இந்தம்மா திருந்தாது…

Sharifahவாம்மா… மின்னல்! ஊரே அல்லோகலப்பட்டு, கொஞ்சம் ஓய்ந்த நேரமா பார்த்து வந்திருக்கீங்க போல… பரவாயில்ல, இப்பவாச்சும் வந்தீங்களே!  உங்க தன்னிலை விளக்கம் சூப்பர் ! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் …..! என்னம்மா பிச்சு உதறீங்க! அதுலயும், பவானியையும், மற்ற எல்லாரையும் மன்னிச்சீங்க பாருங்க… அங்கே தான் நிக்குறீங்க போங்க…! என்னே பெருந்தன்மை… புல்லரிச்சு போச்சு !

இதுல ‘பவானி உள்ளே நுழைஞ்சு சினமூட்டினாராம்’-னு புது கதை வேற…. இவங்க சொல்லி சொல்லி பார்த்தாங்களாம்…பவானி தான் கேட்கலையாமே! அடப் பாவமே! அப்படியா சங்கதி, நமக்கு தெரியாம போச்சே….!

அப்போ நாடே பார்த்த அந்த வீடியோ ?… அதுக்கும் பதில் இருக்கே.. அதாவது நாமெல்லாம் பார்த்தது கொஞ்சம் தானாம். அதுக்கு முன்னாடி நடந்ததை காட்டலையாம். காட்டியிருந்தா…..? இதுக்கே தாங்கல..! இன்னும் நடந்த சம்பவத்தை முழுசா பார்த்திருந்தா ரியாக்ஷன் இன்னும் பலமா இருந்திருக்கும்!

இங்கப்பாருங்க…. நீங்க சொல்றது போல் இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல. எல்லாரும் வேலையை விட்டுட்டு, உங்களைத் தாக்க வேண்டிய அவசியமும் இல்லை. இங்க முன் வைக்கப்படும் பிரச்னையே சம்பவத்தன்றூ நீங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி மட்டும் தான். கேள்வி கேட்ட அல்லது தனது கருத்தைக் கூற வந்த பல்கலைக் கழக மாணவியை நீங்கள் இடை மறித்தது சரியா? மைக்கை எடுத்தது சரியா? அதுவோர் ஆய்வரங்கம். அங்கே பலர் பல விதமான கருத்துகளைக் கூறத்
தான் செய்வார்கள். அது சரியா தவறா என முடிவு செய்ய வேண்டிய அவசியம் யாருக்குமில்லை.

உங்கள் செயலை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களோ, அதையே தான் மற்றவர்கள் பவானிக்கு செய்கிறார்கள்…ஏன் என்றால் அதில் நியாயமிருக்கிறது!

இன்னொன்று, இங்கு அரசியல் பேசப்படவில்லை! பவானி சார்ந்துள்ள இயக்கத்தைப் பற்றியும் பேசவில்லை. அரசுக்கு எதிராக யாரும் அணி திரளவும் இல்லை. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை தடுக்கப்பட்டதை பற்றி  மட்டும் தான் கேள்வி!

பவானியை அன்று நீங்கள் பேச விட்டிருந்தால், பேசி முடித்து விட்டு அவர் போய் உட்கார்ந்திருப்பார். முடிந்தால் பதில், இல்லையென்றால் நன்றி என்று மட்டும் கூறி விட்டு நீங்களும் கிளம்பியிருப்பீர்கள்! இன்று விஷயம் இந்தளவுக்கு வெடித்திருக்காது!

ஆனால், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள், நீங்கள் நடந்து கொண்ட விதம் ஆகியவை இன்று வேறு வழியில் திரும்பி விட்டன. வீரத் திருமகள் அம்பிகாவை பற்றி பேச என்ன அவசியம் வந்தது உங்களுக்கு? சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு
அவர் தான் காரணம் என்ற கருத்தை திணிக்க நீங்கள் யார்? கேட்டால், அது என் பேச்சுரிமை என்பீர்களா? கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களுக்கும் தானே!

பேச்சுரிமைக்கு மதிப்பு கொடு ! மாணவர் சமுதாயத்தின் குரலை நசுக்காதே! இலவசக் கல்வி வேண்டும்! என்ற ரீதியில் புதிய எழுச்சிக்கு, தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் வித்திட்டு விட்டீர்கள்!. அதற்கு ஒரு வகையில் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!

முடிக்கும் முன்… உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என அரசாங்க அமைச்சர்களே அறிவித்து விட்டனர். நீங்கள் யாரென்றே அவர்களுக்கு தெரியாதாமே..! அப்படியிருக்கையில் ஒரே மலேசியா சுலோகத்தை கொண்ட ஓர் இயக்கத்தின் தலைவியாக பல்கலைக் கழகங்க கருத்தரங்குளை நீங்கள் வலம் வந்தது எப்படி? அப்படியென்றால் ஒரே மலேசியா என்ற பெயரை தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்துடன் சேர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் விஐபி ஆக வலம் வரலாமா…!

அரசே இதை கொஞ்சம் கவனிப்பாயா….

– Moganadas Muniandy

http://morganthegreat2002.blogspot.com

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272