நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல – நாமாகவும் இருக்கக்கூடாது. இதுதான் இந்து மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். ஆனால், நடப்பது என்ன?
இந்து மதம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற மொழிக்காரர்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தமில்லையா? ‘தமிழர்கள் மட்டும் உரிமை கொண்டாடிப்போகட்டும் நமக்கு என்ன வந்தது’ என்ற மனப்போக்குடன் தள்ளி நிற்கிறார்களா? மலேசியத்தைப் பார்க்கையில் அப்படித்தான் ஒரு நிலை உருவாகியுள்ளதாகத் தோன்றுகிறது.
இனம், மதம், மொழி பார்க்காமல் பத்துமலை ஆலய வளாகம் நிரம்பி வழிகிறது என்று தைப்பூச நாளில் மட்டும் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், நாம் சிந்தித்தோமா, இந்தக் கூட்டம் எதற்காக் கூடுகிறது என்று. மதத்தின் மேன்மை கருதியா? அல்லது பொழுது போக்குக்கு ஒரு உல்லாசத் தளம் என்ற காரணம் கொண்டா?
நமது மலேசிய அரசு பத்துமலை ஆலய வளாகத்தை எப்படி, என்ன காரணத்துக்காக அதை அங்கிகரித்திருக்கிறது? மதம் சார்ந்தா அல்லது பொழுதுபோக்கைச் சார்ந்தா? இதையெல்லாம் இந்து மதம் சார்ந்த தமிழர்கள் சிந்திக்கிறார்களா?
தைப்பூச நாளில் அங்கே என்ன நடக்கிறது. என்ன வகைக் கொண்டாட்டங்கள் அங்கே அரங்கேறுகின்றன? புத்தியை மட்டுமே முன்வைத்து நாம் கொண்டாடும் இவ்வகை திருவிழாக்களால் மலேசியாவில் வாழ் இந்து மதம் சார்ந்த இந்திய சமுதாயம் எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறது? ஆலயங்களை எழுப்பிக்கொண்டு போவதில் மட்டுமா? அல்லது ஆலயங்களை முன்னிறுத்தி தன்னாட்சி புரியும் ஆலயத் தலைவர்கள் சமயத்தை முன்னிறுத்தி சமயத்திற்கே காவலன் என்ற போர்வையில் பவனிவரும் சமய சங்கத் தலைவர்கள் அரசிடம் மானியங்களை வாங்கிக்கொண்டு தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்வதிலா? சிந்தித்தோமா, இவர்களால் இந்த மதம் சார்ந்த மக்கள் என்ன பயன் அடைந்தார்கள் என்று?
ஒரு ஆலயத்தின் அடிப்படை விசயஞானமே இல்லாமல் பயன்பாட்டின் நோக்கமே தறிகெட்டு இப்படி ஒன்றுக்கொன்று முரணான வகையில் பயணம் போய்க்கொண்டிருக்கும் இவர்களின் பாதையை செப்பனிடப் போகிறவர்கள் யார்?
ஒருவேளை வீட்டுக்கு வீடு குட்டிக் குட்டிக்கோயில்களைக் கட்டிக்கொண்டு அதற்கொரு ‘yearly celebration’-களை செய்துகொண்டு மக்கள் மத்தியில் பாவனை செய்வதால், அரசிடம் சிபாரிசு செய்து மானியம் கிடைக்க இந்து சங்கமே வழியும் வகுத்துக்கொடுக்கலாம் அல்லவா?
பெரிய பெரிய சீர்திருத்தமெல்லாம் செய்யப்போவதாக சவால் விடுத்த இந்து சங்கத் தலைமை, இதுபோன்ற குட்டிக்கோயில் உடைப்பில் கலர் படம் போட்டுக்கொண்டு மூக்கை நுழைப்பதேன்?
முதலில் இந்து சங்க தலைமைக்கு இந்து நெறி மார்க்கங்களைப் பற்றி ஓரளவாவது தெரிய வேண்டும். தலைமைக்கு மட்டும் ஆசைப்பட்டு தலைமைப் பீடத்தில் உட்கர்ந்து விடுவதால் இவர்களைப் போன்றவர்களால் ஒன்றுமே ஆவப்போவதில்லை.
அண்மையில் ஒரு நாளிதழில் “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற விளக்கவுரை கட்டுரை படித்தேன். இந்தக் கட்டுரையைப் படித்தவர்கள் அனைவரும் நிச்சயம் உள்வாங்கியிருப்பார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஏன் கோயில்களில் திருவிழா கொண்டாடுகிறார்கள் என்று. தமிழரின் அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் இன்றைய விஞ்ஞான உலகுக்கே ஒரு சவாலாக் இருந்தது-இது அன்றைய நிலை. (ஞாயிற்றுப் பதிப்பு தினக்குரல் – 02-12-2012)
ஏனெனில், அன்றையக் காலகட்டத்தில் உயர்ந்த கோபுரங்கள் இல்லாததால் அப்படி ஒரு நிலைமை. ஆனால், இன்று நடப்பது என்ன? திருவிழாக்களுக்கும் கும்பாபிசேகத்திற்கென்றே கோயில்கள் என்றாகிவிட்டது. இந்த நிலை இன்று, நாளை மாறிவிடும் என்ற நிலைமையும் செத்துவிட்டது. இருந்தாலும் ஒருவராவது விழிப்போம். ஒருவர் பத்தாகலாம் பத்து நூறாகலாம் நூறு பல்கிப் பெருகலாம்…
-ஊரணி 05/12/2012
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272