சின் பெங்கின் அஸ்தி பேசினால்!

siladassகி.சீலதாஸ். செம்பருத்தி.காம். 

இரண்டாம்  உலகப்போர்  ஆரம்பமாவதற்கு  முன்  மலாயா  சிங்கப்பூர்  பிரதேசங்களில்  கட்டுக்கோப்பான, வலுவான  அரசியல் இயக்கம்  இயங்கவில்லை. 1938ஆம்  ஆண்டு  இபுராஹீம்  யாக்கூப்பின்  பெரும் முயற்சியில்  கோலாலம்பூரில்  கெசத்துவான்  மிலாயு  மூடா  (மலாய்  இளைஞர்  சங்கம்)  அமைக்கப்பட்டது.  இந்த  இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள்  எல்லா  மலாய்க்காரர்களையும்  ஒற்றுமைப்படுத்தி   அவர்களின்  உரிமைக்காகப்  போராடுவதாகும்.  குறிப்பாக  பஞ்சி  மிலாயு  ராயா,  அதாவது  பரந்த இந்தோனேஷியா  அமைத்து  அதிலே பிரிட்டிஷ்  மலாயாவும் இந்தோனேஷியாவும்   இணைத்துவிடவேண்டும்  என்பதும்  அதன்  இலக்காக  இருந்தது. காலப்போக்கில்  இவ்வியக்கம்  பிரிட்டிஷாருக்கு  எதிராகச் செயல்படத்   தொடங்கியது.  ஜப்பானியர்களின்  உதவியோடு  இவ்வியக்கம்   “மலாயா செய்தி”  என்ற மலாய்  செய்தித்தாளை  வாங்கியது  மட்டுமல்ல  மலாயாவுக்கானப்  போரில்  ஜப்பானியர்களுக்கு  ஐந்தாம்  படையாக   உதவியது,  காரணம்   ஜப்பானியர்களின்  வெற்றி  மலாயாவின்  சுதந்திரத்துக்கு  உதவும்   என்ற  நம்பிக்கையே.

மலாய்  இளைஞர்   சங்கத்தை  ஆரம்பிப்பதற்கு   முன்னமே  30.4.1930  இல்   மலாயா  கம்யூனிஸ்ட்   கட்சி  அமைக்கப்பட்டு  இரகசியமாக  இயங்கிக்   கொண்டிருந்தது.  பிரிட்ட்டிஷாரின்  அடக்குமுறை  கடுமையாக   இருந்தபோதிலும்  அதன்  உறுப்பினர்   எண்ணிக்கை பெருகிக்  கொண்டிருந்தது.  அக்கட்சியின்   செல்வாக்கை நொறுக்கிவிடும்   நோக்கோடு  அதன்  தலைவர்கள்   கைது  செய்யப்பட்டனர்.  இப்படிப்பட்ட   பிரிட்டிஷ்   காலனித்துவ  அரசின்   நடவடிக்கை  கம்யூனிஸ்ட்   கட்சியின்   செல்வாக்கைக்  கட்டுப்படுத்த    முடியவில்லை,  மேலும் பல  தொழிற்சங்க  இயக்கங்களில்   அதன்  செல்வாக்கை  குறைத்து  மதிப்பிட முடியவில்லை.

chin peng 21937ஆம்   ஆண்டு  சீனாவை  ஜப்பான்   ஆக்கிரமித்தபோது  மலாயாவில்  இயங்கிக்  கொண்டிருந்த   சீன  குவோமிந்தாங் (Guomindang)  இயக்கத்துக்கும்  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சிக்கும்  ஒரு  சமரச  உடன்பாடு  ஏற்பட்டதின்   காரணத்தால்  கம்யூனிஸ்ட்  இயக்கத்தின்  செல்வாக்கு  மேலும்   வலுவடைந்து –இந்தக்  காலகட்டத்தில்தான்  பிரிட்டிஷ்  ஒற்றன்   லாய் தெக்  கட்சியின்  தலைமச்  செயலாளராக  பொறுப்பேற்றார்.

