ம.இ.கா. துணைக் கல்வி அமைச்சர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!

makkal karutthu02713மா.இ.கா மாற வேண்டும்!

ஆனால் அவர்கள் இன்னும்  மாறவில்லை! கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட அடி கூட அவர்களை மாற்றவில்லை என்றே சொல்லத்  தோன்றுகிறது.

அவர்களின் போக்கு பதவியில் இருக்கும் வரை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்னும் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது.  மிகவும் வருத்தத்திற்குக்குரிய விஷயம்.

தங்களை இந்தியர்களின்  தாய்க்  கட்சி என்று மட்டும் சொல்லத் தெரிந்த அவர்களுக்கு அந்தத் தாய்க் கட்சிக்குரிய இலக்கணத்தை அவர்கள் தெரிந்திருக்க வில்லை!

டத்தோஸ்ரீ சாமிவேலுவைப் பற்றி நமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவரைத் தவிர வேறு யாரும் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தவர். யாரையும் அவர் அண்ட விடவில்லை. அமைச்சர் என்றால் நான் ஒருவன் தான்!  என்னைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகுதியில்லை என்று கொஞ்சம் அதிகமாகவே தன்னைப் பற்றி நினைத்தவர்.

ஆனாலும் நடந்து முடிந்த தேர்தலில் அனைத்தும் மாறிப் போயின!

பிரதமர் நஜிப்,  ம.இ.கா.வினர்  எதிர்ப் பார்த்ததை விட அதிகமாகவே அமைச்சரவையில் இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார். அது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிலும் குறிப்பாக துணைக் கல்வி அமைச்சர் பதவி. துணைக் கல்வி அமைச்சர் என்றாலும் அது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. எத்தனையோ ஆண்டுகளாக நமக்கு இந்தப் பதவி வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். இந்தியர்களின் கல்வி சம்பந்தமான பிரச்சனைகள் தீர இந்தப் பதவி நமக்கு அவசியம் தேவை.  ஆனாலும் கல்வி சம்பந்தமான நமது பிரச்சனைகள் தீரும் என்னும் நம்பிக்கை சமீபத்திய மாண்புமிகு கமலநாதனின் அறிக்கைகள், நடவடிக்கைகள், பேச்சுக்கள்   எதுவும் நமக்கு திருப்தி அளிப்பவனவாக இல்லை.

குறிப்பாக மெற்றிகுலேசன் சம்பந்தமான பிரச்சனையில் அவரிடம் எந்த புள்ளி விபரமும் இருப்பதாகத் தெரியவில்லை! கல்வி அமைச்சருக்கும் அவருக்கும். கல்வி அமைச்சுக்கும் அவருக்கும், எந்த விதத்  தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை கல்வி அமைச்சிடம் இருந்து அவருக்குச் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் இதுவெல்லாம் சரியான காரணங்கள் அல்ல.

அவருடைய சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கிறது.  இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முக்கிய கடமை இப்போது அவருக்கு வந்திருக்கிறது.  இதனை அவர் தட்டிக் கழிக்கக் கூடாது.

நீங்கள் அம்னோவின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கும் புரிகிறது. ஆனாலும் நமது தேவைகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அதனை வெளிக் கொண்டு வருவது உங்களின் சாமர்த்தியம்.

மீண்டும் மீண்டும் இந்திய மாணவர்களைக் குறைச் சொல்லாதீர்கள். திறமை இல்லாதவர்கள் என்று சொல்லாதீர்கள். அப்படித் திறமை இல்லாதவர்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்களும் திறமை இல்லாதவர்களின் பட்டியலில் சேருவீர்கள்!

வெறும் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகளுக்குச்  செல்லும் துணைக் கல்வி அமைச்சராக இருக்காதீர்கள்.

ஆக்ககரமாக செயல் படுங்கள். அதுவே எங்களது வேண்டுகோள்!

 -கோடீசுவரன்