தாய் மொழிப் பள்ளிகளுக்கு மீண்டும் சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்களா?

Education DG and ex-top judgeமாரா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின்  இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், “13 வது பொதுத் தேர்தல் முடிவுகள் : முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர் வாழ்வும்” என்ற கருத்தரங்கில் , மலேசியாவில் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டுமாயின் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை அகற்ற வேண்டுமென்று திருவாய் மலர்ந்திருக்கிறார் !

அவருக்கு ஆதரவாக முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லாவும் ஒரே தேசியப் பள்ளி என்ற கொள்கைக்கு தமிழர்களும் சீனர்களும் இணங்கவில்லை என்றால் அதனைக் கட்டாயப்படுத்த நீதிமன்ற ஆணைப் பெறப்பட வேண்டும் என்று ஒத்தூதியுள்ளார்!

கடந்த தேர்தல் முடிவுகள் மக்கள் இனரீதியாக பிரிந்து கிடப்பதைக் காட்டுகின்றது. இதற்கு ஒரே மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தாததே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நமது பார்வையில் மக்கள் கூட்டணியில் மூன்று இனமும் மலேசியர்களாக தங்களை முன்னிலைப் படுத்திக்  கொண்டிருப்பதைக் காண முடிகிறதே ! யார் இனரீதியான  கட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள்  என்ற கேள்வி நமக்குள் எழுகிறதே!

“ Bahasa Jiwa Bangsa” என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன, என்பதை இவர்கள் விளக்குவார்களா ? வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம் ? அவர்கள் மேல் தவறு இருப்பதாக நான் எண்ணவில்லை! ஏனென்றால் அவர்கள் மேல் அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்கள் ! இது கடந்த கால  சம்பவங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

இனி தமிழ் உணர்வாளர்களும், தமிழ் சார் இயக்கங்களும் வரிந்துகட்டிக் கொண்டு கண்டனக் கணைகளைத் தொடுப்போம் ! அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளின் காவலர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும். உலை கொதிப்பதைப் போல் கொதித்து ஓய்ந்து விடுவோம் ! அரிசிக்கும் பருப்புக்கும் அலைகின்ற சமுதாயத்தின் ஆற்றல் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதா என்ன !

நம்மைப் பிரதிநிதிக்கின்ற அரசியல் கட்சிக்குத்தான், இந்தச்  சிக்கலை அவிழ்க்கக் கூடிய அதிகாரம் உள்ளது. அதற்குத் தானே அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் !

நாடகம் நடிக்காமல் அவர்கள் இந்தச் சிக்கலை முன்னெடுத்துச் சென்றால், நாமும் அவர்களுக்குப்  பக்கபலமாக இருப்போம், அதை விடுத்து அவர்கள்தான் மன்னிப்புக் கேட்டு விட்டார்களே, மன்னித்து விடுவோம் என்று மானங் கெட்டத் தனமாக இவர்கள் சொல்வார்களேயானால் இனமானமும் மொழிமானமும் கொண்ட தமிழ் இயக்கங்களும், தனி நபர்களும் ஒன்றுகூடி ஆலோசித்து இதற்கு நாமே ஒரு முடிவு காண்போம்.

மா.செழியன்
துணைத் தலைவர்
“நாம் தமிழர்” குமுகப் பண்பாட்டு இயக்கம் சிலாங்கூர்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272