தேசிய முன்னணி ஆனாலும் சரி பக்காத்தான் ஆனாலும் சரி நம் தலைவர்கள் சமுதாய உணர்வையே முதன்மைப்படுத்தி செயல்படவேண்டும். அதை விடுத்து வெறுமனே வெற்று அறிக்கைகள் விட்டு தன்னையும் குழப்பி, கட்சியையும் குழப்பி மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பி, சமுதாயத்தையும் நாசப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள் நமக்கு வேண்டாம்.
அண்மையில் பத்துமலை கொண்டோ பிரச்னைக்கு பூதாகரமாக வடிவம் கொடுத்த அரசியல்வாதிகளைக் கண்டு நான் கூனிகுறுகி போனேன். பலம் பொருந்திய அரசியல்வாதிகள் உட்பட, சின்னச் சின்னத் தலைவர்களும் கொடுத்த அறிக்கைகள் கொஞ்சமா??? ம்ம்ம்ம்ம்…. ஒருவரும் அப்பிரச்னையைத் தீர்க்க் முனையவில்லை.
தவறு நடந்துவிட்டது; அரசியல்வாதியின் சக்தியின்மையால் இது நடந்துவிட்டது என்பதைக் கூறி மற்றவர்களைச் சாடி அறிக்கை விட்டார்களே தவிர வேறென்ன செய்தார்கள்? இதைவைத்து நமது பத்திரிக்கைகளும் புத்துணர்ச்சி பெற்று தமிழர்களுக்குள் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணி விட்டார்கள். பாவம் மக்கள், எது சரி எது பிழை என்று நிர்ணயிக்க முடியாமல் தத்தளித்தார்கள்.
புதிதாக இன்னுமொரு பிரச்னை….. ராஜபட்சே மலேசிய வருகை. இந்தப் பிரச்னையை முன் வைத்து எத்தனை தலைவர்கள் தங்களின் முகத்தை பத்திரிக்கைகளில் முன்பக்கத்தில் நிறுத்தினர். ஆழ்ந்து பார்க்கையில் இதுவெல்லாம் வருகின்ற தேர்தலுக்கான அரசியல் திருவிளையாடலா என்று எண்ணத் தோன்றுகின்றது.
வெற்று அறிக்கையில் போராடுவதும், நடிகர்களுக்கு கலை விழா, பட்டங்கள் தருவதும் போதுமையா? தயவு செய்து தமிழர்களின் அடிப்படைக் பிரச்னைகளைப் படம் பிடித்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து தீர்த்து வைப்பது ஒவ்வொரு அரசியல்வாதிகளின் போராட்டமாக இருக்க வேண்டும்.
இதைச் சமுதாய தலைவர்கள் சிந்திப்பார்களா? அரசியல்வாதிகள் சாதனைப் படைப்பார்களா? நின்று பார்ப்போம். காலம் பதில் சொல்லும்…
வேதனையுடன்
-கணேசன் ஆறுமுகம்