என்னதான் நடக்குது நாட்டினிலே?……. (கதிர்)

makkal karutthu_pic_16_8_201313-வது பொதுத் தேர்தல் முடிந்தப் பிறகு நம் நாடு ஒரு சீரற்ற நிலையை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது!

இதைப் பற்றி அரசியல்வாதிகளோ அரசு சார்பற்ற இயக்கங்களோ பெரும் அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை!

13-வது பொதுத் தேர்தலுக்கு முன் சத்து மலேசியா சுலோகத்தோடு பல திட்டங்களையும் வாக்குறுதிகளையும் சுமந்து பம்பரமாய் சுற்றிச் சுழன்ற ‘நம்பிக்கை’ பிரதமர் இப்ப இருக்கும் இடமே தெரியவில்லை!

நாட்டில் தற்பொழுது உச்சத்தை எட்டியுள்ள கொலை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், மதம் தொடர்பான சர்ச்சைகள் இவைகள் எதையுமே ‘நம்பிக்கை’ பிரதமர் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்கு முதுகெலும்பாய் இருக்க வேண்டிய காவல் துறையினர் அம்னோவின் கைப்பாவைகளாகவும் ஒரு குறிப்பிட்ட இன(மத) காவலர்களாக மட்டுமே செயல் படுவது மிகவும் வருத்தத்திற்குறியது!

நாட்டில் தற்பொழுது மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் கொலை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தீர்வு காண தவறிய காவல் துறையினர், இனியாவது ஒரு குறிப்பிட்ட இன(மத) காவலர்களாக மட்டுமே செயல் படுவதை நிறுத்திவிட்டு அனைத்து மலேசியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும்!

இது இவ்வாறிருக்க இன்னொரு புறம் மகாதீர் மற்றும் பெர்க்காசாவின் இனவாத பேச்சுக்களும் சீண்டல்களும் மக்களை மேலும் எரிச்சலடையச் செய்கிறது!

மேலும் உயர்ந்து வரும் விலைவாசியும், டீசல் தட்டுப்பாடும் மக்களை பாதிக்கவே செய்துள்ளது. ஆசியான் வட்டாரத்திலேயே மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள நமது நாட்டு பொருளாதார நிலை கவலையளிக்கிறது!

குறைந்து வரும் அன்னிய முதலீடுகளும், ரிங்கிட் நாணயத்தின் வீழ்ச்சியும் குறைந்த மற்றும் நீண்ட கால பாதிப்புகளை வேலை வாய்ப்பு மற்றும் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

நிலைமை இவ்வாறிருக்க, அரசு சார்பற்ற இயக்கங்களோ(பெரும்பாலும்) அரசு மானியம் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயுள்ளன. அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களோ(பெரும்பாலும்) பாரிசான் பக்காத்தான் இருவருக்கிடையில் முட்டி மோத விடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றன!

தமிழ் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களோ(பெரும்பாலும்) பாரிசான் பக்காத்தான் இருவருக்கிடையில் முட்டி மோத விடுவதோடு நில்லாமல் ம இ கா-வின் பழைய குப்பைகளை கிளறுவதிலும், ம இ கா- வினருக்கிடையில் சிண்டு முடித்து விட்டே பிழைப்பை ஓட்டுகின்றனர்.

நமக்குச் சரியான அரசும் அமையவில்லை! சரியான ஊடகங்களும்(பெரும்பாலும்) அமையவில்லை! எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டுள்ளது மக்களே! குறிப்பாகத் தமிழர்களே!

இனியாவது அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்கள்(பெரும்பாலும்) குறிப்பாக தமிழ் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்கள்(பெரும்பாலும்) தங்கள் பொறுப்புகளை உணர்ந்து மக்களுக்கு பரந்துபட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை தறுவார்கள் என எதிர்ப்பார்ப்போம்!

– கதிர்