அக்காலகட்டத்தில்    கம்யூனிஸ்ட்   இயக்கம்  மலாயா   பிரதேசங்களில்,  சிங்கப்பூர்  உட்பட, வேறூன்றாமல்  பார்த்துக் கொள்வதில்தான்   பிரிட்டனின்  கவனம்.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்  ஜப்பானின்  அரசியல்  நடவடிக்கைகளில்  சந்தேகம்  கொண்டிருந்த  சில  பிரிட்டிஷ்  அதிகாரிகள்  முன்னெச்சிரிக்கை  நடவடிக்கைகளில்  கவனத்தை  செலுத்தினர்.  ஒருவேளை  ஜப்பான்  பேரரசு  இராணுவம்  மலாயா  பிரதேசங்கள்  மீது  ஆக்கிரமிப்பு   நடவடிக்கையை  மேற்கொள்ளுமானால்  பிரிட்டன்  எப்படிப்பட்டத்  தயார்   நிலையில்  இருக்கவேண்டும்  என்பதே   அந்தப்   பிரிட்டிஷ்  அதிகாரிகளின்  கவலை.

ஜப்பானியர்கள்  ஆக்கிரமித்தால்  மலாயா  பிரதேசங்களில்  வாழும்  பொதுமக்களின்  ஆதரவைத்  திரட்டும்  காரியம்  எளிதல்ல.  அவ்வாறு  திரட்டுவதற்கான   இயக்கம்  ஏதும்  கிடையாது.  ஆனால்,  எல்லா  இனங்களை   அரவணைத்துச்  செயல்பட்டுக்  கொண்டிருந்த  மலாயா   கம்யூனிஸ்ட்  கட்சிமேலும்   மற்ற  இயக்கங்களின்   ஒத்துழைப்பு   கிடைக்குமானால்   ஜப்பானியர்கள்  மீது  எதிர்நடவடிக்கை  மேற்கொள்ளலாம்.  இந்த  அற்புதமானத்  திட்டத்தை  1941ஆம்  ஆண்டு  ஆகஸ்டு  மாதம்  கவர்னரும்  ஆயுதப்  படைத்  தளபதி  ஸர் ஷென்டன்  தோமஸிடம்   (Sir  Shenton  Thomas)  சமர்ப்பிக்கப்பட்டது.  உயர்மட்ட  ஆலோசனைக்குப்  பிறகு  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சியுடனான  ஒத்துழைப்பு  நிராகரிக்கப்பட்டது.

8.12.1941இல்  ஜப்பானியர்கள்  கோத்தா  பாருவில் (கிளந்தானின்  தலைநகர்)  தரை  இறங்கியபோது  சிங்கப்பூரிலும்    குண்டுமழை  பெய்யத்   தொடங்கியது.  மலாயாவும்  சிங்கப்பூரும்  ஜப்பானியர்களின்  தாக்குதலுக்கு  இலக்காயின.

ஜப்பானிய  இராணுவம்  துரிதமாகவே  மலாயாவைக்  கைப்பற்றியது  மட்டுமல்ல,  மலாயாவை  பாதுகாப்பு  அரண்  என்ற   வர்ணிக்கப்பட்ட,  போற்றப்பட்ட,  நம்பப்பட்ட  சிங்கப்பூர்  ஜப்பானியர்களின்  தாக்குதலைத்  தாங்க  முடியாமல்,  பிரிட்டிஷ்  இராணுவம்  சிங்கப்பூரின்  புக்கிட்  தீமா  ரோட்டில்  இருந்த  ஃபோர்ட் ( Ford)   கம்பெனி  அலுவலகத்தில்  சரண் அடைந்தது.

