2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஹிண்ட்ராப் தடை செய்யப்பட்டு, ஒரு சட்ட விரோத அமைப்பாக மலேசிய அரசால் பிரகடனப் படுத்தப் பட்டது. மலேசிய திருநாட்டின் பொது ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும் , இறையாண்மைக்கும் , இன நல்லினக்கதிற்க்கும் ஹிண்ட்ராப் குந்தகம் விளைவித்ததாக தவறான காரணங்கள் முன்வைக்கப்பட்டு அந்த தடை உத்தரவு அரசால் நியாயப் படுத்தப்பட்டது.
அந்த தடை உத்தரவு ஹிண்ட்ராப் அமைப்பையும் அதன் போராட்டவாதிகளையும் , கோரிக்கைகளையும் குழி தோண்டி புதைத்து விடும் என்று பலரும் கருதி உச்சிப் பொழுதில் பரவசக் கனவு கண்டார்கள்.
சட்டம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. ஹிண்ட்ராப் கையில் எடுத்துக் கொண்டிருப்பது முற்றிலும் ஒரு தர்மப் போராட்டம் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கொள்ளவில்லை ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களும் அதன் ஆதரவாளர்களும்.
நம் இந்திய சமூகம் தன்மானத்தை இழந்து விடக் கூடாது, தொடர்ந்து வஞ்சிக்கப் படக் கூடாது என்பதற்காக தடையையும் மீறி நாம் தொடர்ந்தது போராடியே ஆகவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார் எங்கள் தலைவர் வேதமூர்த்தி. அந்த கட்டளையின் நியாயத்திற்கு கட்டுப்பட்டு ஹிண்ட்ராப் தனது போராட்டத்தை தொடர்ந்ததது.
எந்நேரத்திலும் கைது செய்யப் படலாம். காலவரை இல்லாமல் சிறையில் தள்ளப் படலாம். தங்களை நம்பி இருக்கும் மனையாளும் பிள்ளைகளும் நிர்க்கதியாக நிற்க நேரிடலாம் என்று தெரிந்தும் ஹிண்ட்ராப் அமைப்பினர் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்களையும் , பிரார்த்தனைகளையும், விளக்கக் கூட்டங்களையும் முன்னின்று நடத்தினோம். அத்தனை நிகழ்வுகளிலும் நாங்கள் போலிசாரின் நடவடிக்கைகளில் இருந்து தப்பியதில்லை. சில சந்தர்ப்பங்களில் கைதும் செய்யப் பட்டோம். இண்டர்லோக் நாவலுக்கு எதிராக போராடிய 53 பேரின் மீது இன்றும் வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் இத்தனை சவால்களை வேறு எவரும் சந்தித்தது கிடையாது. தர்மம் வெல்ல வேண்டும் என்றால் இந்த சோதனைகளை கடந்தே ஆகவேண்டும் என்பது மட்டுமே எங்களின் ஒரே ஆறுதல். ஹிண்ட்ராப் அமைப்பு தடை செய்யப் பட்ட இந்த நெருக்கடியான சவால் மிகுந்த கால கட்டத்தில் எத்தனை சிரமங்களையும்,சோதனைகளையும்,வேதனைகளையும் நாங்கள் அனுபவித்து இருப்போம் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்கும், சிந்தைக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்தப் போராட்டத்தில் நாங்கள் எதையும் ஈட்டியதில்லை ஆனால் அதிகம் இழந்திருக்கிறோம்.இன்னும் இழப்பதற்கும் தயாரக இருக்கிறோம்.
இப்படியான சவால்களும் ஆபத்துகளும் நிறைந்த காலக் கட்டத்தில் எங்களோடு செம்பருத்தி இணைந்திருந்ததை நாங்கள் தன்னடக்கத்தோடு இன்று நினைவு கூறுகிறோம்.
ஹிண்ட்ராப் அமைப்பை தடை செய்த அதே உள்துறை அமைச்சின் கண்காணிப்பில்தான் நீங்களும் செயல்படுகிறீர்கள். அப்படி இருந்தும் எங்களின் போராட்டம் குறித்த அறிவுப்புகளையும் செய்திகளையும், நிகழ்வுகளையும் , விளம்பரங்களையும் தைரியமாக பிரசுரித்து மக்களை சென்றடைய செய்த உங்களின் சமுதாய பங்களிப்பிற்கு எங்களால் நன்றி கூற முடியாது. காரணம் அவ்வாறு செய்தால் எங்களிடம் இருந்து உங்களை பிரித்து பார்பதாக அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கும். உங்களை ஹிண்ட்ராப் அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனபடியால் தங்களின் சமுதாய கடமைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
உங்களின் அன்பான வாசகர்களாகிய எங்களின் ஆதரவாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.
இதுவரையில் இந்நாட்டு இந்திய சமூகத்திற்கு தலைமை தாங்கி கொண்டதாக கூறிக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதவிக்காகவும்,பணத்திற்காகவும் , சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் தங்களின் இலக்கிலிருந்து விலகி சென்றதை மீண்டும் மீண்டும் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து நிற்பது எங்களுக்கு புறிகிறது. தயவு செய்து இன்றைய ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களையும் அந்த பட்டியலில் சேர்த்து விடாதீர்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
எங்களின் ஒவ்வொரு அறிவிப்பும் , முடிவுகளும்,நடவடிக்கைகளும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட ஏழை இந்தியர்களின் விடிவை கருதியே அமையும் என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.
நம் இனம் உலகத்தோரெல்லாம் வியந்து , புருவம் உயர்த்தி பார்க்கும் வியக்கத்தகு பாரம்பரியத்தையும், வரலாற்றையும், கலாச்சாரத்தையும், சம்பிரதாயங்களையும், இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இனம் இன்று சர்வமும் பொதிந்த இந்த மலையக திருநாட்டில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அனைத்திற்கும் கையேந்தும் அவலத்திற்கு தள்ளப் படும் துயரத்தை துடைத்தொழிக்கவே ஹிண்ட்ராப் அமைப்பின் பொருப்பாளர்கலாகிய நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.
பகட்டு விளம்பரங்களுக்கும், பதவி மோகத்திற்கும், நிலையற்ற காசு பணத்திற்கும் , சுக போக வாழ்விற்கும் எங்களின் உயிரினும் மேலான மலேசிய இந்திய சமூகத்தை தாரை வார்துக்கொடுக்கும் ஈனர்கள் அல்ல ஹிண்ட்ராப் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்பதை நீங்கள் நிச்சயம் ஒரு நாள் உணர்வீர்கள்.
அந்த பொன்நாள் பொழுதின் கீழ்த்திசை கதிரொளி கிரணங்கள் புவனமெல்லாம் படர்ந்து பட்டொளி வீசும் சுகந்தத்தை நீங்கள் அனுபவிக்கும் வரை எங்களோடு செம்பருத்தியும், செம்பருத்தி வாசகர்களும் எங்களுக்கு பக்கபலமாய் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
வி. சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, 30/1/2013