எனது பாதையில்..சந்தித்தவர்கள் !

கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். நாம்   சிலரை   சந்திக்கிறோம்,  சந்தித்த    வேகத்திலேயே  மறந்துவிடுகிறோம்.  ஒரு  சிலரிடையே  ஏற்படும்   சந்திப்பு   ஒரு   நல்ல,  நெருக்கமான   உறவை   ஏற்படுத்தவும்   வலுப்படுத்தவும்   வல்லது.  எதிர்பாராத   விதமான   ஒரு   சூழ்நிலையில்   ஆசிரியர்   ஒருவரைச்   சந்திக்கும்   வாய்ப்பும்   கிடைத்தது.  அவரின்   நட்பும்   சேர்ந்தது  மகிழ்வாக   இருந்தது.

மாணவர்கள்  முன்னேற்றத்தில்அவரும்   அவர்தம்  சக  ஆசிரியர்களும்   கொண்டிருக்கும்   அக்கறையைப்  பற்றி  சொன்னார்கள்.  புரிந்துகொண்டேன்!  நல்ல   சேவை:  போற்றத்  தக்க   சேவை.  பராட்டினேன்.

donkeyஹிந்தி  மொழியிலே  ஒரு  சின்ன   கதை.  இரு  யோகிகள்   சந்தித்துக்   கொண்டால்   ஓரிரு   கேள்விகளை   கேட்டுவிட்டு   நகர்ந்து   விடுவார்களாம்.   அந்த   கேள்விகள்   அவர்களுள்   இருக்கும்   சந்தேகத்தை   தீர்த்துக்  கொள்ள  உதவுமாம்.   அதே  சமயத்தில்   இரு   கழுதைகள்  சந்தித்துக்   கொண்டால்   திரும்பிக்   கொண்டு   ஆளுக்கொரு   உதையை   கொடுக்குமாம்.  எனக்கு   கொஞ்சம் எழுத்தறிவு   இருக்கிறது.  நான்   சந்தித்த   ஆசிரியரிடம்  நல்ல   வளமான  கல்வியறிவு   இருக்கிறது.  யோகிகளாக   இல்லாவிட்டாலும்   கழுதைகள்   போல்  நாங்கள்   நடந்து  கொள்ளவில்லை.   நல்ல   கருத்து   பரிமாற்றம்.   அதுவே   எங்களிடையே   மிளிர்ந்து    நட்புக்கு   அடித்தளமாக   அமைந்துவிட்டது.

நான்   பொது  நிகழ்ச்சிகளில்   கலந்து  கொண்டு  பேசுவதை  அறிந்திருந்த   அந்த   ஆசிரியர் – நண்பன்  அந்த   சந்திப்பின்  போது தம்  மாணவர்கள் தேர்வு  எழுதவிருப்பதால்  அவர்களுக்கு   உற்சாகம்  ஊட்டும்  வகையில்   பள்ளிக்கூடத்துக்கு   வந்து   பேசும்படி  அழைத்தார்.   தயங்காமல்   ஏற்றுக்கொண்டேன்.

நான்   அப்போது   சொன்னதை  மறுபடியும்  சொல்லுவேன். வெகு  விரைவில்   நீங்கள்   எல்லாம்  பரீட்சை   எழுதப்   போகிறீர்கள். பரீட்சை   என்றாலே   வயிறு   கலங்கும்.  இது   இயற்கை.  நன்கு   படித்தவர்களுக்கும்    சோம்பலுக்கு   அடிமையாகிவிட்டவர்களுக்கும்   இவ்வாறு  ஏற்படுவது   இயல்பு.   காரணம்   எப்படிப்பட்ட  கேள்விகள்   வெளிவரும்   என்ற  அச்சம்.

monkeyநான்  ஒரு   சித்திரத்தைப்   பார்த்தேன்.  இரு   குரங்குகள்   ஒருவரை   ஒருவர்   பார்ப்பது   போல்   சித்தரிக்கப்படிருந்தது.  அதில்   ஒரு   குரங்கு   மற்றதைப்   பார்த்து:  “வினாக்களுக்கான   விடைகளை   எல்லாம்   தெரிந்துவிட்டபோது,  கேள்வியை   மாற்றிவிட்டார்களே!”  என்று  சொல்லிற்று.  வினாத்   தாளில்   இப்படித்தான்   கேள்வி   வரும்  என்று   குறுகிய   நோக்கத்தோடு    போனால்   அதே   கேள்வி    வேறுவிதமாக   அமைக்கப்படிருந்தால்   அச்சமும்,   சந்தேகமும்,  குழப்பமும்,  கவலையும்   ஏற்படுவதை    தவிர்க்க   முடியாதுதான்.  ஒரே   நோக்கோடு  ஒரு   கேள்வியை    அணுகுவதை    தவிர்த்து    பற்பலக்   கோணங்களிலிருந்து   அணுகுவது  சாலச்   சிறந்தது.   அணுகுமுறையை    விரிவுப்படுத்திக்   கொள்வதே   நல்ல   முறையாகவும்    முன்னேற்றத்துக்கு   உதவும்   கருவியாகும்

