கேமரன் மலை நீர் அணைக்கட்டு நீர் பெருக்கெடுத்தச் சம்பவத்திற்கு அரசாங்கமே காரணம்! -ஜே.சிம்மாதிரி

banjirஅண்மையில் கேமரன் மலை நீர் அணைக்கட்டில், நீர் பெருக்கெடுத்து, அணை திறந்துவிடப்பட்டு, அதனால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த காலங்களில் கேமரன் மலையில் பெரும் அளவிலான காட்டழிப்புக் காரணமாக மழை நீர் விரைந்து அணைக்கட்டிற்கு ஓடிவந்து விடுகிறது. வேட்டப்படாத காடுகள் இருக்குமேயானால், பெய்யும் மழையானது, மண் ஈர்ப்புச் சக்தியால் பூமிக்குள் சென்று விடுகிறது.

ஆனால் தற்போதைய நிலையே வேறு. காடுகள் அழிந்து வருவதால் மழை பெய்தவுடன், மழைநீர் உடனுக்குடன் ஆற்றுக்குள் தஞ்சம் புகுந்து, விரைவாக அணைக்கட்டு ஏரிக்கு வந்துவிடுகிறது, இதனால் அணைக்கட்டில் சேறும், சகதியும், விவசாய நிலங்களின் கழிவுகளும் நிறைந்து விட்டது.

ஏறத்தாழ அணைக்கட்டின் முக்கால்வாசி சகதியும் மணலும் நிறைந்துவிட்டதில் ஆச்சர்யமில்லை. இதனால், ஏரியின் கால் பகுதி ஆழமே நீர் நிரம்பியுள்ளது.

ஏரியில், இந்த சேறும், சகதியும் இல்லாதிருந்தால், ஏரியில் எளிதில் நீர் நிரம்ப வழியில்லை. நீர் மட்டமும் உயர வாய்ப்பில்லை. அணைக்கட்டின் கதவுகளும் திறக்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

அதனால் பல உயிர் சேதங்களும் பெரும் பொருட் சேதங்களும் நிகழ்ந்திருக்காது! இவை யாவற்றிர்க்கும் முறையான திட்டமிடல் இன்மை, முறையான நிர்வாகமின்மை போன்றவைகளே இப்பேரிடர் சம்பவத்துக்கு காரணமாகும்.

அதனால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

-ஜே.சிம்மாதிரி,

பகாங் மாநில ஜ செ க துணைத் தலைவர்