“ஏ”” பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விழா தேவையா?

கி.சீலதாஸ். செம்பருத்தி.காம்.  ஆரம்ப  நிலை,  இடைநிலைப்  பள்ளிகளில்  இறுதியாக   நடத்தப்படும்  தேர்வுகளில் “ஏ”  பெற்ற   upsr - awardமாணவர்களைச்   சிறப்பிப்பதும்,  பணத்தை   பரிசாகக்  கொடுப்பதும்,  அப்படிப்பட்ட   நிகழ்ச்சிகளில்  சமுதாயத் தொண்டர்கள்,  பிரமுகர்கள்,  அரசியல்வாதிகள்  கலந்து  கொண்டு  அவர்களை   புகழ்ந்து  பேசுவதும்;  இந்தச்  செய்திகள்  தமிழ்  நாளிதழ்களில்  பிரசுரமாவதும்  ஒரு  கலாச்சாரமாக   வளர்ந்து  கொண்டிருக்கிறது.  நானும்  தனிப்பட்ட   முறையில்  என்னால்  இயன்ற   பொருள் உதவியைச்  செய்துள்ளேன். “ஏ”  பெற்றவர்களைப்  புகழ்ந்து  பேசியுமிருக்கிறேன்.  இது  முறைதானா  அல்லது  இந்த  முறை   ஒரு   கலாச்சாரமாக  வளர்வதை   ஊக்குவிக்கலாமா  என்பதை   ஆய்ந்து  பார்ப்பதே  இக்கட்டுரையின்   நோக்கம்.

siladass 1 சில  காலமாகவே  “ஏ”  பெற்ற   மாணவர்களைச்  சிறப்புச்  செய்யும்  நிகழ்ச்சிகளைப்  பற்றி   நான் சிந்தித்ததுண்டு.  மேலை  நாட்டுக்காரர்கள்  இப்படிப்பட்ட   நிகழ்ச்சிகளை  நடத்துவதில்லை.  அதற்காக  அங்கே   எல்லா   மாணவர்களும்   சிறப்பான   தரத்தைக்   கொண்டவர்கள்  என்று   சொல்ல முடியாது.  இந்தியாவிலும்   இப்படிப்பட்ட  நிகழ்வுகள்   நடப்பதாக  எந்தத் தகவலும்  இல்லை.  இந்நாட்டில்   வாழும் சீன,  மலாய்  சகோதரர்கள்  இப்படிப்பட்ட   சிறப்பு  நிகழ்ச்சிகளை   நடத்துவதாகக்   கேள்விபட்டதில்லை-ஆர்வங்  கொண்டவர்களாகத்  தெரியவில்லை.  அதற்காகச்   சீன,  மலாய்  மாணவர்கள்   பல   பாடங்களில்   “ஏ”  பெறத்   தவறியதில்லையே.

தேர்வு என்றதும்   மாணவர்களுக்கு   மட்டுமல்ல  பெற்றோர்களுக்கும்  சங்கடமும்,  அச்சமும்,  பீதியும்   ஏற்படுவது   இயல்பு.  ஆங்கிலேய  எழுத்தாளரும்,  திருச்சபை  சமய   குருவானவரும்  சார்லஸ் காளேப்  கோல்ட்டன் (Charles  Caleb  Colton)தேர்வைப்  பற்றி   சொல்லும்போது:

“நன்றாகத்   தயார்  நிலையில்  இருப்பவர்களுக்குக்கூட   தேர்வு  அஞ்சத்தக்கதாக   இருக்கும்.  காரணம்,  விவேகமானவர்  பதிலளிக்க  முடியாத  அளவுக்கு   மிகப்பெரிய   முட்டாள்   அதிகமான   கேள்விகளைக்   கேட்பான்”  என்றார்.

