மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?

tamil_neri_kalagamமலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன? உருப்படியான பணிகளை இயக்கம் செய்து கொண்டுள்ளதா? ஆண்டுகொரு நிகழ்ச்சி மட்டும் செய்து விட்டு நின்று விடுகிறார்களா? இப்படி ஒரு வினாவினை நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தொடுத்தார்.

என்ன செய்வது நாம் செய்யும் பணிகளை நாம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க வில்லை. எனவே நாம் உருவாக்கிய கட்டமைப்பினைக் கண்டும் நம்மிடம் பயன் பெற்றும் கருத்துப் பெற்றும் உருவாகியும் தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல் சிலர் நம்மிடமே கருத்து அறிவிக்கையில், ‘மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால் பொய் போலுமே பொய் போலுமே’ என்பதால்.. நம் நம் நிலையை உணர்த்த வேண்டியுள்ளது.

மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன?

* குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது…

* குழந்தைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவது; அதற்கான பரப்புரை செய்வது…

* தமிழிய மாணவர் பயிலரங்கு செய்வது…

* தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா…

* கிழமை தோறும் திருக்குறள் வகுப்புகள்… நாடு தழுவிய அளவிலானது ( இவ்வகுப்பில் பரப்பப்பட்டு சிந்தனைகள் கருத்துகள் என்ன என்று வகுப்பில் கலந்து கொள்வாருக்குத் தெரியும்.)

* தமிழ்த் திருமணம் செய்து வைப்பது…

* பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா…

* தமிழிய நூல்கள் பரப்பல்

* தமிழீழ மக்களுக்கான உதவி…

* தமிழீழ விடுதலைக்கான துணை…

* தமிழ் மக்களிடையே வரலாற்றுத் தெளிவு ஏற்படுத்துதல்…

* மாணவர் எழுச்சி விழா…

* முகநூல் கருத்து பரப்பல்…

* தமிழிய குடும்ப ஒருங்கிணைப்பு…

* கருத்துப் பரப்புரை அறிக்கைகள்…

இன்னும், எத்தனையோ… இவை வெறும் பேச்சுரைகள் அல்ல.. செயல் வழி நிகழ்த்தப்படுபவை. தமிழ் தமிழர் , தமிழ் நெறி, தமிழ் தேசியம். அதுவே மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் இலக்கு.

தமிழன் என்ற ஒரு கட்டுக்குள் தமிழனை ஒருங்கிணைப்பதே நம் வேலை. தமிழ் நாட்டில் சிலர் செய்வது போல தமிழன் என்ற போர்வையில் மறைமுகமாக சாதியத்தை உள்நுழைத்து.. கருத்துக் குழப்பங்களை ஏற்படுத்தி தமிழனையே வெட்டிப் பிளக்கும் கேடுகளை செய்வது அல்ல நம் வேலை.

ஒருவன் பெரியாரை வேணடாம் என்பான்; ஒருவன் பெரியாரை வேண்டும் என்பான்; ஒருவன் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பான்; மற்றவன் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பான்; ஒருவன் நாடார் என்பான் ஒருவன் பள்ளன் மள்ளன் என்பான் ஒருவன் வன்னியன் என்பான் மற்றவன் பறையன் என்பான் ஒருவன் தேவன் என்பான் ஒருவன் நாயுடு நாயக்கன் என்பான்.. ஆனால் தமிழன் என்பான் எத்தனைப் பேர்…?

தமிழன் என்றாலும் பிராமணனை உள்நுழைத்துக் கொண்டு மீண்டும் சாக்கடைக்குள் விழும் கொடுமைதானே நடந்து கொண்டுள்ளது. தமிழ் வழிச் சிந்தனைக் கொண்ட தமிழனை உருவாக்காத வரை தமிழனை எப்படி மீட்பது?

நான்கு தமிழன் ஒன்று கூடினால் நான்கே ஆண்டுகளில் நான்கு திசைகளில் கூறு பட்டு சென்று விடுகிறான். இது தானே இன்று வரை நடந்து கொண்டுள்ளது.

எனவே எம் பணியை நாம் அமைதியாக, ஆர்ப்பரிப்பு இன்றி செய்து வருகிறோம். தமிழ் நெறிதான் தமிழர்க்கு வாழ்வு. தமிழ் நெறி என்னும் சொல்லாட்சிகுள்தான் தமிழன் தமிழனாக வாழ முடியும். அதை மறைப்பதும் மறுப்பதும் தமிழ்ப் பணியாகாது. மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இத்தகு தமிழ் நெறிப் பணியையே இந்நாட்டில் அமைதியாக செய்து வருகின்றது.

-இரா.திருமாவளவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272