இந்திய தலைவர்கள் உதவிச் செய்வார்களா?

makkal Karutthu31july 13கல்வியால் உயரலாம். கல்வியே நமது வாழ்வின் கண்கள். கல்வி கற்றவன் சிறப்படைவான். கல்வி கற்காதவன் கண்கள் இருந்தும் புண்கள் இருப்பவனாக கருதப்படுவான்..கல்வியைப் பற்றி எவ்வளவு சிறப்பான கருத்துக்கள். நமது மலேசிய நாட்டில் கல்வியையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கையில் உண்மையாக மனம் வலிக்கின்றது.

நமது மாணவர்கள் இரவும் பகலும் கல்வி கற்றுத் தேர்ச்சி அடைகின்றார்கள். யு.பி.எஸ்.ஆர். தேர்வில் ஏழு “ஏ” க்கள். பி.எம்.ஆர். தேர்வில் ஒன்பது “ஏ” க்கள். எஸ்.பி.எம். தேர்வில் பன்னிரண்டு “ஏ”க்கள். பிறகு மெட்ரிகுலேசன் சென்று கல்வி கற்று அங்கும் “4” ஃப்லேத். புறப்பாட நடவடிக்கைகளில் “90” %. ஆனால் கேட்ட அல்லது தேர்வுச் செய்த பிடித்தமான பாடத்தைப் படிப்பதற்கு பல்கலைகழகம் இடம் தர வில்லை.

தலைவர்களே……கட்சித் தலைவர்களே…..ஆளும் கட்சியாகட்டும்…எதிர்க் கட்சியாகட்டும்…மாணவனின் தந்தை, தாய், அண்ணன், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம் எல்லா தலைவர்களையும் சந்தித்து உதவிக் கேட்கின்றனர்….நான் பார்க்கின்றேன். உதவிச் செய்கின்றேன். பொறுத்திருங்கள். என்று ஆறுதல் சொல்கின்றனர். ஆறுதல் தேவைதான்; .தன்முனைப்புத் தேவைதான். ஆனால் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற  மாணவர்களுக்கு வேண்டியது பல்கலைக்கழத்தில் பயில ஒரு இடம். அதுவும் தமக்கு பிடித்தமான பாடத்தில் பயில ஒரு இடம். அந்த இடம் கிடைக்காமல் அவதிப்படுவோர் எத்தனை பெர்கள். எண்ணிலடங்கா!!!!!

தலைவர் என்று சொல்லிக் கொள்வோர் நிச்சயமாக இம்மாதிரியான மாணவர்களுக்கு உதவிப் புரிய வேண்டும். பலர் நடுத்தர வர்க்கத்தினர். சிலர் மிகவும் ஏழைகள். வர்த்தகம் புரியும் பல்கலைக்கழத்தில் படிப்பது, வெளி நாட்டில் சென்று படிப்பது மிகவும் இயலாத காரியம். ஊன் உறக்கம் இல்லாமல், பல தியாகங்கள் செய்து, படிப்பே உயிராய் வாழ்ந்த இம்மாணவர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா? மனம் எப்படி பாதித்திருக்கும் என்று சற்றேனும் சிந்தித்தால் பதில் கிடைக்கும்.

என்னிடம் வரும் மாணவர்களுக்கு என்னால் என் வரயரைக்குள் உட்பட்ட சக்தியில் உதவிச் செய்கின்றேன். வருடத்தில் பல நூறு மாணவர்கள் தேடி வருகின்றார்கள். நம்பிக்கை. நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் வருகின்றார்கள். ஆனால் என்னால் 100% அனைவருக்கும் உதவிட முடியாது. சக்தியும் இல்லை. ஆனால் மேல்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் நிச்சயமாக உதவிச் செய்ய முடியும். அவர்கள் குரல் நிச்சயமாக சக்தி உள்ள குரலாக இருக்கும். மாநில, தேசிய ரீதியிலான கட்சித் தலைவர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் தலைவர்களால் நிச்சயமாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவரகளுக்கு உதவிட முடியும். செய்வார்களா?

முக்கியமாக தலைவர்கள்  தமது இருக்கைப் பறி போய் விடக்கூடாது என்ற நிலையில் செயல்பட்டால் நிச்சயமாக நமது சமுதாயத்திற்கு எதையும் நாம் செய்து விட முடியாது. நமது பதவி நிரந்தரமில்லை என்ற எண்ண்த்தில் செயல் பட்டால் உண்மையாக மக்களுக்கு உதவிகள் செய்து விட முடியும். எல்லா இந்திய தலைவர்களும் முக்கியமாக மாநிலமும் சரி தேசியமும் சரி மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நம்பினால் நமது மாணவர்களுக்கு பலகலைக்கழகத்தில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்காது.

தலைவர்கள் உதவுவார்களா? பதவியை பணயம் வைத்து செயலாற்றுவார்களா? கடவுளுக்கே வெளிச்சம்.

விரக்தியுடன்,

கணேசன் ஆறுமுகம்

பாடாக் மத்தி ம.இ.கா கிளை தலைவர்.