எனவே,  தேர்வுக்குத்  தயார்  செய்யும்  போது  பல  இன்னல்கள், மனச்சஞ்சலம்,  ஐயம், பயம்  ஏற்படுவது  தவிர்க்க  முடியாதவையாகும்.  ஆசிரியர்கள்  தேர்வில்  எப்படிப்பட்ட  அணுகுமுறையைக்  கையாள  வேண்டும்  என்று  சொல்லித்  தருவதும்  வழக்கமாகிவிட்டது.  இப்போது  நாளிதழ்களும்,  மாத,  வார  இதழ்களும்  மாணவர்களின்  நலனில்  அக்கறை  கொண்டு  தேர்வில்  எதிர்பார்க்க  வேண்டிய   வினாக்களைப்  பற்றி  குறிப்பிட்டு  அவற்றை  நன்றாக  அலசிப்  பார்த்து,  மாதிரி  விடைகளைத்  தருகிறார்கள்.  மெச்சத்தக்கச்   செயலே.

“பதினொன்றில்  தேர்வு  என்றால்  அது  மகிழ்வு,  நேர்மை, உய்த்துணர்வு  வளரும்படி  செய்வோம்”,  என்றார்  ஸ்காட்லாந்தைச்  சேர்ந்த  ஆசிரியரும்  கல்விமானுமான  ஏ.எஸ்.நீல் (A.S.NEIL)  என்பவர் .

பிரபல  ஆங்கில  நாவலாசிரியர்  விர்ஜினியா  ஃபூல்வ்(Virginia  Woolf)  தேர்வைப்  பற்றி,  “சாதாரண  மனிதனை   சாதாரண   தினத்தன்று   பரிசோதிக்க  வேண்டும்!”  என்றார்.

பொதுவாகச்   சொல்லவேண்டுமானால்   பள்ளிக்கூடங்களில்  நடத்தப் பெறும்  தேர்வுகளைப்  பற்றி   மேலை  நாட்டவர்களின்  ஒருமித்த   கருத்து  என்னவெனில்,  அவை   மாணவர்களின்   திறமையை  வெளிப்படுத்துவதைக்   காட்டிலும்  தேர்வை  எப்படிச்  சமாளிப்பது  என்பதில்தான்   கவனமும்  அக்கறையும்.  எனவே,  தேர்வு  எனும்  போது  நன்றாகத்   தயார்  செய்து  கொள்.  துணிந்து  வினாக்களுக்கு   விடைகளை  எழுது.  முடிவைப்  பற்றி   கவலைப்படாதே  என்பதாகும்.  தேர்வுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கவில்லை   மேலை  நாட்டுப்  பெற்றோர்கள் என்று   சொல்லவில்லை.  நம்மவர்கள்   காட்டுகின்ற   அளவுக்கு  விஞ்சிய  கவலையையும்,  அச்சத்தையும்   காட்டமாட்டார்கள்.  தேர்வில்  நன்றாக  எழுதினால்  போதும் என்ற   மனப்பக்குவத்தை  அவர்களிடம்  காண   முடிகிறது.  இந்நிலையில்  தங்கள்   பிள்ளைகள்   தேர்வில்  நன்றாக   நன்றாக  எழுதிவிட்டால்   அவர்களுக்கு   மகிழ்வு.  ஆனால்  விழா  எடுக்கமாட்டார்கள்.  இதற்கும்   காரணம்   இருக்கிறது.  தம்  பிள்ளைகள்  மீது   அவர்களுக்கு  இருக்கும்  நம்பிக்கை,  குழந்தைகளுக்கு  இருக்கும்   மன  உறுதி  என்பவனாம்.  அதோடு  வேண்டாத  விழாக்களுக்கும்,  போலி  சிறப்புக்கும்,  பகட்டுக்கும்  அவர்கள்  மரியாதை  காட்டுவதில்லை   என்பதை  விட  அப்படிப்பட்டவை   அவர்களின்  கவனத்தை  ஈர்ப்பதில்லை.

நம்  இனத்தவர்கள்   மட்டும்  ஏன்  விழா  எடுக்கிறார்கள் என்று   சிந்தித்துப்   பார்த்தபோது  திகைப்பூட்டும்  சில  கருத்துக்கள்  மிளிர்ந்தன.  இதில்  நன்மை  இருக்கிறதா?  அல்லது  ஏதாவது கேடுகள்   விளைவிக்கின்றனவா  என்று  நினைக்கவும்  தோன்றுகிறது.