என்னுடைய    வாழ்க்கையில்   நடந்த   ஒரு   சம்பவத்தை    நினைத்துப்   பார்க்கிறேன்.  சின்னப்   பையனாக   இருந்தபோது  காலையில்   பள்ளிக்கூடத்திற்குப்   புறப்பட்டேன்.  அன்று  பரீட்சை.  எங்கள்  வீட்டிலிருந்து   ஏறத்தாழ   இரண்டுக்கும்   குறையாத  கிலோமீட்டர்    நடக்கவேண்டும்.   நான்   வீட்டை   விட்டு   கிளம்பும்போது  என்   தந்தையைப்   பார்த்தேன்.   அவர்   ஒன்றும்   சொல்லவில்லை.   நான்   அதைப்   பற்றி   பொருட்படுத்தியதாக   நினைவுமில்லை.   பள்ளிக்கூடத்தை    நெருங்கியபோது   இன்னும்   ஐம்பது   மீட்டர்  தூரம்   தான்   இருக்கும்,   பள்ளிக்கூட   தோட்டக்காரர்,  முரட்டு   மீசைக்காரர்.   அம்பலம்  என்பது    அவர்   பெயர்,   புல்   வெட்டிக்கொண்டிருந்தார்.   நானோ  அன்று   காலை   நடக்கவிருக்கும்   கணித  வினாத்தாள்   எப்படியிருக்கும்   என்று   யூகித்துக்   கொண்டே   நடந்தேன்.   அம்பலம்   என்   தந்தையின்    கடைக்கு  அடிக்கடி   வருவார்.   முரட்டுமீசை   இருந்தபோதிலும்   மிகவும்   சாந்தமாணவர்.   என்னைப்   பார்த்ததும்:  “தம்பி    இன்னைக்கு  பரீட்சை.  நல்ல   பசியாறினீயா?”

நான்   பசியாறிவிட்டதாகச்  சொன்னேன்.

“நல்லது”  தைரியமா   போ.   தைரியமா   எழுது!”   என்றார்.

என்   தந்தை   அப்படி   கேட்கவுமில்லை.   பெரியவர்   அம்பலம்  சொன்ன,  ஊட்டிய   தைரியத்தையும்    சொல்லவுமில்லை.   அந்த   சம்பவம்   நடந்து   அறுபத்தைந்து   ஆண்டுகளுக்கு   மேலாகிவிட்டன.   அது   இன்னும்   என்   மனதில்   பசுமையாகவே    இருக்கிறது.

இதை   எதற்கு   சொல்லுகிறேன்   என்றால்,   பரீட்சைக்குப்    போகும்போது   தெளிவான   மனதுடன்   போக  வேண்டும்.   தைரியத்தோடு   போக  வேண்டு.  தெளிந்த   மனதுடன்   போனால்   வினாத்தாளை     எந்த   குழப்பமுமின்றி    ஆராய   முடியும்.   பெற்றோர்கள்   இப்படிப்பட்ட   நல்ல  சூழ்நிலையை   உருவாக்கிக்   கொடுத்தால்   நல்லதாக    கருதுகிறேன்.

நீங்கள்   எப்படி   உங்கள்   பாடங்களை   தயார்   செய்துக் கொள்ள   வேண்டும்,   வினாக்களை  எப்படி   அணுகவேண்டும்    என்பன   போன்ற   அறிவுரைகளை   உங்கள்   ஆசிரியர்கள்   சொல்லித்   தந்திருப்பார்கள்.  நான்  அதைப்  பற்றி   சொல்ல   துணியமாட்டேன்.   ஆனால்,  ஒன்றை  மட்டும்   சொல்லுவேன்   படிப்பதில்  சிக்கனம்   இல்லை.  படிப்பதை   குறைத்துக்   கொண்டால்  அறிவு   வளர்ச்சியும்   குறைந்துவிடும்.   படிப்பு   சிக்கனம்   என்ற   எண்ணத்தை   நீங்கள்  ஒருபோதும்   கையாளக்   கூடாது.   திறந்த   மனப்பான்மை  தேவை.  எதையும்   எதிர்பார்க்கும்   திறமையை   நீங்கள்  வளர்த்துக்   கொள்ளவேண்டும்.  அந்த   பழக்கத்தை  இப்போதே  ஆரம்பித்தால்தான்   நீங்கள்  மேல்   படிப்புக்குச்   செல்லும்போது   உதவும்.

