அடா! அடா! எத்தனை தமிழ் நாளிதழ்கள்!……………(கோடிசுவரன்)

tamil-newspapersநினைத்தால் கண்கள் கலங்குகின்றன!

தமிழனுக்குச்சேவைசெய்ய எத்தனை நாளிதழ்கள்.

ஒன்றா! இரண்டா! ஆறு நாளிதழ்கள்! ஐயா!ஆறு நாளிதழ்கள்! அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. அதிகமாக விற்பனையாகும் மலாய் நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. சீன மொழியில்கூட அத்தனை  இல்லை. சீன மொழியின் இல்லாத விற்பனையா!

நாளிதழ்கள்மட்டும் தானா? வார இதழ்கள், மாத இதழ்கள் அடா…! அடா….! நமது சமுதாயத்திற்குச் சேவை செய்ய எத்தனை இதழ்கள்! வரிந்து கட்டிக் கொண்டல்லவா சேவை செய்ய வந்திருக்கிறார்கள்!

ஆமாம்! அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிக்கை வெளியீடு என்பது சாதாராணமான விஷயமல்ல.  யானையைக் கட்டித்தீனீ போடுவது போல என்பார்கள். ஒரு சிறிய சமூகத்தை நம்பி இலட்சக் கணக்கில் பணம் போட்டு பத்திரிக்கை  வெளியிட தயாராய் இருக்கிறார்கள்  என்றால் அதை  நாம் லேசாகக் கருதிவிடமுடியாது.

பணம்போடுவதுஒருபக்கம் இருந்தாலும் அவர்களுடைய உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதிப்பிக்கப்பட வேண்டும். தீடீரெனநிறுத்தவும் படலாம். தொடர்ந்து பத்திரிக்கை நடத்தப்படும் என்பதற்கான  உத்தரவாதம் இல்லை. அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தால் மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்னும் நிலைமை.

அரசாங்கத்திற்குமட்டுமே ஆதரவு என்றால் அது நிச்சயமாக இந்தச் சமூகத்திற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. அவர்கள்: நோக்கமே வேறு.

அரசாஙத்தை ஆதரிப்பதன் வழி தஙகளுக்கு வேறு வகையான உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்கள்.  ஏன்? இந்தியர்களை அணு அணுவாகப் பிரித்து அவர்களைச் சின்னாப் பின்னாமாக்கும் முயற்சியுலும் ஈடுபடுவார்கள். சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.

இன்று நாடு முழுவதும் எண்ணிலடங்கா அரசுசாரா அமைப்புக்கள்! ஏன்? எதனால் இத்தனை அமைப்புக்கள்?

இந்தஅமைப்புக்களின் தலைவர்கள் உண்மையான வர்களாக இருந்தால் இந்த சமுகத்தின் வளர்ச்சி இந்நேரம் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் வளர்ந்திருக்க வேண்டும்.

அப்படி எதுவும் நேரவில்லையே!

வளர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் மட்டும்தான்! அவர்களுக்கு ஏதோ சில பல விருதுகள். அல்லது செனட்டர் போன்ற பதவிகள். அல்லது ஏதோ  ஒரு  வகையான அரசியல் பதவிகள். அரசியல் உதவிகள். அரசாங்க மானியங்கள். இன்னும் பல.

இதையே தான் இப்போது பத்திரிக்கை வெளியிட்டுத் துறைக்கு வருபவர்களும் எதிர்பார்த்தே வருகின்றனர். பத்திரிக்கை வெளியீடு என்பது பணக்காரர் உலகம். பணக்கார்கள் நோக்கம் என்ன என்பதை நாம் அறிவோம்.

சமுக முன்னேற்றம் என்பது  அவர்கள் நோக்கமல்ல. தங்களது முன்னேற்றம், தங்களது செல்வாக்கு, பிரதமருடன் கைக்குலுக்குவது, அமைச்சர்களுடன் கைக்குலுக்குவது, அதனால் வரும் அறிமுகம், தொழில் வாய்ப்புக்கள். இப்படித் தான் அவர்கள் சிந்திக்கிறார்கள்.

அவர்கள் முன்னேற்றத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல. ஆனால் புனிதமான பத்திரிக்கைத் துறையை ஏன் அவர்கள் தெர்ந்தெடுக்க வேண்டும். சமுதாயத்தை ஏன் கூறு போட வேண்டும் என்பதே நமது  கேள்வி.   வேறு துறை எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா.

சமுதாயத்தைப் பிரித்தாளுவது என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? உங்களின் சுயநலத்திற்காக இந்த சமூகத்தைக் கூறுபோட்டு சின்னாப் பின்னமாக்குகிறீர்களே! நீங்கள் பத்திரிக்கைஉரிமையாளர் என்பதால் நாங்கள் உங்களைப் பாராட்டவா முடியும்? நீங்கள் சராசரிகளுக்கும் கீழே  தானே எங்கள் கண்களுக்குத் தோன்றுகிறீர்கள்!

ஏதோ இந்த சமூகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். பத்திரிக்கைத் துறையினருக்கு அந்தக் கடப்பாடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கவேண்டும். முற்றிலுமாக ஒருவருக்குமே இல்லை என்று நாங்கள் ஒதுக்கித்தள்ள வில்லை. ஓரிருவரே சொல்லும்படியாக இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் தலை வணங்குகிறோம்.

பொய்ச் செய்திகளைக் கொடுத்தே இந்தச் சமுதாயத்தைப் படுகுழியில் தள்ளியவர்கள் நம்மிடையே தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த சமுதாயம் தலை நிமிரவே கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்யும் வெட்கம் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சமுதாய  நோக்கம் இல்லாதவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளுவதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால் சமுதாயத்தைக் கூறுபோடுவதை ஒரு தொழிலாகவே கொண்டுவிட்ட ஒரு கூட்டம், இன்னும் தொடர்ந்து கூறுபோடுவதை நிறுத்தாத ஒரு கூட்டம், எப்போது தான் திருந்தப் போகிறார்கள்? இவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லயா?

இந்த இனம் உங்களை வாழத்தானே வைத்திருக்கிறது. உங்களை எந்த வகையிலும் வீழ்த்த வில்லையே!

உணமையைச் சொல்லுகிறோம் என்னும் பெயரில் இப்படிப்  பொய் மூட்டகளை அவிழ்த்து விட்டே சமுதாயத்தைத் தடுமாற வைக்கிறீர்களே! ஏன்? பொய்களை உண்மையாக்கி அதுவே உண்மை என்று அடித்துக் கூறுவதும், சத்தியம் செய்வதும் உங்களின் ‘திறமையை’ என்னவென்று சொல்லுவது!

பத்திரிக்கையாளர்களே! பத்திரிக்கைத் துறையினரே! நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான்.

தமிழ் மக்களை வாழ விடுங்கள். தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள். சமுதாயத்தைப் பிரித்துப்பிரித்து சமுதாயத்தைப் பந்தாடாதீர்கள். உண்மையைச் சொல்லி தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள். சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாக இராதீர்கள். பொருளாதார வழி காட்டியாயிருங்கள்.

பொய்யை உண்மை என்று சொல்லி நிருபிக்க முனையாதீர்கள். தமிழை வைத்தே தமிழனை அழிக்க நினைக்காதீர்கள். வாழ்வதும் தமிழனாக இருக்க வேண்டும். வெல்வதும் தமிழனாக இருக்கவேண்டும்.

இப்பொழுதும் எப்பொழுதும் தெய்வம் நின்று கொல்லும் என்பதையும் மறவாதீர்கள்! வாழ்க! வெல்க! தமிழினம்!

-கோடிசுவரன்