பெற்றோர்கள்,  ஆசிரியர்கள்  ஆகியோரின்  உள்ளக்கிடக்கு   என்னவெனில்   பிள்ளைகள்  எல்லாப்   பாடங்களிலும்  “ஏ”  பெறவேண்டும்  என்பதாகும்.  இது  நியாயமானதே!  அப்படி  “ஏ”  பெற்றால்  சில  பொது அமைப்புக்கள்  சிறப்புச்  செய்யும்,  பரிசு  கிடைக்கும்,  புகழும்  வந்து  சேரும்  என்று  எதிர்பார்ப்பவர்களும்   உண்டு.  பள்ளிகளைடையே,  ஆசிரியர்களிடையே,  பெற்றோர்களிடையே,  மாணவர்களிடையே   கூட  விபரீதமான  போட்டி  மனப்பான்மை  உருவாக,  வளர  காரணமாக   இருப்பதை  காணமுடிகிறது.

ஓர்  ஆரம்பப்  பள்ளிக்கூடத்தில்  நாற்பது  மாணவர்கள்   இறுதித்  தேர்வு   எழுதுகிறார்கள்.  அவர்களில்  ஒருவர்   எல்லாப்   பாடங்களிலும்  “ஏ”  பெறுகிறார்  மற்றும்  இரண்டு,  மூன்று  பேர்  ஒரு  பாடத்தில்  மட்டும்  “ஏ”  பெறுகிறார்கள்.  ஆக  மொத்தத்தில்  நான்கு   மாணவர்கள்  மட்டும்  “ஏ”   பெற்றிருக்கிறார்கள்.  அந்த வட்டாரத்தில்   உள்ள  வட்டாரத்தில்  உள்ள  பத்து  பள்ளிக்கூடங்களில்   உள்ள  ஆறாம்  வகுப்பு   மாணவர்களின்  மொத்தத்  தொகை   நானூறு என்று   வைத்துக்  கொள்வோம்.  இந்த  நானூறு  மாணவர்களும்  பரீட்சையில்  பங்கு   பெற்றதில்  பத்து  பேர்  மட்டும்  “ஏ”  பெறுகிறார்கள்.  இந்தப்  பத்து  மாணவர்களும்  சிறப்புச்   செய்யப்படுவர்.  மற்ற  முன்னூற்று   தொன்னூறு  மாணவர்களின்   நிலை  என்ன?  அவர்களைப்  பற்றி  நாம் சிந்திக்கின்றோமா?  அவர்கள்  தேர்வில்ஏன் “ஏ”  பெற   முடியவில்லை  என்பதற்கான  காரணத்தை   நாம்  சிந்தித்துப்   பார்த்தோமா?  இல்லை!  நல்ல  புள்ளிகளைப்   பெற்ற  மாணவர்களை  மட்டும்   கௌரவிக்கிறோம்.  பெரும்பான்மையான  மாணவர்களின்   பரிதாப   நிலையை   உதாசீனம்  செய்கிறோம்.

மேலே   குறிப்பிட்ட   நானூறு  மாணவர்களில்  பெரும்பான்மையினர்   ஏழைகளாக   இருக்கலாம்.  வசதியான   பெற்றோர்கள் தங்கள்   பிள்ளைகளை  டியூஷனுக்கு   அனுப்புவார்கள்.  அப்படிப்பட்ட  வசதியை  ஏழ்மையில்  துவண்டு   கிடக்கும்  பெற்றோர்கள்  தங்கள்  பிள்ளைகளுக்கு  வழங்க  முடியாது.

சில  குழந்தைகள்  சரியாக   ஒருவேளை  சாப்பிடுவதற்கான   வசதியைக்கூட   பெற்றிருக்க   மாட்டார்கள்.  இதுவும்  ஓர்  அவல   நிலைதான்.  இதை  எல்லாம்  நாம்  சிந்திக்க   மறந்துவிடுகிறோம்,  சிந்தப்பதில்லை.