ChinPeng_duluபிரிட்டிஷ்  இராணுவத்திடம்  ஆயுதப்  பலம்  இருந்தபோதிலும்  ஆள்  பலம்  இல்லாத  சூழ்நிலை.  எனவே  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சியுடன்  ஏற்பட்ட  உடன்பாடு   ஜப்பானியர்  இராணுவத்துக்கும்,  ஆட்சிக்கும்  எதிரான  நடவடிக்கைகளில்   முழு  மூச்சாய்  ஈடுபட  முடிந்தது.

மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சியால்  சிபாரிசு   செய்யப்பட்டவர்களுக்கு   ஆயுத  பயிற்சியை   வழங்கியது  பிரிட்டிஷ்  இராணுவம்

ஸ்பென்ஸர்       செப்மன்(F.Spencer   Chapman )தமது  “நடு  நிலையான  காடு – The  Jungle  Is  Neutral  “என்ற  நூலில்  தாம்  எவ்வாறு  காட்டில் மறைந்து  இருந்த  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சித்  தலைவர்களுடன்  தொடர்பு  கொண்டு  ஜப்பானியர்களுக்கு   எதிரான  நடவடிக்கையில்   ஈடுபட்டதை தெளிவாக   விளக்கி  உள்ளார்.   இந்த  பிரிட்டிஷ்-மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சி   மற்றப்   பல  இயக்கங்களும்   இணைந்து   கண்ட  இயக்கம்தான்  மலாயா  மக்களின்  ஜப்பானியர்  எதிர்ப்பு இராணுவம்   (Malayan   People ‘s   Anti   Japanese   Army)

இந்த  உடன்பாடு  நிறைவு  பெற  பாடுபட்டவர்களில்  செப்மன்,  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சியின்  பொதுச்  செயலாளர், லாய  தெக் – இவர்  சாய்  ஹொங்  என்றும்  அழைக்கப்பட்டவர்.  இவரும், சின்  பெங்கும்  சேர்ந்து,  மௌண்பட்டன்   பிரபுவின்  பிரதிநிதியான  மேஜர்  ஜோன்  எல். எச்.டேவிஸ்  ( Major  John  L.H.  Davis) பேச்சு  வார்த்தை  நடத்தி   ஜப்பானியர்களுக்கு  எதிரான  ஆயுதம்  தாங்கிய  நடவடிக்கைக்களில்   உடன்பாடு  கண்டது  அதிசயமே.  காரணம்  லாய்  தெக்  பிரிட்டிஷாரால்   தேடப்பட்டவர்களில்  மிக   முக்கியமானவர்.  தேடுகிறவர்களோடு  தேடப்பட்டவர்   பேச்சுவார்த்தை  நடத்தியது  அதிசயம்தானே.  போர்க்காலத்தின்  போது  இதெல்லாம்  சர்வசாதாரணம்.  இதில்  மற்றுமொரு  சுவையான  இரகசியம்   என்னவெனில்  லாய்   தெக்கின்  அடையாளம்  செப்மனக்குத்  தெரிந்திருந்தும்  அதை  வெளிக்காட்டிக்   கொள்ளவில்லை.  நிற்க,  லாய் தெக்  பிரிட்டிஷாரின்  ஒற்றர்  என்பதும்  தெரிந்திருக்க   வழியில்லை.  காலப்போக்கில்  லாய் தெக்  ஜப்பானிய  இராணுவத்துக்கும்  ஒற்றராகிவிட்டார்.

