உரிய ஒரு சிறப்பு பண்பாகும். இதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றே சொல்லலாம்.

இதில் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் அப்பொழுதெல்லாம் அந்த அந்த பண்டிகைக்கு உகந்த பாரம்பரியமான சிறப்பான பலகாரங்கள், உணவு வகைகள்  பரிமாறி மற்ற இன மக்களும் சுவைத்து இன்புறும்  வகையில் செய்திருப்பார்கள். அதே வேளையில் அவரவர் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட படைப்புக்களை அங்கு கூடியிருக்கும் மக்களைக் கவரும் வண்ணம் மேடையேற்றுவார்கள். இதன் வழி இந்நாட்டில் வாழும் பல இன மக்களின் பண்பாடு கலாச்சாரம் மொழி, இசை மற்ற இனங்களுக்கும் போய்ச்சேர்ந்து ஒருமைப்பாட்டை வளர்க்க வழி கோலுகிறது.

அந்த வகையிலே இந்திய /தமிழ் பண்பாடு, கலச்சாரம், சமயம் என்பது மிகவும் பழமையனது. இந்த பாரம்பரியத்திற்கு என்றே  தனி தன்மையும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திருத்தலங்களில் குறிப்பாக முருகன் குடியிருக்கும் கோவில்களில் அசைவம் கலந்த உணவு பரிமாறாமல் இருப்பது. தீபாவளி அன்று பத்துமலை முருகன் திருத்தலத்தில்  நடைபெற இருக்கும் அந்த விருந்தில் அசைவத்தை கலந்து கோவில் வளாகத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்தி விடமட்டார்கள் என்று நம்புவோம்.

மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக அந்த ஒரு நாளில் மட்டும் நமக்கே உரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கோழி ஆடு வெட்டி   விருந்துவைத்து கொண்டாடிவிட்டு மற்ற 364 நாட்களுக்கு சைவத்தை வைத்து படைத்து முருகனை திருப்திபடுத்திவிடலாம் என்று ஏற்பட்டாளர்கள் எண்ணுவார்களாயின் அவர்களை முருகன் ஒரு வேளை மன்னிக்கலாம், ஆனால் இம்மண்ணில் வாழும் இந்துக்கள் ஒரு காலும் மன்னிக்கமாட்டார்கள். அப்படியே அசைவத்தைதான் படைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அந்த விருந்தை வேறு இடத்திற்கு மாற்றினால் யாவருக்கும் இது ஏற்புடையதாக இருக்கும்.

-கோவிந்தசாமி அண்ணாமலை, தஞ்சோங் மாலிம்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272