இராகவன் கருப்பையா – ஒரு காலத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே பல்வேறு வண்ணங்களில் காட்சியளித்த பொதுத் தொலைபேசிச் சாவடிகள் தற்பொழுது கிட்டதட்ட மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டன.
ஏறத்தாழ கடந்த 1970கள் வரையில் நிறைய இல்லங்களில் தொலைபேசி என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அலுவலகங்களிலும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் வசதி படைத்தோரின் இல்லங்களிலும் மட்டுமே பெரும்பாலும் தொலைபேசிகள் இருந்தன. சnமானிய மக்களுக்கு அது ஒரு எட்டாக்கனி மட்டுமன்றி ஆடம்பரப் பொருளாகவும் கருதப்பட்டது.
நகர் புறங்களுக்கு சற்று வெளியே வசிப்பவர்கள் இந்த தொலைபேசி வசதிக்கு விண்ணப்பம் செய்தால், தொடர்பு(line) இல்லை. அரசியல்வாதியோ முக்கிய பிரமுகரோ இப்பகுதியில் குடியிருக்க வந்தால் அவருக்காக ஒரேயொரு ‘லைனை’ ஒதுக்கி வைத்திருக்கிறோம் என தொலைத் தொடர்பு இலாகா(Telecoms) தரப்பிலிருந்து பதில் வரும்.
ஆனால் வசதி படைத்த ஒரு சிலரின் இல்லங்களில் திடீரென தொலைபேசி வந்துவிடும். இது எப்படி சாத்தியம் என்று தொலைத் தொடர்பு இலாகா அதிகாரிகளுக்குத்தான் வெளிச்சம்.
நிலைமை இவ்வாறு இருக்க, இந்த வசதிகளைப் பெறமுடியாமல் இருக்கும் சாமானிய மக்களுக்கு ‘பப்லிக் டெலிஃபோன்'(Public Telephone) எனப்படும் சாலையோர பொது தொலைபேசிகள்தான் தீர்வாக இருந்தன.
இத்தகைய சாலையோர தொலைபேசிகளை பல தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே பொருத்தி பராமரிப்பு செய்தன. ஆபத்து அவசர வேளைகளில் தேவையான தொடர்புகளுக்கு இந்தத் தொலைபேசிகள் பெரிதும் உதவின என்றால் அது மிகையில்லை.
சில வேளைகளில் அங்கு கூட வரிசை பிடித்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்தத் தொலைபேசி சாவடிக்குள் புகுந்து இளசு ஒன்று தனது காதல் ஜோடியுடன் பேசிக்கொண்டிருந்தால் வரிசையில் நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருக்கும் மற்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
நிறைய இடங்களில் நாசகாரர்களின் காவாலித்தனத்தால் இந்தத் தொலைபேசிகள் பழுதடைந்துக் கிடக்கும். வேண்டுமென்றே அவற்றை சேதப்படுத்துவது ஒருபுறமிருக்க, அதற்குள் உள்ள சில்லறை காசுகளை கொள்ளையிடும் முயற்சியிலும் அச்சேதங்கள் ஏற்படுவதுண்டு.
பழுதடைநதுள்ள தொலைபேசி பெட்டிக்குள் 10, 20 அல்லது 50 காசு சில்லறைகளை நூழைக்கும் போது அவை நேராக உள்ளே விழுந்து மறைந்துவிடும். அச்சமயத்தில் நம் மனம் படும் வேதனைக்கு அளவிருக்காது. மற்ற பல வேளைகளில் அதன் தொடர்பு கம்பிகள் அறுந்து கிடக்கும். இவையெல்லாமே பொறுப்பற்றக் கும்பல்களின் செயல்களாகும்.
பிற்காலத்தில் ‘டச் என் கோ'(Touch N Go) போன்ற பற்று அட்டைகளை பயன்படுத்தும் நவீன தொலைபேசி பெட்டிகள் அறிமுகம் கண்டவுடன், அங்கு சில்லறை காசுகளுக்கான பயன்பாடு இல்லாத பட்சத்தில் ரவுடிகளின் காலித்தனங்களுக்கு அவ்விடங்களில் வேலையில்லாமல் போய்விட்டது.
கடந்த 1980களிலும் 90களிலும் அறிமுகம் கண்ட கைப்பேசிகள் இந்த சாலையோர பொதுத் தொலைபேசிகளை சன்னம் சன்னமாகக் குறைத்துவிட்டன. “அப்படி ஒன்று இருந்ததா?” என தற்போதைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்கும் அளவுக்கு அந்தச் சாவடிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சில இடங்களில் இந்த சாலையோர பொதுத் தொலைபேசிகள் இருந்ததற்கு அடையாளமாக, காலியான சாவடிகள் மட்டும் இன்னமும் பரிதாபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும் ஆங்காங்கே பல பள்ளிக்கூடங்களில், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு வெளியே இந்த பொதுத் தொலைபேசிகள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.
நவீன தொழில்நுட்பம் நமக்கு தற்பொழுது எண்ணற்ற தொலைத் தொடர்பு சாதனங்களை வழங்கியுள்ள போதிலும், ஒரு காலத்தில் இந்த சாலையோர பொதுத் தொலைபேசிகளினால் நாம் அடைந்த பயன்களை சுலபத்தில் மறந்துவிட முடியாது.
கால ஓட்டத்தில் அவை மறக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் அளப்பரிய சேவைகள் வரலாற்றில் இடம்பெறுவது திண்ணம்.
