லாய்  தெக்  ஜப்பானியர்களோடு  இரகசியத் தொடர்பு  வைத்திருந்த  செய்தி மெள்ள மெள்ள  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சி  வலுவிழுக்கும்  வகையில்   அமைந்து  இருந்ததாக  சின் பெங்  தனது  நூலில், “என்  கதை –My Story”  விளக்கப்படுத்தி  உள்ளார்.  லாய்  தெக்  திடீரென  தலைமறைவானதும்  அது  பலவிதமானச்  சந்தேகங்களுக்கு  இடமளித்தது.  குறிப்பாக  லாய்  தெக்  இரகசியப்  போலிசாரால்  கடத்தப்பட்டிருக்கலாம்  என்பதும்  ஒரு  சந்தேகமே.  லாய்  தெக்  தலைமறைவானது   தொடர்பான   விசாரணையை  சின் பெங் மேற்கொண்டபோது,  லாய்  தெக்குக்கு  நான்கு  மனைவிகள்  இருந்ததை  அறிந்தார்.   மேலும்   லாய் தெக்  பத்து லட்சத்துக்கும்  மேலான  கட்சியின்  பணத்தை  சுருட்டிக்கொண்டு போய்விட்டதாக  உணர்ந்தார்.

6.3.1947இல்  நடந்த  மலாயா கம்யூனிஸ்ட்  கட்சியின்  கூட்டத்தில்  சின்  பெங்  கட்சியின்  தலைமைத்துவத்தை   ஏற்கவேண்டியதாயிற்று.  அதற்குப்   பிறகு, பெங்காக்கில்  உள்ள சௌ  பிரியா  ஆற்றில்   மிதந்து  கொண்டிருந்த   சடலம்  லாய்   தெக்கின்  என்பது  உறுதிப் படுத்தப்பட்டது.

இரண்டாம்  உலகப்  போரின்போது  மலாயாவை  ஆக்கிரமித்த  ஜப்பானியர்களுக்கு   எதிராக  ஆயுதம்  தாங்கிய  போராட்டத்தில்  சின்  பெங்கின்   பங்கு  அளப்பரிது.  இதை,  அங்கீகரிக்கும்  வகையில்  சின்  பெங்  பிரிட்டிஷாரின்  இரு  விருதுகளைப்   பெற்றார்.  6.1.1946இல்  தென்கிழக்காசிய   ஒன்றிணைந்த  இராணுவத்  தலைவர்,  கடற்படைத்தலைவர்   மௌன்ட்பாட்டனிடமிருந்து ( Mountbattan )  ஒரு   விருதும்  அதற்குப்  பிறகு  பிரிட்டிஷ்  அரசால்  உயரிய விருதான  ஓபிஇ (OBE – Order  of British  Empire)   வழங்கப்பட்டது.   ஆனால்   இது  திரும்பப்  பெற்றுக்  கொள்ளப்பட்டது.  இவையாவும்   வரலாற்று   உண்மைகளே.

இவற்றிற்குப்  பிறகு   நடந்தது  என்ன?  ஆயுதப்   போராட்டம்.  அது  யாரோடு!  நட்பு  பகையாக  மாறியது.  பிரிட்டனின்  பிரதமர்  அன்றைய  வின்ஸ்டன்  சர்ச்சில்  கம்யூனிஸத்தின்  பரம  எதிரி.  அமெரிக்காவோ  கம்யூனிஸத்தை  ஒழிப்பதில்  கவனத்தைச்   செலுத்தியது.  மலாயாவை  பொறுத்தவரையில்   வெள்ளைக்காரர்களின்   முதலீட்டைப்  பாதுகாப்பதில்தான்  கரிசனம்  மிகவாகக்   காணப்பட்டது.  இரண்டாம்  உலகப்போர்   முடிவுக்குக்  கொண்டுவரப்பட்டபோது   ஏற்பட்ட   அட்லாண்டிக்  பட்டயத்தின்படி   ( Atlantic  Charter)  காலனித்துவத்துக்கு   ஒரு  நிரந்தர  முடிவு   காணவேண்டும்   என்பதாகும்.  இந்தப்   பட்டயத்தின்படி   காலனித்துவ   நாடுகளின்  மக்கள்  தங்கள்  சுதந்திர   வேட்கைக்கு   இணங்க  தன்னாட்சி  காண்பதாகும்.

