உண்மை நிலையை எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டுவார்களா?

நான் தமிழ் நாளிதழ்களை தினந்தோறும் படிப்பவன். இலக்கணம் மற்றும் இலக்கியம் பற்றி ஓரளவு தெரியும். சமீப காலமாக எனக்குள் ஒரு ஆதங்கம். தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் சரியாக எழுதுகின்றார்களா? தமிழ் நெறிக் கழகம் சார்ந்த திரு தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் மிகவும் குறைப்பட்டுக் கொண்டார்.

சரி நாம் நம் கருத்தை சொல்வதில் ஏதேனும் தடை இல்லை என்ற நிலையில் எழுதுகின்றேன். அதற்காக நான் சரி என்று கூறவில்லை. எனக்கும் பல குறைகள் உண்டு. நான், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று என்றும் வாதிட்டது கிடையாது.

சரி. தற்போது பார்க்கையில் நமது நாளிதழ்கள் தங்களின் நடுநிலை உணராது ஒரு சாரார்களுக்குச் சாதகமாக பேசும்பொழுது மனம்  மிகவும் வேதனைப் படுகின்றது. அதாவது நமது செம்பருத்தி மின்னிதழை முதலில் அப்படித்தான் பார்த்தேன். ஆனால் ஆழ் நிலையில் பார்க்கும்போது செம்பருத்தி பொதுமக்களுக்காகச் சுதந்திரமாக தாராளமாக தமது கருத்தைக் கூறுவதற்குத் தடையேதும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. செம்பருத்தி இதற்கு விதிவிலக்கு என்பதனை மிகவும் ஆழமாக ஆணித்தரமாக கூறிகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இப்போது நான் குறிப்பிட விரும்புவது நமது நாளிதழ்களின் நிலையைதான். இது குறைகூறல்கள் மட்டுமல்ல ; நாளிதழ் சிறப்பாக வரவேண்டும்; தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றி வேறு உள்நோக்கம் ஒன்றும் கிடையாது.

தயவு செய்து ஒரு கட்சியை அதிகம் தாக்கியோ அல்லது அதிகம் தூக்கியோ எழுதுவது நன்மைக்கு அல்ல. இது நாளடைவில் பத்திரிக்கைகளுக்கே பல சிக்கல்கள் கொண்டுவரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  ஆதலால் பத்திரிக்கை ஆசிரியர்கள் இக்கருத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கூறும் கருத்தை மிகவும் தரமாக எழுத வேண்டுமே தவிர, மேலும் சொல்லாத கருத்தை திணிப்பது விபரீத்தைக் கொண்டுவரும். சுருங்கச் சொல்லின் உண்மை நிலையை உண்மையாக எழுதவேண்டும்.

சில பத்திரிக்கை நிருபர்கள் கட்சிகளுக்குச் சார்பாகவும் மேலதிகமாக திணித்து கூறுவதும் மகா பாவம் என்பதை உணரவேண்டும். தமது பணி செய்தி சேகரிப்பது தானே ஒழிய அதை விமரிசிப்பது அல்ல. பெரும்பாலோர் முக்கியமாக நிருபர்கள் இக்குறைகளை கண்டறிய வேண்டும். நடு நிலையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். தன்மூப்பாக எழுதி வாசகர் மத்தியில் வெறுப்பை உண்டாகுவது பத்திரிக்கை விற்பனைக்கு பாதிப்பு என்பதை உணரவேண்டும்.

ஆகவே, தர்மம் தவறாமல், நீதி வழுவாமல் உண்மையையே எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனது அன்பான கோரிக்கை. செய்வார்களா?

எதிர்ப்பார்ப்புடன்…

-கணேசன் ஆறுமுகம்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272