மனிதன்   பிறக்கும்   போது   எந்த   விதமான   திறனையும்   பெற்றிருக்கவில்லை.   திருமணம்   செய்து  கொண்ட  ஒருவர்   தனக்குப்   பிறக்கும்  மகனோ   அல்லது   மகளோ    எதிர்காலத்தில்   ஒரு   சிறந்த   வழக்கறிஞராகப்   புகழ்   பெற்று   திகழ   வேண்டும்  என்று  நினைத்துக்   கொண்டு  ஒரு   பிரபல   வழக்கறிஞரின்   படத்தை  பூசை   அறையில்   வைத்து  அன்றாடம்    வழிபடுவதால்   பிறக்கும்  குழந்தை  வழக்கறிஞராக    வந்துவிட   முடியாது.

ஆனால்,  பிறக்கிற   குழந்தைக்கு   பெற்றோர்கள்   நல்ல   கல்வி   அறிவை   கொடுத்து   வளர்ப்பார்களேயானால்   அந்த   குழந்தை    ஒரு   வழக்கறிஞராக    வர   வழியுண்டு.

என்னுடைய    காலத்தில்   சட்டம்  படிக்க   வேண்டுமென்றால் லண்டனுக்குப்  போக   வேண்டும்.   புரியாத  நாடு,  புரியாத   மொழி:கலாச்சார   ரீதியிலே   வேறுபட்ட   மக்கள்;   மாறுபட்ட   வான்நிலை,  கொடுமையான   சூழ்நிலை.   இவற்றை   எல்லாம்   தாங்கிக்   கொண்டு,  புரிந்துகொண்டு   படித்துவிட்டு   திரும்பினோம்.  உங்களுக்கு   அப்படிப்பட்ட   சங்கடங்கள்   ஏற்பட   வழியில்லை.  அப்படிப்பட்ட   இடர்பாடுகளை   நீங்கள்   எதிர்பார்க்க   வேண்டியதில்லை;  காரணம்,  இன்று  சட்டப்   படிப்பை   இங்கேயே  முடித்துக்   கொள்ளலாம்..

நான்  சட்டம்   படிக்க  போனபோது,  அந்த   ஆண்டு  டிசம்பர்   மாத   குளிர்   கடுமையாக  இருந்தது. அந்த   காலை   குளிரிலே   பேராசிரியரின்   உரையை   கேட்டுவிட்டு   வெளியே   வந்தேன்.  ஒருவர்   என்னோடு   பேச   ஆரம்பித்தார்.  தமிழில்   பேசினார்.  மகிழ்ச்சி   அடைந்தேன்.  அவர்   ஒரு   தமிழ்ப் பள்ளிக்கூட   ஆசிரியர்.   வேலைக்கு   முழுக்கு   போட்டுவிட்டு  சட்டப்   படிப்புக்காக   லண்டனுக்கு   வந்திருந்தார்.   அறிமுகம்   செய்து  கொண்ட   மறு   விநாடியே   “ நான்  பாஸ்   பண்ணுவேனா?”   என்று    கேட்டார்.

நான்   திகைத்துப்   போனேன்.  ஆறாயிரம்   மைல்கள்   கடந்து   வந்திருக்கிறார்.   நிரந்தரமான   வேலையை   உதறிவிட்டு   வந்தவர்    இப்படி   கேட்கிறாரே   என்று   ஆச்சரியப்பட்டேன்.

சிறிது   நேரம்   அவரை   உற்று   நோக்கிவிட்டு   சொன்னேன்.

“ஐயா…..நீர்    தமிழர்  தானே ?”

“ஆமாம்!”    என்றார்.

“உமக்கு   ஆங்கிலம்   தாய்  மொழியல்லவே!”   என்றேன்.

“ஆமாம்!”   என்றார்.

“உமக்கு   எந்த   வகையிலும்   சொந்தமில்லாத   ஆங்கிலத்தை   கற்றுவிட்டீர்.  அதுவே   பெரும்   வெற்றி.   சட்டம்   வாழ்க்கையின்   அனுபவத்தைப்   பற்றியது.  கவலைப்படாதீர்.  எதற்காக   வந்தீரோ,  அதை   நினைத்து   செயல்படும்.  எல்லாம்   நல்லதாகவே    முடியும்!  நீர்   கண்டிப்பாக   பாஸாவீர்”   என்றேன்.

அந்த  சந்திப்பிற்குப்  பிறகு   அவர்   என்னோடு  நெருங்கிப்  பழகினார்.  தேர்வு   பெற்றார்.   வழக்கறிஞராகவும்    வந்து   சேர்ந்தார்.