இந்த  ஆயுதம்  தாங்கிய  சித்தாந்தப்   போராட்டத்தில்   சீனாவும்   இரஷ்யாவும்   பங்கு   பெறாமல்   ஒதுங்கி   இருக்கவில்லையே.  சீனாவும்  இரஷ்யாவும்  கம்யூனிஸ்ட்   சித்தாந்தத்தில்  மாறுபட்ட கருத்துக்களைக்  கொண்டு  பிரிந்தபோது   இந்தநாட்டில்   ஆயுதம்  தாங்கிய   போராட்டத்துக்குப்  பொருளாதார   ஆதரவும்,  ஆயுதம்  வழங்குவதிலும்   தயக்கம்   காட்டாத   நாடுகளில்  சீனா   முக்கியத்துவம்   வகித்ததை  மறக்க  முடியுமா?

சீனாவோடு  எந்தத்  தொடர்பும்   இருக்கக்கூடாது  என்ற   நோக்கோடு  செயல்பட்ட    நாடுகளுக்கு   முன்னோடியாக  இருந்தது  அமெரிக்கா,  மலாயா (பிறகு  மலேசியா)  அந்தக்   கம்யூனிஸ்ட்   எதிர்ப்பு   கோட்பாட்டைத்   தானே   பின்பற்றியது.

மலேசியா  சீனாவுடன்  நட்புறவை  ஏற்படுத்திக்   கொண்டது  அதற்குப்  பிறகு  சின்  பெங்  தலைமையில்  செயல்பட்ட   கம்யூனிஸ்ட்  கட்சி   மாறுபட்ட  அரசியல்  கொள்கைகளைக்   கொண்டதையும்  காணமுடிகிறது.  சீனாவுடனான  மலேசிய  உறவு  இன்று  பலமடைந்து  மேலும்  வலுவு  பெற  முயற்சிகள்  நடைபெறுகின்றன.

ஒரு   காலகட்டத்தில்   இந்த   நாட்டின்  ஓர்  அங்கமாக  விளங்கிய   சிங்கப்பூர்   தனிநாடாக   பிரிந்து  சென்றது.  ஒரு  நாட்டில்   பிளவு   ஏற்படுத்தும்   வகையில்   நடந்து   கொண்டதாகக்  குற்றம்  சாட்டப்பட்டு  வெளியேற்றப்பட்ட  நாட்டுடன்  நல்ல  உறவு,  சிங்கப்பூரின் முன்னாள்  பிரதமர்  லீ  குவான்  யூ  இந்நாட்டுக்கு  வந்து  போவதில்  எந்தத்  தடங்கலும்  இல்லையே. சிங்கப்பூர்   பிரிந்து  சென்ற  பிறகுதான்   ஜொகூர்  சுல்தான்  லீ  குவான்  யூவுக்கு  அம்  மாநிலத்தின்  உயரிய  டத்தோ  பட்டம்  வழங்கி   கௌரவித்ததை  மறக்கமுடியுமா?

இரண்டாம்   உலகப்  போரின்  போது  இந்நாட்டை  ஆக்கிரமித்து  பல்லாயிரம்   மக்களின்  மரணத்துக்குக்  காரணியாக   இருந்த  ஜப்பான்  இன்று   நண்பர்கள்.  அவர்களுக்குக்   கொடுக்கப்படும்   மரியாதை  தான்  என்னே?  கொடுமைக்காரன்  பணம்  கொடுத்து  கொடை  வள்ளளாக   மாறிவிடுகிறான்.

இந்த   நாட்டுக்கு  எதிரான  நடவடிக்கையை   ஊக்குவித்த  சீனா  மீது  எந்த  ஆதங்கம்   இல்லையே.  அம்பை  எய்தவன்   இருக்க   அம்பு  மீது   கோபப்படுவது   எந்த  வகையில்  நியாயம்.  எனவே  இப்போது  இறந்துவிட்ட   சின்  பெங்  என்ற ஓங்  பூன்  ஹுவா   இந்நாட்டுக்கு   வருவதைத்   தடுத்தது  மட்டுமல்ல,  அன்னாரின்   அஸ்தியும்   கொண்டுவரக்கூடாது  என்பது   எந்த  வகையில்  நியாயம்   ஆகும்?

