பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வே இல்லையா?

crime_in_malaysiaஅண்மையில் எங்கள் வீட்டில் தீபாவளி உபசரிப்பு நடத்தினோம். உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது. இரவு சுமார் 9.30 மணியவில் முகமூடி அணிந்து கையில் பாராங் கத்தியேந்திய நான்கு இந்திய ஆடவர்கள் மின்னல் வேகத்தில் வீட்டினுள் பிரவேசித்தனர். குழந்தைகளை கத்தி முனையில் கேடயமாகப் பயன்படுத்திய அவர்கள்  ஆண்களைக் சரமாரியாக தாக்கி பணம் நகைகளைக் கொடுக்கும்படி மிரட்டினர். நாங்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்க குழந்தைகளோ முகமூடி அணிந்த அந்தக் கயவர்களைக் கண்டு வீறிட்டு அலறினர்.

நகை, பணத்தை தருவதில் ஒரு நொடி தாமதம் ஏற்பட்டால் கூட வெட்டுவேன் எனக் கூறி பாராங் கத்தியை தலைக்கு மேல் உயர்த்தினார்கள். ஆண்டவனை விட, ஆட்சி செய்யும் அரசாங்கத்தை விட உயிரைப் பறிக்கவும் உயிர்ப்பிச்சை கொடுக்கவும் கூடிய அதீத ஆற்றல் பெற்றவர்களாக அந்த பஞ்சமாபாதகர்கள்  அந்த நிமிடங்களில்  தென்பட்டார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் மற்றும் விருந்தினர்களின் பணம், நகைகள், கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை பறித்துக் கொண்டப் பின்னர் அனைவரையும் அறையில் வைதது பூட்டி விட்டு காரில் தப்பினர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தோம். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம்.

போலீஸ்காரர்கள் வந்தார்கள். கலைந்து போன பொருள்களைப் படம் பிடித்தார்கள். சம்பவத்தை விவரிக்கச் சொல்லி பேட்டி எடுத்தார்கள். கடந்த  இரு தினங்களுக்கு முன்னர் இதே கும்பல் இன்னொரு வீட்டிலும் கொள்ளையிட்டுள்ளது என்ற உபரித் தகவலையும் தந்தார்கள்.

“கவலைப்படாதீர்கள், குற்றவாளிகளை நிச்சயம் பிடிப்போம். உங்கள் பொருள்களை மீட்டுத் தருவோம்” என்று மறந்தும்  ஆறுதல் வார்த்தை கூறவில்லை. ஆனால் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று மட்டும் மறக்காமல் கூறி சென்றார்கள். இங்கிதம் தெரியாத அவர்களின் செயல் அந்த இக்கட்டான நிலையில் மிகுந்த வேதனையைத் தந்தது.

அந்த கொள்ளைச் சம்பவம் எங்கள் அனைவரையும் மிகவும் பாதிக்கச் செய்து விட்டது. ஆண்டாண்டு காலமாக உழைத்து நேர்மையான வழியில் சேர்த்து வைத்து சொத்துகளை ஒரே நெடியில் இழந்து விட்டோம். அது  மட்டுமல் கொள்ளையர்களால் கடுமையாகத் தாக்கவும் பட்டோம்.

கோபம், ஏமாற்றம், வெறுப்பு, ஆற்றாமை, இயலாமை என அனைத்து வித உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டு நிம்மதி இழந்து தவிக்கிறோம். சொத்துக்களை இழந்த எங்களுக்கே இந்த நிலை என்றால் கொள்ளையின் போது குடும்ப உறுப்பினர்களின் உயிரைப் பறிகொடுத்தவர்கள் நிலை? எண்ணிப் பார்த்தால் மனசு படபடக்கிறது. நிலை கொள்ளாமல் தவிக்கிறது.