டியூஷனுக்குப்   போக  வேண்டிய  கட்டாயம்  ஏன்  ஏற்படுகிறது?  பள்ளி   ஆசிரியர்கள்  சரியாகப்  பாடம்  சொல்லிக்   கொடுத்தால்   மாணவர்கள்   டியூஷன்   உதவியைத்   தேட  வேண்டியதில்லையே.  பள்ளிக்கூடங்களில்  போதுமான   கல்வி  அறிவு   கிடைக்கவில்லை  என்ற  காரணத்தினால்   தானே   வசதி   படைத்த   பெற்றோர்கள்  தங்கள்   பிள்ளைகளை   டியூஷனுக்கு   அனுப்புகிறார்கள்.  சாப்பாட்டுக்கே   தாளம்போடும்   குடும்பத்தினர்  எவ்வாறு   இப்படிப்பட்ட   டியூஷன்  செலவைச்  சமாளிப்பர்?  இப்படிப்பட்ட   மாணவர்களின்  கல்வித்  தரத்தை   உயர்த்த  என்ன  செய்யலாம்  என்று   சிந்தித்துச்  செயல்பட்டால்   நல்லது   அல்லவா?  பொது  அமைப்புக்கள்  ஒரு   சிலரை  சிறப்பிப்பதைக்  காட்டிலும்   கல்வியில்  பின்  தங்கியிருக்கும்  எல்லா  மாணவர்களின்   கல்வித்  தரத்தை   உயர்த்த   வழிகண்டால்   அதுவே  மிகச்  சிறந்த   சேவையாகக்  கருதப்பெறும்.

ஸ்பெயின்  மொழியில்  ஒரு  பழமொழியுண்டு.  “வெற்றிப்   பெற்றவனுக்கு   ஆயிரம்  தந்தைகள்,  தோல்வி  கண்டவன்  அனாதை!”  என்பதே   அது.  அதுபோலத்தான்  நம்   மாணவர்களின்  நிலை.

நானூறு  மாணவர்களின்   பத்து   பேர்  மட்டும்  “ஏ”  பெற்றது   முக்கியமல்ல.  அந்த நானூறு   மாணவர்களும்   தேறினார்கள்   என்பதே   முக்கியம்.  மொத்தத்தில்   பத்து  விழுக்காடு   தேர்வு   பெற்று   தொன்னூறு   விழுக்காடு   தோல்வி   கண்டது   என்றால்   ஆசிரியர்களின்   கற்பிக்கும்   முறை   சந்தேகத்தைக்  கிளப்புகிறது.

“ஏ”  பெற்ற   மாணவர்களைச்  சிறப்பிப்பது   நம்முடைய  அறியாமையையும்,  நம்முள்   புதைந்து   கிடக்கும்   பலவீனத்தையும்  வெளிப்படுத்துகிறது  என்றாலும்   தவறில்லை.  நம்மிடம்  அறிவு  இல்லை,  இருக்கும்  அறிவு   போதாது, கற்கும்  திறன்  இல்லாதவர்கள்,  கல்வியில்  பின்  தங்கியவர்கள்   எனவே,  யாராவது  கொஞ்சம்  தலையைத்   தூக்கினால்  போதும்   அதில்   மூழ்கிப்  பெருமிதம்   அடைகிறோம்  என்று   பிறர்   நினைக்கக்   கூடும்.  இப்படிப்பட்ட  நடவடிக்கை   நம்மிடம்  இருக்கும்  குழப்பத்தையும்   வெளிப்படுத்துகிறது   என்றால்   மிகையாகாது.  “ஏ”   பெற்ற  மாணவர்களை  அவர்களின்   பெற்றோர்கள்   சிறப்பிக்கட்டும்.  அது   பொருத்தமானச்   செயல்  எனலாம்.

எல்லா  மானவர்களும்   தரமான கல்வி பெற  நாம்   முயற்சி  செய்ய   வேண்டும்.  படிப்பில்   பலவீனத்தைக்   காட்டும்  மாணவர்களுக்குப்   பிரத்தியேக   வகுப்பு   நடத்த   வேண்டும்.  இதை  நம்  ஆசிரியர்கள்  ஒரு  சவாலாக  ஏற்றுச்   செயல்படுவார்களேயானால்  சமுதாயம் அவர்களை  மெச்சும்.  எதிர்கால  சமுதாயம்   அவர்களுக்கு  நன்றி   செலுத்தும்

