பெர்சே 2.0 மக்களாட்சிக்கான மறுமலர்ச்சி!

– அருண், கிள்ளான்.

 

கடந்த 9.7.2011-இல் பெர்சே பேரணி நடந்தேறியது. பல்வகை போராட்டங்களுக்கிடையே இப்பேரணியை நடத்தியாக வேண்டியிருந்தது. மக்களாட்சி அரசின் குறியீடாக இருப்பது அறம் சார்ந்த தேர்தல் முறையாகும். நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படும் தேர்தலால், அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுப்பெறும். மக்களின் நம்பிக்கையை நிறைவாகப் பெற்ற அரசு நாடோறும் மேன்மையுறும். உலகளாவிய அரசியலின் முதன்மைக் கூறாக இத்தன்மை அமைந்துள்ளது.

இத்தகைய நிலையினை வேண்டியே பெர்சே 2.0 பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நாட்டுத் தேர்தல் செயலாக்கத்தில் சில குறைபாடுகளும் குழறுபடிகளும் இருப்பதை யாரும் மறுத்திட இயலாது. தேர்தல் வாக்காளர் பதிவு தொடங்கி தேர்தல் வாக்களிப்பு வரையிலாக ஆங்காங்கே சிற்சில குறைகளும் குழறுபடிகளும் ஏற்படுகின்றன. இத்தகைய குறைகளும் குழறுபடிகளும் மக்களின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்கின்றன. தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை குறைவுற்றுள்ளது. போலியும் பொய்யும் கொண்ட தேர்தல் நடவடிக்கையால் இன்றைய அரசு வெற்றி பெற்றுள்ளது என்னும் எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது. இத்தகைய குறைபாட்டினைக் களைவதற்கான முன்னேற்பாடே இப்பேரணியாகும்.

அரசியல் இலாபத்தையும் கருத்து வேறுபாடுகளையும் முன்னிட்டு பெர்சே 2.0 பேரணியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. மக்களாட்சி நாட்டில் மக்களால் நடத்தப்படும் தேர்தல் நடுநிலைமையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டுமென எண்ணுவதில் என்ன தவறுண்டு? அதற்கான முயற்சியை ஏன் சீரழிக்க வேண்டும்?

தங்களுடைய அரசியல் இலாபத்தை முன்னிட்டு ஆட்சியாளர்கள் பல்வகை அவதூறுகளைக் கூறுகின்றனர். பல்வகை செயற்பாடுகளால் பெர்சே 2.0 பேரணியை இழிவுபடுத்துகின்றனர். ஆட்சியாளர்களின் கூற்றில் உண்மையில்லை என்பதுதான் உண்மையாகும். இக்கூற்றினை மேலும் தெளிவுபடுத்திட, பெர்சே 2.0 பேரணி முன்வைத்துள்ள எட்டு கோரிக்கைகளை ஆய்ந்தறிந்திட வேண்டியுள்ளது. அவற்றின் விரிவாக்கம் :

கோரிக்கை 1 : போலி வாக்காளர்

பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் முதலியவற்றின்போது போலி வாக்காளரின் வாக்களிப்பு பரவலாக நிகழ்கின்றது. இதற்குரிய சான்றுகள் பல உள்ளன. இச்சிக்கல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தினர் பல்வகை சாக்குப் போக்குளைக் கூறுகின்றனர். ஆனால், இச்சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகள் எதனையும் கண்டறியவில்லை.

ஒரே முகவரியில் பல்வேறு நபர்களின் வாக்காளர் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. அஃதோடு, இல்லாத முகவரியைக் கொண்டும் வாக்காளர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய “ஆவி வாக்காளர்களை” நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்காளர் எண்ணிக்கையை உண்மையான நிலையில் கணக்கிட வேண்டும். தகுதி பெற்ற வாக்காளர்களை அவர்களின் உண்மையான முகவரியில் பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயல் இதுதானே. நேர்மையும் செறிவும் கொண்ட பதிவு நடவடிக்கையால்தானே வாக்காளர் எண்ணிக்கையை உறுதிபடுத்திட இயலும். நம்முடைய தேர்தல் ஆணையம் இதனை மேற்கொள்ள ஏன் தடுமாறுகின்றது? தடுமறுகின்றதா, தடம் மாறுகின்றதா என்னும் ஐயம் எழுந்துள்ளது.

