ஹிண்டராப் வேதமூர்த்தி நம்மை மீண்டும் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்!

Waythamoorthy2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 2008ல் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2/3  பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இந்தியர்கள் உரிமை உள்ளவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற உரிமை முழக்கத்தை உரக்க கூறினார்கள். அன்று நம் கண் முன் இந்தியர்களின் போராட்டவாதிகளாக தெரிந்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார், மனோகரன், கங்காதரன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர்.

இவர்களில் வேதமூர்த்தியைத் தவிர மற்ற நால்வரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். வேதமூர்த்தி நாட்டை விட்டு தப்பியோடினார். இக்காலக்கட்டத்தில் எத்தனை ஆலயங்களில் இவர்களுக்காக பிரார்த்தனை நடத்தப்பட்டது என்பதை எல்லோரும் அறிவோம்.

ஹிண்டராப் பேரணியில் கலந்து கொண்டதால் பலர் கைதாயினர். அவர்களுக்காக வாதாடவும் போராடவும் துணை நின்றது பாக்காத்தானைச் சேர்ந்த தலைவர்களும் மேலும் சில நல்லுள்ளங்களும்தான்.

வேதமூர்த்தி நிம்மதியாக ஏதோ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடர போவதாகவும் மலேசிய அரசாங்கம் நமக்கு செய்த கொடுமைகள் தொடர்பாக தகவல்கள் திரட்டுவதாகவும் நமக்கு காதில் பூ சுற்றி கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது என்னவானது. உரிமையைவிட்டு எட்டி உதைத்தவனிடம் பிச்சை எடுக்கப் புறப்பட்டுள்ளார் வேதமூர்த்தி.

அருமை நண்பர்களே, வேதமூர்த்தியை தேச துரோகி என முத்திரை குத்தி கடப்பிதழை முடக்கிய அரசாங்கம் கடந்த ஆண்டு வேதமூர்த்தி நாடு திரும்பும் போது எவ்வித நடவடிகையும் எடுக்காமல் அவரின் கடப்பிதழையும் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. அத்துடன் அவர் சென்ற இடமெல்லாம் பரிசான் அரசைக் குறை சொல்வதும் கிடையாது.

இது சம்பந்தமாக கேள்வி எழுப்பும் போது, நமக்கு யார் அரசு அமைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, நமது உரிமைகளை யார் வழங்குகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

ஆக இங்கே சந்தேகம் எழ தொடங்கியது. இது பாரிசான் அரசும் வேதமூர்த்தியும் திட்டமிட்ட சதியா? ஏன் வேதமூர்த்தியை விசாரணைக்கு உட்படுத்தவில்லை? ஏன் வேதமூர்த்தி அரசைக் குறை கூறவில்லை? இன்று பாரிசானை நாடி பிச்சை பாத்திரம் ஏந்தியுள்ளார். அவர்களின் கோரிக்கைதான் என்ன?

1.    தோட்ட மக்களின் மேம்பாடு
2.    இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு/ வியாபார வாய்ப்பு
3.    இந்தியர்களுக்கு கல்வி வாய்ப்பு
4.    பிரஜா உரிமை பிரச்சனைக்குத் தீர்வு

இன்னும் இரண்டு கோரிகைகளை பாரிசான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக இன அடிப்படையில் கோரிக்கை வைத்துள்ளனர். நாம் மலேசியர்கள் என்று சொல்லும் போது ஏன் இந்த இன பாகுபாடு?

பாக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையினை ஹிண்டராப் பரிசீலனைச் செய்து ஏற்று கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் வேதமூத்தி அதில் முழுமை இல்லை எங்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார். பாரிசானுக்காக மாற்றிக் கொண்டார்.

பாக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைப் படித்து பார்த்தால் இவை அனைத்தும் பாக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் உள் அடங்கியுள்ளது என்பது தெளிவாக தெரியும்.

அனைத்துச் சமய மறுமலர்ச்சி மற்றும் ஆதிக்கப் போக்கினை நீக்குவது போன்றவை நமக்கு பெரும் நன்மையைக் கொண்டுவரும் என்பதை வேதமூர்த்தி அறிவாரா?

அனைத்து துறைகளிலும் ஓர் இனத்தின் ஆதிக்கம் இருப்பதனால் நமது வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. பாக்காத்தான் இதனை உடைப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதைக் கேட்க வேதமூர்த்திக்கு நாதியில்லை!

ஷா ஆலாம் பாடாங் ஜாவா ஆலய உடைப்பே ஹிண்டராப்பின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.  ஆனால் அதே ஷா ஆலாமில் இந்து மதத்தையும் இந்துக்களையும் மிகவும் இழிவாக பேசிய சுல்கிப்ளி நோர்டினுக்கு பாரிசான் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய தலைவர் என்ற புகழாரம் வேறு. இவர்களுக்குத் துணை போகிறார்கள் ஹிண்டராப் தலைவர்கள். வெட்கக்கேடு…

நடந்த, நடக்கின்ற செயல்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு நாடகம் ஓராண்டாக திட்டமிட்டு அரங்கேற்றம் கண்டதை அறிய முடிகிறது. இந்தியர்களை ஏமாளிகளாகவும் முட்டாள்களாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டி தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மானங்கெட்ட வேதமூர்த்தி.

மலேசியகினி ஆங்கில பதிப்பில் ஒரு வாசகர் கூறிய கருத்து எனது மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.

ஒரு இந்தியனையும் பாம்பையும் கண்டால் இந்தியனைத்தான் முதலில் கொல்ல வேண்டும் என்று சொல்வார்கள் அதனை வேதமூர்த்தி என்ற இந்தியன் உண்மையாக்கி விட்டான் என்பதே அது.

ஒட்டு மொத்த இந்தியர்களையும் அவமானத்தில் தலை குனிய வைத்துவிட்டார் என்பதே உண்மை.

எஸ்.வேலன், நெ.செம்பிலான்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272