சில  ஆண்டுகளுக்கு  முன்பு   வடக்கு  மலாயாவில்   வாழும்  மலாய்க்காரப்  பட்டதாரி  ஒருவர்   மலாய்க்கார   மாணவர்களுக்கு   இலவசமாகப்   பாடம்   சொல்லிக்   கொடுப்பதை  நாளிதழ்கள்  மெச்சி  வெளியிட்டன.  நம்  இனத்திலும்   சில  ஆசிரியர்கள்  இப்படிப்பட்ட  பரந்த  நோக்கத்தைக்  கொண்டு  செயல்படுகிறார்கள்   என்பதைப்   பார்க்கும்போது   மகிழ்ச்சியாக   இருக்கிறது.  இவர்கள்   சிறுபான்மையே.  பெரும்பாலார்  ஆதாயத்திலேயே  குறியாக  இருக்கிறார்கள்  என்பதையும்  நாம்  அறியாதது  அல்லவே!  பொதுவாக  மணவர்களிடம்   காணப்படும்   குறைபாட்டைக்  கண்டுபிடிப்பதில்   ஆசிரியர்கள்  கைதேந்தவர்கள்.  அப்படிப்பட்ட  குறைபாட்டைக்  களைய   ஆசிரியர்கள்   எத்தனிக்க  வேண்டும்.

நம்   மாணவர்   சமுதாயம்  கல்வியைப்  பெற  ஆர்வங்  கொள்ள   வேண்டும்.  பரிசும்,  புகழும்  கிடைக்கும்  என்ற குறுகிய  நோக்கோடு  மாணவர்களின்   ஆர்வத்தை   வளர்க்கக்கூடாது.  அப்படி   வளர்க்கப்படும்   கல்வித்  திறன்   பயனற்றதாகவே   இருக்கும்.  அப்படிப்பட்ட  வழக்கத்தில்   ஊறிப்போன  மாணவர்கள்   பரிசைக்   குறிக்கோளாகக்  கொண்டு   செயல்படுவார்கள்.  அவர்களின்  அறிவு  வளர்ச்சி   மெச்சத்தக்கதாக   இருக்காது.

திறமையானவர்,  திறமையற்றவர்  என்று   மாணவர்களைப்   பிரித்துக்   காண்பதைத்   தவிர்த்து   எல்லா  மாணவர்களையும்   சரிசமமாக   நடத்தினால்  எல்லோருக்கும்   தன்னம்பிக்கை பிறக்கும்.  திறமையானவர்களை   மட்டும்   தேர்ந்தெடுத்துச்   சிறப்பிக்கும்  செயல்,   திறமையற்றவர்கள்  என்று  சொல்லப்படும்   மாணவர்களை  மேலும்   பழிப்பது  போலவும்,  புண்படுத்துவது   போலவும்   இருக்கிறது.  இதைத்   தவிர்க்க  வேண்டியது  நம்   பொறுப்பல்லவா?

பெரும்பான்மையான   மாணவர்கள்  கல்வியில்  நம்பிக்கை  இழப்பார்களேயானால்,  அவர்களுடைய  கவனம்  தீயச்  செயல்களின்  பக்கம்  திரும்பாது  என்று  உறுதியாகச்   சொல்ல முடியாது.  இந்த  ஆபத்தையும்  நாம்  கவனத்தில்  கொண்டு  அவர்களின்   கவனத்தைத்   தீயச்  செயலிலிருந்து   திருப்ப   வேண்டியது   சமுதாயத்தின்   கடமையாகும்.

பின்தங்கிய  சமுதாயம்,  சில்லறை   வெற்றிகளில்   புளகாங்கிதம்  அடைவது   இயல்பு.  அதோடு  புது  வீரர்களைத்   தேடுவதை  நிறுத்திக்   கொள்ளாது.  அதன்  நோக்கமெல்லாம்   பெருமையையும்,  புகழையும்  தேடிக்  கொள்வதே.  காரணம்,  அந்தச்   சமுதாயத்திடம்  அப்படிப்பட்ட  சிறப்பும்,  சிறப்பானவர்களும்   இல்லாததுதான்;  அல்லது  குறைவாகவே  காணப்படலாம்.