பினாங்கு செபராங் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முகவரியில் 152 வாக்காளர்களின் பதிவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.  எண் 1155, கம்போங் பாகான் செராய் என்னும் முகவரியில் 88 வாக்காளர்கள் பதிந்துள்ளனர். அதேவேளையில், எண் 1138, கம்போங் பாகான் செராய் என்னும் முகவரியில் 64 வாக்காளர்களின் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனாக் சுங்கை டெர்ஹாக்கா என்னும் வலைப்பதிவாளர் இதனைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்.

இத்தகைய நிலை எப்படி ஏற்பட்டுள்ளது? இதனைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். 

ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்! 

இது மிகப் பெரிய ஏமாற்று வேலையன்றோ! மக்களாட்சிக்கு முன்னுரிமைக் கொடுத்துள்ள நாட்டில் இதுப்போன்ற இழிவு நிகழ்ந்திடலாமா? மக்களாலேயே மக்களை ஏமாற்றும் வேலையினை பொறுப்புமிக்க தேர்தல் ஆணையமும் அரசும் மேற்கொள்ளலாமா? அரசின் இழிவுக்குத் தேர்தல் ஆணையம் துணையாகச் செயற்படலாமா? இத்தகைய இழிவு நிகழாதிருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உரியதாகும். ஆனால், அவர்களே இத்தகைய இழிவினைச் செய்யும்போது, இதனைப்பற்றி யாரிடம் முறையிடுவது? வேலியே பயிரை மேய்கின்றது.

கோரிக்கை 2 : மறுசீரமைக்கப்பட்ட அஞ்சல் வாக்கு

வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற எல்லாரும் தேர்லில் வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் வழியாக தேர்தலில் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டில் வசிக்கும் பலர் தேர்தல் நாளன்று வாக்களிக்கும் வாய்ப்பின்றி உள்ளனர். பல்வகை காரணங்களை முன்னிட்டு இவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படுகின்றது. உடல் நலம் குன்றியோர், உடல் ஊனமுற்றோர், தேர்தல் நாளன்று கடமையாற்றவுள்ள காவல் துறையினர், இராணுவ வீரர்கள் போன்றவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிப்பதற்கான வாய்ப்பினை இழக்கக்கூடும். ஆகவே, இத்தகையோருக்கும் அஞ்சல் வாக்களிப்பு முறையினை ஏற்படுத்த வேண்டும்.

அதேவேளையில் தேர்தல் கடமையிலிருந்து விடுபட்டுள்ள காவல் துறையினர், இராணுவ வீரர்கள் முதலியோர் பொதுமக்களைப்போல தேர்தல் நாளன்று வாக்களித்திட வேண்டும். இத்தகையோருக்கு அஞ்சல் வாக்கு ஏற்புடையதன்று.

அஞ்சல் வாக்களிப்பு வெளிப்படையான நிலையில் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் அமைந்திட வேண்டும். அஞ்சல் வாக்களிப்பினைக் கட்சியாளர்கள் காண்பதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.

கோரிக்கை 3 : அழியா மை பயன்பாடு

அடையாள அட்டை ஒப்பாய்வின் வழியாக வாக்குச்சீட்டு வழங்கும் முறையில் ஏமாற்றுச் செயல்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. இந்த அணுகுமுறையின் வழியாக ஒருவர் ஒருமுறைக்கு மேல் வாக்களித்திட இயலும். ஒரே வாக்காளரைப் பல இடங்களில் பதிவு செய்வதன் வாயிலாகவும் இத்தகைய ஏமாற்றுச் செயலினை மேற்கொள்ளலாம். 

இதுப்போன்ற ஏமாற்றுச் செயலினைத் தடுப்பதற்கு அழியா மை பயன்பாடு துணை புரியும். 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற 12-ஆவது பொதுத்தேர்தலின்போது அழியா மை பயன்பாட்டினை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. ஆனால், சில தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டத்தைக் கைவிட்டது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயற்படவில்லை என்பதை இதனூடாக அறிந்திடலாம்.

எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அழியா மையினைப் பயன்படுத்திட வேண்டுமென்பது பெர்சே 2.0  கோரிக்கையாகும். வாக்காளர் குறிப்பு  அட்டை பெறுபவரின் விரல் நுனியில் இந்த மை இடப்படும். விரல் நுனியில் இடப்பட்ட மை குறிப்பிட்டக் காலத்திற்கு அழியாமலிருக்கும். ஆகவே, வேறொரு தேர்தல் வாக்களிப்பு மையத்தில் இவர் வாக்களிக்க இயலாது. இதனால், ஒருவர் பல இடங்களில் பல முறை வாக்களிப்பதற்கான வாய்ப்பில்லை. ஆகவே, செறிவும் நேர்மையும் உடைய இந்த முறையைப் பின்பற்றுவதால் தேர்தல்  ஆணையத்தின் மக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மை கூடிடும். தன்னுடைய செயற்பாட்டிற்கு நல்விளைவினை உண்டாக்கும் அணுகுமுறையினை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏன் தயங்குகின்றது. இதனைத் தன் கோரிக்கையாக  முன்மொழியும் பெர்சே 2.0-னை ஏன் ஒடுக்குகின்றது அரசு. 

கோரிக்கை 4 : 21 நாள்களுக்கான தேர்தல் பரப்புரை 

தேர்தலில் நடுநிலைமையை உறுதிபடுத்துவதற்கு தேர்தல் பரப்புரைக் காலம் முகாமையானதாகும். கட்சி, வேட்பாளர், வாக்காளர் ஆகிய முத்தரப்பினரிடையே கருத்தொற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்குப் போதுமான காலம் தேவைப்படுகின்றது. மிகக் குறுகிய காலத் தேர்தல் பரப்புரையால் இத்தகைய சூழல் அமைவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, தேர்தல் பரப்புரைக்கான காலத்தை 21 நாள்களாக்கிட வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் நோக்கத்தை மக்களிடம் தெரிவிப்பதற்கும் வாக்காளர்கள் நிறைவான விளக்கத்தைப்  பெற்றுச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் நீடித்த கால வரம்பு தேவைப்படுகின்றது.  

1955-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தின்போது இந்நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தலுக்கான பரப்புரை காலம் 42 நாள்களாகும். கழுதைத் தேய்ந்து கட்டெறும்பான கதைபோல கடந்த 12-ஆவது பொதுத்தேர்தலின்போது 8 நாள்களே தேர்தல் பரப்புரைக்குக் கொடுக்கப்பட்டது. தேர்தல் தொடர்பாக ஏற்படும் சிற்சிறு சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகக் குறுகிய கால பரப்புரை கொடுக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறியது. இஃது அறிவிற்கு உகந்த செயலன்று. தேர்தல் சிக்கல்களைக் களைவதற்குரிய வழி இஃதன்று. ஆகவே, இனி நிகழவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரை காலத்தை 21 நாள்களாக்கிட வேண்டும்.     

கோரிக்கை 5 :  நடுநிலைமையான ஊடகப் பயன்பாடு

தேர்தல் விளக்கம், தேர்தல் பரப்புரை போன்றவை வெற்றி பெற்றிட ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேர்தல், வேட்பாளர் தொடர்பான செய்திகளை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் களமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் மலேசிய ஊடகங்கள் நடுநிலைமையாகச் செயல்படுவதில்லை என்னும் கூற்றினை எல்லாரும் அறிவர். நடப்பு அரசு தரப்பினருக்குச் சாதகமாகவே மலேசிய ஊடகங்கள் செயல்படுகின்றன. நடப்பில் உள்ள ஆட்சியாளர்கள் நூற்றுக்கு நூறு விழக்காடு தூய்மையும் ஆற்றலும் கொண்டுள்ளவர்கள் எனவும் இதற்கு மாறாக எதிர்கட்சியாளர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு விழுக்காடு குறைபாடு உடையவர்கள் எனவும் கருத்துப் பரப்புரையாற்றும் கருவிகளாகப் பொது ஊடகங்கள் செயல்படுகின்றன.

இஃது அறம் சார்ந்த செயலன்று. தொலைக்காட்சி, வானொலி, செய்தி நிறுவனம் போன்றவை அனைத்துக் கட்சிகளின் செய்தியினை விரிவாகவும் சமமாகவும் வெளியிட வேண்டும். வேட்பாளர் தொடர்பான செய்திகளைக் கட்சி வேறுபாடு கொள்ளாமல் வெளியிட வேண்டும். ஆளும் கட்சி, எதிர் கட்சி ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் நிறைவான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.