படிக்கும்போது    மனதில்   சலசலப்புக்கு    இடந்தரக்கூடாது.  நீங்கள்   இன்று   ஒரு   தொகையை   செலுத்தி   உங்களுடைய    அறிவை   பெருக்கிக்   கொள்ள    முனைகிறீர்கள்.   அதற்கு   துணையாக   உங்களின்   பெற்றோர்களும்   தியாகம்   செய்கிறார்கள்.  உங்களுக்குப்   பணம்   போதாதே  என்ற   கவலைக்கு   இடமில்லை.  அடுத்த    சாப்பாடு  எங்கிருந்து    வரும்   என்ற   மோசமான    நிலையில்  நீங்கள்  இல்லை  என்பதை   நினைத்து  மகிழ்கிறேன்.

என்னுடைய   கல்வி  பயணம்,   அதிலும்   சட்டப்  படிப்புப்   பயணம்   கரடுமுரடான   பாதையில்  சென்றது  என்றால்   உங்களுக்கு    வியப்பாக   இருக்கும்.  அடுத்த   வேளை   சாப்பாடு   எங்கிருந்து   வரும்   என்று   நினைத்துக்    கொண்டு   வகுப்புக்கு   போனதுண்டு.   இரவு  நேரத்தில்   எங்காவது   வேலை   கிடைக்குமா  என்று  ஏங்கியதுண்டு.   நீங்கள்  எல்லாம்  அப்படிப்பட்ட    சூழ்நிலைக்கு   பலியாகாமல்    இருக்கவேண்டும்   என்பதையே   நோக்கமாகக்    கொண்டிருக்கும்   உங்களுடைய   பெற்றோர்களின்   தியாகத்தை  ஒருபோதும்   மறந்துவிடக்கூடாது.  நீங்கள்   அற்புதமாக  படித்து  தேர்ச்சி   பெற்றால்   அவர்களுக்கு  அதுவே   பெரும்   மகிழ்ச்சி.  அந்த   மகிழ்வான   சூழ்நிலையை   உருவாக்க   நீங்கள்   உறுதி   கொள்ளவேண்டும்.   துணிவோடு   செயல்படவேண்டுமென்பதே   என்   வேண்டுகோள்.

நீங்கள்   எதிர்காலத்தைப்  பற்றி   நினைக்கிறீர்கள்.  உங்களுடைய    பெற்றோர்   கடந்த   காலத்தைப்   பற்றி   நினைவு   கூர்ந்து   அவர்கள்   பட்ட   துன்பம்  உங்களுக்கு   நேரக்கூடாது   என்று   நினைக்கிறார்கள்.   உங்களுடைய   எதிர்காலத்தைப்  பற்றி  நீங்கள்   கனவு   காண்கிறீர்கள்.   உங்களுடைய    பெற்றோர்கள்   உங்களுடைய  எதிர்காலத்தைப்   பற்றி   கனவு   காண்கிறார்கள்.

உங்களுடைய   கவலை  உங்களைப்   பற்றி,   உங்களுடைய   பெற்றோர்களின்  கவலையோ   அவர்களைப்   பற்றியதல்ல,   மாறாக   உங்களைப்பற்றியதாகும்.   பெற்றோர்களின்    எண்ணமும்,  எதிர்பார்ப்பும்  என்ன?  அவர்களின்   கவலைதான்   என்ன?   நம்   பிள்ளைகள்   நல்ல   நிலையை   அடையமாட்டார்களா!  என்பதாகும்.  அதுவே   அவர்களின்  ஏக்கம்.   அதுவே   அவர்களின்   கவலை!  அதுவே  அவர்களின்   மனதை   உறுத்திக்கொண்டிருக்கும்   வேதனை.

நீங்கள்  பிறந்த   போது   உங்களுடைய   பெற்றோர்கள்   அகம்   மகிழ்ந்து   ஆனந்தக்   கண்ணீர்   விட்டனர்.  நீங்கள்    பள்ளிக்   கூடத்திற்குப்   போனபோது   அதை   கண்டு   மகிழ்ந்தார்கள்.  உங்களை   வரவேற்கும்   ஆசிரியர்களுக்கு   ஒரு   பூரிப்பு.   இன்னுமொரு   இளம்   பரம்பரை   வந்துவிட்டது… இவர்களை   எல்லாம்   நல்ல  வழிக்கு   கொண்டு  செல்ல  வேண்டும்  என்பது   அவர்களின்   தணியாத    ஏக்கம்.

உங்களை   நம்பியவர்கள்   ஏராளம்.  உங்கள்    திறமையில்   நம்பிக்கை   கொண்டவர்களும்   ஏராளம்.  நீங்கள்   சோடைகள்   அல்ல   என்பது   எல்லாருக்கும்   தெரியும்.  அந்த   நம்பிக்கையை  காப்பாற்ற   வேண்டியது   உங்களின்   தலையாய   பொறுப்பாகும்.