தமிழ்ச் சமுதாயம்  பொருளாதாரத்தில்   பின்தங்கிய   சமுதாயமாக   இருப்பினும்  அஃது  இலக்கிய  வளமும்,  வளமான  பண்பாட்டையும்,  வாழ்க்கை  நெறிமுறைகளைக்   கொண்ட  சமுதாயமாகும்.  இந்த  அற்புதமான,  அருமையான,  விலைமதிப்பற்ற  சொத்துக்களுக்கு  நம்   மாணவர்  சமுதாயம்  உரிமையாளர்கள்  என்று  உணர்த்த   வேண்டும்.  அவர்கள்  உணர  வேண்டும்.  அவர்களுக்கு  சிற்றுயிர்  கொண்ட  மகிழ்வும்,  தற்காலிக   வீரர்களும்,  தலைவர்களும்  தேவையில்லை.  தமிழ்   இனத்தின்  சிறப்பை, திறமையை,  அறிவு  வலிமையை  பகட்டுத்தன்மையால்   உணர்த்த   வேண்டிய   அவசியமும்   இல்லை,  கட்டாயமும்  இல்லை.  தமிழ்   மாணவர்   சமுதாயம்  தமக்குள்   ஒளிந்து  இருக்கும்  திறமையை வெளிப்படுத்த   நம்  சமுதாயம்  முன்வர  வேண்டும்,  உதவ   வேண்டும்.

நம்   மாணவர்   சமுதாயம்   தன்மானத்தோடு  நெஞ்சில்   நல்லத்   தூய்மையான   எண்ணத்தையும்,  அப்பழுக்கற்ற  வீரத்தையும்,  திசைமாறாத  நல்ல   உறுதியையும்   கொண்டு  தலை  நிமிர்ந்து வாழ   வேண்டும்,  வாழ  முடியும்.  அறிவுக்கு   என்றும்  மதிப்புண்டு.  விஞ்ஞானத்தின்   மகிமை   பெருகிவிட்ட   காலத்தில்  அறிவுக்குத்  தான்  மதிப்பு.  அதை  நம்  மாணவர்கள்   உணர்ந்தால்  நல்லது.

மகாகவி   பாரதியாரின்   பாடல் ஒன்று  நினைவுக்கு  வருகிறது.  அஃது  இந்தியாவில்  வாழும்   இந்தியர்களுக்கு  உரித்தான  போதிலும்  அவர்  பாட்டில்  இந்திய  சமுதாயம்  எங்கு  வாழ்ந்தாலும்   சுயமரியாதையுடனும்   வாழவேண்டும்,  யாருக்கும்  அடிபணிந்து  போக  வேண்டிய  கீழ்  நிலையை  ஒதுக்கச்   சொல்லுவது   போல்   இருப்பதோடு  உலகத்துக்கு  இந்தியர்கள்   எடுத்துக்காட்டாக   இருக்க   முடியும் என்பதை  வலியுறுத்துவதையும்   உணரலாம்.  இதோ  அந்தப்   பாடல் :

 

ஆடுவோமே – பள்ளுப்  பாடுவோமே

ஆனந்தச்  சுதந்திரம்  அடைந்துவிட்டோமென்று

ஆடுவோமே

எங்கும்  சுதந்திர  மென்பதே  பேச்சு – நாம்

எல்லோரும்  சமமென்ப  துறுதியாச்சு;

சங்குகொண்டே  வெற்றி  யூதுவோமே – இதைத்

தரணிக்கெல்   லாமெடுத்  தோது  வோமே

ஆடுவோமே

.நாமிருக்கு  நாடுநம  தென்பறிந்தோம் – இது

நமக்கே   யுரிமையா  மென்பதறிந்தோம் – இந்தப்

பூமியி  லெவர்க்குமினி   அடிமைசெய்யோம் – பரி

பூரணுக்  கேயடிமை  செய்துவாழ்வோம்

ஆடுவோமே!

இந்தப்   பாடலுக்கு  நாம்  உரியவர்கள்.  அதில்  சொல்லப்படும்   துணிவான  கருத்துக்கள்  நம்மை  உலகுக்கு  வழி   காட்டுகிறது.  அதைத்தான்  நாம்  உணரவேண்டும்,  நம்  மாணவ  சமுதாயத்துக்கு  உணர்த்த   வேண்டும்.