ஆனால்,  இந்த  நாட்டின்   சுதந்திரத்துக்காகப்   போராடியவர்  வாழ்நாள்  முழுவதும்   சுதந்திரத்தையே   நினைத்து   வாழ்ந்தவருக்கு  சொந்த  நாட்டிலேயே   இடமில்லை   என்று   சொல்வதும்,  இறந்தப்  பிறகு  அவரின்   ஆஸ்திகூட   அனுமதிக்கப் படமாட்டாது   என்ற  முடிவு   மனித  நேயத்துக்கு   மரியாதைத்   தராதவர்களின்   எண்ணம்,  மனோநிலை  எனின்  பொருந்தும்.

இங்கே  மற்றுமொரு  உண்மையை  அரசு புரிந்து  கொள்ளவேண்டும்.  எவ்வளவுதான்   சின்  பெங்கை   மட்டம்  தட்டி  மறைக்க   முயன்றாலும்   அது   நிறைவேறாது.  சின்  பெங்கின்  விடுதலைக்  கனவு  கானல்  என்றால்,  அரசின்   இருட்டடிப்பு  நடவடிக்கையும்   அதே  முடிவை  அடையும்.

சின்  பெங்  பிரிட்டிஷ்  அரசுக்கு   எதிராகச்   செயல்பட்டார். அவர்  தனி   மனிதர்   அல்லவே!  அவரோடு  பலர்   இருந்தார்கள்.  சுதந்திரத்துக்குப் பிறகு  அவர்  மேற்கொண்ட  அரசியல்   போராட்டம்  ஐரோப்பியர்களின்  பொருளாதாரத்துக்குத்  துணை   போனவர்களுக்கு   எதிரானதுதானே!  சின்  பெங்  மறைந்திருந்து  போராட்டம்  நடத்தினார்  இன்று  பகிரங்கமாகவே  நாட்டின்   பொருளாதாரத்தைச்  சூறையாடுபவர்கள்  மக்களின்  அவல   நிலைக்குக்   காரணிகள்  அல்லவா? இந்தப் பெருச்சாளிகள்  போற்றப்படும்போது  ஒரு   கொள்கைக்காகப்   போராடியவரை   நடத்தும் முறை-  அதுவும்  இறந்தப்  பிறகு   நாகரிகமானச்  செயலாகத்   தெரியவில்லை.

துணை  அமைச்சர்   டத்தோ  வான்  ஜனாப்பு  சொன்னதுபோல்   யாருடைய   அஸ்தியும்  இந்நாட்டுக்கு   கொண்டுவர  சட்டத்தில்   தடை  கிடையாது  எனும்போது    சின்  பெங்கின்   அஸ்தியை   கொண்டுவர விடமாட்டோம்   என்ற  பிடிவாதத்தின்   காரணம்  என்ன?  மலேசியா   மனித   நேயத்தை  துறந்துவிட்டதா?  அல்லது  மனசாட்சியை  பறிகொடுத்து  விட்டதா?   உலகமே   சிரிக்கிறது   நம்மைப்  பார்த்து.  இதுவும்  காவல்   துறையின்   முன்னாள்  தலைவர்   டன்ஸ்ரீ ரகிம் நோரின்  வர்ணணையாகும்.  அஸ்தியைக்   கொண்டுவந்து   நினைவு   மண்டபம்  கட்டிவிடுவார்கள்   என்கிறார்கள். நினைவுகள்,  நினைவு   மண்டபத்தில்   இல்லை,  இதயத்தில்  என்பதை   மறந்துவிட்டார்களே!  ஆலயத்திலா   கடவுள்  இருக்கிறார்?  நல்ல   உள்ளங்களில்  கடவுள்  இருக்கிறார்   என்பதை   அவர்கள்   எப்போது   உணர்வார்கள்.?