காளான் போல கட்சிகள் : இந்தியர்களின் அரசியல் பலவீனம்

“இன்றெல்லாம் காளான் போல அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் முளைத்து விடுகிறார்கள். சிலரது கட்சியில் அவரும் அவர் மனைவியும்தான் இருக்கிறார்கள். சில நேரம் மனைவி கூட இருப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பது போன்று வெளியே கூறிக்கொள்வார்கள்” கலைஞர் பேசியது.

நம் நாட்டிலும் இன்று குறிப்பாக நம் இன கட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே தவறுகளையே நாமும் இங்கே திரும்ப திரும்ப செய்கின்றோம்.

பாரிசான்  கூட்டணியில் இந்தியர்களுக்கு எத்தனை காளான் கட்சிகள் ? இந்த காளான் கட்சிகள் எப்படி முளைக்கின்றன ?

தான் சார்ந்த அல்லது தலைமைக் கட்சியில் ஏதோ ஒரு வகையில் தவறு செய்பவர்கள் அதனை தற்காக்க முடியாமலும் – தெளிவு பண்ண முடியாமலும் தானே எல்லாம் என நினைத்து தங்களது சுயநலத்திற்காக புது கட்சிகளை தொடங்குகிறார்கள். அவர்களது பிரச்னைகளை சமாளித்து நியாயம் பேச சிலரை அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் கடைசியில் பயன்பெறுபவர்கள் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்தான்.

இது காலம் காலமாக நடப்பதுதான். எங்கும் இது கண்கூடு ! நம் இனம் எதிலும் பிடிப்பில்லாமல் போக இது போன்ற காளான் கட்சிகளின் உருவாக்கமே முதன்மையான காரணமாகின்றன !

இதுபோன்ற காளான் கட்சிகளை ஆதரிக்கும் சந்தர்ப்பவாத வாழ்வு வாழ்பவர்கள், தங்களது தவறை காலம் கடந்து உணரும்போது அந்த கட்சியின் தலைமை, தலைவர்களின் மனைவி, பிள்ளைகளின் பயன்பாடு எங்கோ இடிக்கும் !

ஆதாயம் இல்லாமல் எவனும் ஆற்றைக்கட்டி இறைக்கமாட்டான். நன்றாக சிந்தித்துப் பாருங்கள் !

அரசியல்தான் அப்படி என்றால் இன்று சுயநலதேவைக்காக உருவாக்கப்பட்டுயிருக்கும் சில கோவில் நிர்வாகங்கள், சமயமன்றங்கள், இளைஞர் இயக்கங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் என எங்கும் இன்று பண மழை பொழிகிறது. அது குறிப்பிட்ட இடங்களில் அடிக்கிற காற்றுக்கேற்ப கொட்டுகிறது. கிடைத்தவரை இலாபம் நம் எட்டப்பர்களுக்கு.

இன்றைய மனிதர்கள் மனசாட்சிப்படி இறை உணர்வுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. வேகமாக ஓடும் ஆற்று நீரில் விழுந்தவன் தப்பிக்க எது கிடைத்தாலும் இறுக பற்றிக்கொள்ளும் நிலைமைபோல இவர்களும் தங்கள் பதவிகளை தற்காக்க சந்தர்ப்பத்திற்கேற்ப மனசாட்சியின்றி எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள்.

“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே… சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்… சிந்தை இரங்காரடி…” என்றார் பாரதி . அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது.

நம்மில் மட்டும் ஏன் இன்னும் இந்த கேவலமான கொள்கையில்லா வாழ்வு ?

நம் இனத்தின் பெயர் சொல்ல எத்தனை டத்தோக்கள் பெயரில் மண்டபம் கட்டிப்போட்டிருக்கிறார்கள் ?  விசேஷம் – திருமணம் என்றால் சீனர்களின் மண்டபம். ஊரெல்லாம் அவர்களால் மண்டபம் கட்டமுடியும் என்றால் நம் டத்தோக்கள் சூடு சொரனையில்லாதவர்களா – சமுதாய நலன் விரும்பாதவர்களா ?

சமுதாய நலன் கருதி நல்லதை செய்யுங்கள், பல கட்சிஎன்னும் நிலையை மாற்றுங்கள் – வரலாறு உங்களை போற்றும்.

காதற்ற ஊசியும் கூடவே வராது… நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் !!!

– நாசா 05/12/2012

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272