சாதாரண  வழிப்பறி சம்பவமாக இருந்தால் மனம் அவ்வளவு பதற்றப்படாது. ஆனால் மூர்க்கத்தனம் நிறைந்த ஒரு கும்பல் இருபதுக்கும் மேற்பட்டோர் குழுமியுள்ள வீட்டில் தைரியமாக நுழைந்து குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் கொடூரமான முறையில் துன்புறுத்தி பொருள்களை அபகரித்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நாட்டில் சட்டம் இருக்கிறதா? காவல் துறை இருக்கிறதா? என்று உள்மனம் சதா கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இப்போதெல்லாம் ஏதோ பாதுகாப்பு இல்லாத பிரதேசத்தில் வசிப்பது போன்ற உணர்வுதான் அடிக்கடி ஏற்படுகிறது. இரவில் உறக்க வர மறுக்கிறது. மனதில் அவநம்பிக்கை, விரக்தி, பயம்  ஏற்பட்டு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதபடி  ஆகி விட்டது.

களவு போகாத வீடு எங்கும் இல்லை என்ற நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டு விட்டதால் இனி கொள்ளையர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டு விட்டது.

daring_robberyஇக்கொள்ளைச் சம்பவத்தால் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் உறவினர்களையும் தேற்ற வேண்டும், அடையாளக் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு அலைய வேண்டும். தொலைபேசியுடன் சென்று விட்ட முக்கியமானவர்களின் எண்களை மீண்டும் தேட வேண்டும்.  இழந்து விட்ட சொத்துக்களை மீண்டும் பெற கடுமையாக உழைக்க வேண்டும். கொள்ளையர்கள் கொண்டுச் சென்ற பொருள்களுக்கும் சேர்த்து நாங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

பொருள்களைப் பறிகொடுத்த எங்களுக்கு இத்தனை கடமைகள் உள்ளன. ஆனால் கொள்ளையர்களுக்கு? உழைக்காமல் கிடைத்த ஆயிரக்கணக்கான வெள்ளி பணத்தில் உல்லாச வாழ்க்கை. பணம் முடிந்ததும் அடுத்த இலக்கை குறி வைத்துப் இன்னொரு வீட்டிற்குப் பயணம்.

திறந்த இல்ல உபசரிப்புதான் நமது நாட்டின் தனிச்சிறப்பு. கொள்ளையர்களுக்கு பயந்து அத்தகைய உபசரிப்புகளையும் நடத்த முடியாத நிலை இப்போது ஏற்பட்டு விட்டது. நண்பர்களே, இனி திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதுவதாக இருந்தால் போலீஸ் பாதுகாப்புடன் நடத்துங்கள். இல்லையேல் திறந்த இல்ல உபசரிப்புக்கு பூட்டிய இல்ல உபசரிப்பு என்று பெயர் மாற்றம் செய்து விடுங்கள்.

எங்கள் வீட்டில் கொள்ளையிட்ட அதே கொள்ளையர்கள்தான் 48 மணி நேரத்திற்கு முன்னர் இன்னொரு வீட்டிலும் கொள்ளையிட்டுள்ளனர். அதே காரில் பாராங் கத்தி, முகமூடி, கையுறைகள் சகிதம் அடுத்த இலக்கைத் தேடி அலைந்த அக்கொள்ளையர்களை  எந்த போலீஸ் ரோந்துக் காரும்  சந்தேகக் கண் கொண்டு பார்க்கவேயில்லை.

அது என்ன மாயமோ தெரியவில்லை. லைசென்ஸ் இல்லாதவன், ஹெல்மட் போடாதவன், பெர்மிட் இல்லாத அந்நிய நாட்டுக்காரன் எல்லாம் போலீசின் ஆந்தைக் கண்ணில் சிக்கி விடுகிறார்கள். ஆனால் பாழாய் போன கொள்ளையர்கள் மட்டும் அவர்களின் கண்களுக்கு சிக்கவே  மாட்டேன் என்கிறார்கள்.

கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றோ கொள்ளைப் போன பொருள்கள் மீண்டும் கிடைக்கும் என்றோ நாங்கள் நம்பவில்லை. அப்படியே கொள்ளையர்கள் பிடிபட்டாலும்  சம்பவ இடத்தில் கைரேகை பதிவாகவில்லை, முகமூடி போட்டிருந்ததால் கொள்ளையர்களை அடையாளம் காண இயலவில்லை எனக் கூறி சட்டம் அவர்களை விடுவித்து விடும்.

