மெகா தொடர் என்னும் வரிசையில் திரை காணும் சில நாடகங்களை ஒரே வரியில் சொல்வதென்றால்….
வெறும் குப்பைகள் !!!
அதற்குப் பதில், நன்றாக இருக்கிறதோ-இல்லையோ மலேசிய நாட்டு நமது கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாடகங்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து நம் நாட்டவர்களின் கலையை இன்னும் சிறப்பாகக் வளர்க்க உதவலாம்.
இன்னும் எத்தனைக் காலம் நமது மக்களை ஏமாற்றப்போகிறீர்கள் ? நம் மக்களுக்குக் கொஞ்சம் வேலைவாய்ப்பு இதிலாவது கிடைக்க; அவர்களும் கொஞ்சம் நினைவாற்றலை இதன் பக்கம் செலுத்தி தொழில் செய்ய வாய்ப்பு கொடுங்கள்.
சன் தொலைக்காட்சி ஒளியேற்றும் மெகா தொடர் நாடகங்கள் அதில் வரும் முட்டாள் தனமான நேர இழுப்புக்காகத் திடீர் திடீர் ஆள் மாறாட்டம் ஆள் சேர்ப்பு இன்னும் என்னென்ன கோமாளி வேலைகள் எல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து நாடகத்தை பல ஆண்டுகள் இழுத்தடிப்பு செய்து பணம் சம்பாதிக்கும் கேவலமான நிகழ்வு வெறுக்கத்தக்கது !!!
ராதிகா அம்மையாரின் நாடகங்கள் இதில் முதன்மை …!
நேரம் பிற்பகல் 1 .30… இரவு 9.30… அடுத்து, பிற்பகல் 2 .00 மணிக்கு இடம் பெறும் அத்திப்பூக்கள் இவை எல்லாம் என்ன நாடகங்கள் ? இன்றைய காலத்திற்கு யாரை ஏமாற்றும் கேவலமான கலை விபச்சாரம்?
இத்தனைக்கும் நம் நாட்டில் நாம் காணும் சன் தொலைக்காட்சி நிகழ்சிகள் பல தமிழகத்தில் ஒளியேறி ஒரு வாரத்திற்கு பிறகு தான் இங்கே காலம் கடந்து ஒளிபரப்பாகும் நிலை.
பார்க்கிறார்களோ இல்லையோ அந்த நேரங்களில் நம்நாட்டு நாடகங்களை ஒளியேற்றி நம் நாட்டு கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் அல்லவா.
சன் நிகழ்ச்சி தான் என்றால் அவர்களின் நாடகம் அல்லாத வேறு நிகழ்சிகளை கொண்டுவாருங்கள் நம் மக்களுக்கு அறிவு களஞ்சியங்களைக் கொடுங்கள். குடும்பங்களை கொலைவெறி பிடித்த குடும்பங்களாக மாற்றும் நாடகங்களைத் தவிருங்கள்.
நம் கலைஞர்களின் நிகழ்வுகளை மற்றவர் பார்க்கும் நேரத்தில் இடம்பெற ச்செய்தால் நன்று ! தமிழகத்தில் நன்கு உணர்ந்தவர் இந்த நாடக பக்கம் திரும்பு வதில்லை !
பைத்தியக்காரன், கொடுமைக்காரன் , ஒன்றுக்கும் உதவாதவன் இப்படி சித்தரிப்பது இன்னும் கேவலமாக உருவகப்படுத்துவது குடும்ப உறவுகளுக்குள்ளே கேவலமான பகைமை.
எப்படி எப்படி அடுத்தவனை கெடுப்பது, குடும்ப உறவுகளை சீரழிப்பது அதுவும் சுற்றிச் சுற்றி அதே வெறுப்புணர்வு ஆண்டுக் கணக்கில் அதே கேடுகெட்ட நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வெவ்வேறு வகையாக பார்ப்பவர்கள் மனதில் சிறுக சிறுக நஞ்சு ஆண்டுக் கணக்கில் ஊட்டினால் பார்ப்பவர் நிலை என்னாகும் ?
இவை தானே பெரும்பாலான நாடகங்கள் உணர்த்தும் கதை. எவ்வளவுக்கு எவ்வளவு சீர்கேட்டு கதைகளை காட்ட முடியுமோ அவ்வளவும் அதிகமாகவே இவற்றில் உண்டு !
100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் இங்கே வாழ்ந்த இனம் இன்னும் எவ்வளவு காலம்தான் நமக்கென்று ஒரு நிலை இல்லாமல் அயல் நாட்டையே நாடுவது ?
1980-களுக்கு பிறகு இலங்கையில் இருந்து ஐரோப்பியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த நம் தமிழர்கள் அங்கே அவர்களுக்கு என்று ஒன்றல்ல இரண்டு தொலைகாட்சி நிலையங்களை நடத்துகிறார்கள். தீபம் , தென்றல் என இரு அலை வரிசைகள் !
நாம் இன்னும் மாற்றான் வளர நம் இளம் தலைமுறை துவள துணைபோக வேண்டுமா ? நம்மோடு வளர்ந்த மற்ற இனம் எப்படி போட்டி போட்டு முன்னேறுகிறது ?
கடந்து போன காலத்தை மறப்போம்… இனி முன்னேறும் காலம் காண்போம் !
நாசா , 29/11/12
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272
அஸ்ட்ரோ பணத்துக்கு கேடு. சில நேரங்கலில்
நல்ல படம் கூட இல்லை.