குற்றவாளிகளை விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் அவசர காலச்சட்டமும் அகற்றப்பட்டு விட்டதால் பிடிபட்ட ஒரே வாரத்தில் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள்.

சட்டமும் ஜனநாயக அமைப்பு முறையும் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் குற்றவாளிகளுக்கே சாதகமாகவே உள்ளனர். எங்களைப் போன்ற சட்டத்திற்குட்பட்டு நடக்கின்ற சாதாரண பொது ஜனங்கள்தான் மிகவும்  பரிதாபத்திற்குரியவர்கள்.

எங்களைப் போன்றவர்கள் வீட்டில் கொள்ளை நடந்தாலோ கொள்ளையின்போது கொலை நிகழ்ந்தாலோ அது பற்றி  அரசியல்வாதிகள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆர்ப்பாட்டம் இருக்காது. தெருப்போராட்டம் இருக்காது. பத்திரிகைகளில் அனல் பறக்கும் செய்திகள் இருக்காது. ஆனால் சிறையில் கைதி இறந்தால் சில அரசியல்வாதிகள் உண்டாக்கும் களேபரத்திற்கு அளவே இருக்காது.

அரசியல்வாதிகளுக்கு இந்த சமூகம் மீது உண்மையில் அக்கைறை இருந்திருந்தால் கடும் குற்றவாளிகளை விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யும் அவசர காலச் சட்டம் அகற்றப்பட்டதை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.

அரசியல்வாதிகளும் சமுதாயத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறிக்கொள்ளும் போராட்டவாதிகளும் சமூக விரோதிகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் ஒரு துளியைக் கூட சட்டத்திற்கு பயந்து நடக்கும் சாதாரண பொது ஜனத்திற்கு கொடுப்பதில்லை.

சமூக விரோதிகளின் கொடுஞ்செயலால் பாதிக்கப்பட்டவர்களை அரசியல்வாதிகள் சென்று கண்டு ஆறுதல் கூறியதாக எந்தத் தகவலும் கிடையாது.

தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள், சிறைச்சாலை மரணங்கள்தான் அரசியல்வாதிகளின் வாழ்வியல் மூலதனங்கள். தங்களின் அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்த மூன்று விஷயங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அவர்கள் சமுதாயத்தின் ஆணிவேரையே செல்லரிக்கச் செய்யும் சமூகப் பிரச்னைகளை  மட்டும் கண்டு கொள்வதேயில்லை.

மேடையேறி மைக் பிடித்தால் அவன் அதைச் செய்யவில்லை, இவன் இதைச் செய்யவில்லை என்று அடுத்தவனையே குறை கூறும் இந்த அரசியல்வாதிகள்  மது அருந்தாதீர்கள், ரவுடித்தனம் செய்யாதீர்கள், பிள்ளைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று  ஒரு போதும் கூறியதில்லை.

அரசியல்வாதிகள் நினைத்தால் நமது சமூகத்தில் காணப்படும் இத்தகைய சீர்கேடுகளுக்கு தீர்வு காண முடியும். கட்சி வேறு பாடின்றி அனைத்துத் தலைவர்களும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து பேசலாம். சில தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கலாம். அதனை அமல்படுத்தச் சொல்லி அரசாங்கத்தை நிர்பந்திக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் சமுதாயம் திருந்தி விட்டால் தங்கள் பிழைப்பில்  மண் விழுந்து விடுமே என்ற பயம்.

அரசியல்வாதிகளே உங்களை  மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து நம்மினத்தில் காணப்படும் கொலை, கொள்ளை போன்ற கொடூரச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கொஞ்சமாவது முயற்சி எடுங்கள். அரசாங்கத்திடம் போராடி எங்களுக்கு வானளாவ அதிகாரத்தைப் பெற்றுத் தாருங்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்கவில்லை. உழைத்துச் சம்பாதிப்பதை  தக்க வைத்துக் கொள்வதற்கும் மனைவி, பிள்ளைகளின் உயிரை காத்துக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்தித் தாருங்கள் அது போதும்.

ஜி.ராம்
சுபாங் ஜெயா, சிலாங்கூர்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272